எடப்பாடியிடம் பணிந்தது நினைவு இல்லையா? எங்கிருந்து வந்தது இந்த தைரியம் விஜய்?

Actor Vijay Political Speech: விஜய் வெறுமனே சினிமா பரபரப்புக்காக பேசினாரா? அல்லது, நிஜமாகவே அரசியலுக்கு முன்னோட்டம் கொடுக்கிறாரா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வெளிவர இருக்கும் படம் சர்க்கார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று (அக்டோபர் 2) நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஜய், அரசியல் பேசி சலசலப்பைக் கிளப்பினார்.

‘எல்லோரும் தேர்தலில் ஜெயித்து சர்க்கார் அமைப்பாங்க. நாம சர்க்கார் அமைச்சுட்டு, தேர்தலில் நிற்போம்’ என்றவர், ‘முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்’ என்றும் கூறினார். இது தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நோக்கிய வார்த்தைகளா? என்கிற விவாதம் நடக்கிறது. டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்செல்வம், ‘எடப்பாடியை நோக்கியே விஜய் அப்படி பேசியிருப்பதாக’ கொளுத்திப் போட்டிருக்கிறார்.

Read More: ‘உம்னு, கம்னு, ஜம்னு’ விஜய் பேசிய அந்த பன்ச் டயலாக் தல ஃபேன் எழுதியதாம்… யாரு பாருங்க!!!

விஜய், அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்துவது புதிதல்ல. எனினும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால் ஆகியோர் அரசியல் அறிவிப்பை வெளியிட்டவுடன் அவர்களின் தாக்கம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொண்டு நேரடி அரசியலில் இறங்கலாம் என்று தற்காலிகமாக ஒத்திவைத்திருந்தார்.

எனினும் இப்போதைய சூழலில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி சற்றே விஜயை அசைத்து பார்ப்பதாக திரை வட்டாரங்களில் கூறுகிறார்கள். எனவேதான் விஜய்-க்கு அரசியல் பேசியாக வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருப்பதாக சொல்கிறார்கள்.

மெர்சல் ரிலீஸுக்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் தேடிச் சென்ற விஜய், தற்போது கலாநிதிமாறனின் படத்தில் ஆளும் தரப்பை எதிர்க்கும் தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பதும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர் கலாநிதி என்னும் அரசியலில் நேரடியாக பங்கு பெறாத பட அதிபரை தர்மசங்கடப்படுத்திவிட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இன்னொரு தரப்பினரோ, ‘சன்நெட்வொர்க் பலத்தை வைத்து தன்னை நிலைநிறுத்த ஆளும் தரப்பை விஜய் எதிர்ப்பதாக’ ஆரூடம் கூறுகின்றனர். விஜய் வெறுமனே சினிமா பரபரப்புக்காக அரசியல் பேசினாரா? அல்லது, நிஜமாகவே அரசியலுக்கு முன்னோட்டம் கொடுக்கிறாரா? என்பது போகப் போக தெரியும்.

திராவிட ஜீவா

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close