நடிகை சஞ்சனா கல்ராணி தனது கணவருடன் ஹிஜாப் அணிந்து மெக்கா சென்று உம்ரா செய்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நிலையில், சிலர் இதை கேரளா ஸ்டோரியுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு சஞ்சனா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
Advertisment
கன்னட சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்பவர் சஞ்சனா கல்ராணி. தமிழில் ஒரு காதல் செய்வீர் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான நிக்கி கல்ராணி இவரது சகோதரி. இந்த நிலையில் சஞ்சனா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டார். பின்னர் பெங்களூருவை சேர்ந்த மருத்துவரான அஜீஸ் பாஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அஜீஸ் பாஷா - சஞ்சனா கல்ராணி தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சஞ்சனா கல்ராணி தனது கணவர் அஜீஸ் பாஷா மற்றும் குழந்தையுடன் சவுதி அரேபியாவின் மெக்கா நகருக்கு சென்று உம்ரா செய்து உள்ளார். பின்னர் நடிகை சஞ்சனா உம்ரா சென்றுவிட்டு ஹிஜாப் அணிந்தபடி கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
Advertisment
Advertisements
மேலும், மெக்காவுக்கு சென்று உம்ரா செய்த அனுபவத்தையும் உணர்ச்சிபூர்வமாக பேசி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அதில், "எனது குடும்பத்துடன் உம்ரா செய்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஹரம் ஷரீப் எனப்படும் காபா அருகில் மிகவும் உயரமான கட்டிடத்தில் தங்குவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. காபாவை எதிர்நோக்கியபடி 5 வேளை தொழுகையை நிறைவேற்ற எனக்கு பாக்கியம் கிடைத்தது. இதனை என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. மெக்காவில் 4 பகல் 3 இரவுகளை செலவழித்தோம். அங்கு கிடைத்த அனுபவங்கள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும். எனக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமன்றி, உலகம் முழுவதும் துயரத்தில் உள்ளவர்கள், சங்கடத்திலும் மன வேதனையிலும் நாட்களை கழிப்பவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சஞ்சனாவின் புகைப்படங்களைப் பார்த்த சிலர், தி கேரளா ஸ்டோரி படத்துடன் ஒப்பிட்டு விமர்சித்தனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள சஞ்சனா, "நான் இந்து குடும்பத்தில் பிறந்தேன். கிறிஸ்துவ பள்ளியில் பயின்றேன். 12 ஆண்டுகள் எனது வாழ்க்கை அங்கேயே கழிந்தது. அதன் பிறகு இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக எந்த வெறுப்புணர்வையும் ஏற்படுத்த நான் விரும்பவில்லை. அனைத்து மதங்களையும் நான் சமமாக மதிக்கிறேன். மதசார்பற்ற நபராக இருக்கும் நான், மதசார்பின்மை இல்லாதவர்களால் எடைபோடப்படுவதை விரும்பவில்லை. யாருக்கும் என்னை பற்றி எடைபோட உரிமை இல்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு நான் மிகுந்த மதிப்பளிக்கிறேன். இந்த ஆன்மீக வாழ்வில் நான் அனைத்தையும் நேர்மறையாக உணர்கிறேன். இதை அனைவருக்கும் பரப்ப விரும்புகிறேன்," என்று குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil