Vijay Sethupathi’s sindhubaadh Tamil Movie Review: பல பிரச்னைகளுக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதியின் ’சிந்துபாத்’ திரைப்படம் நேற்று வெளியாகியது. பட பிரச்னையை தீர்ப்பதற்காக விஜய் சேதுபதியும், யுவன் ஷங்கர் ராஜாவும் பண உதவி செய்த நிலையில், நேற்று மாலையே ஆன்லைனில் ‘லீக்’ செய்தது தமிழ் ராக்கர்ஸ்.
Sindhubaadh Leaked in Tamilrockers: தமிழ்ராக்கர்ஸில் ‘லீக்’கான சிந்துபாத்
சிந்துபாத் திரைப்படத்தில் திருவாக விஜய் சேதுபதியும், வெண்பாவாக அஞ்சலியும் நடித்திருக்கிறார்கள். கூடவே சேதுபதியின் மகன் சூர்யாவும். பார்வையாளர்கள் ஒரே உணர்வை அனுபவிக்கும் நிலை எப்போது மாறும் எனத் தெரியவில்லை. நம்பிக்கைக்குரிய, யதார்த்தமான புள்ளியில் தொடங்கும் படத்தில் சில அபத்தமான விஷயங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது நமக்குப் புரியவில்லை. உதாரணமாக திரு ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்திற்கு தாவுவார். அவர், கீழே விழமாட்டார், எங்கும் பின் வாங்கவும் மாட்டார். சூப்பர் ஹீரோ போல தாவி குதித்து தனது இலக்கை அடைவார். விஜய் சூப்பர் ஹீரோவாக நடித்தால், அது நமக்கு உறுத்தலாக இருக்காது. காரணம் அவரது ‘சண்டைக் காட்சிகள்’ நமக்கு நன்றாகப் பழகியிருக்கின்றன. ஆனால் விஜய்சேதுபதிக்கு அப்படியல்ல.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகியப் படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் அருண்குமார் ஆகியோரின் மூன்றாவது படம் தான் சிந்துபாத். மனித உறவுகள் மற்றும் நகைச்சுவை இரண்டையும் கையாள்வதில் அருணின் உழைப்பு அதில் தெரியும். சிந்துபாத்தின் முதல் இருபது நிமிடங்கள் ரசிக்கும்படி இருந்தன, ஆனால் படத்தின் மீதமுள்ள கதை அதற்கு இடம் தரவில்லை. இரண்டாவது பாதியில் தோலை (ஸ்கின்) கடத்துவதும், அதை வைத்து பிஸினஸ் செய்வதையும் பற்றி சிந்துபாத் பேசுகிறது. இந்தக் கதையை சிறப்பாக பிரதிபலிக்கும் விதத்தில் திரைக்கதை அமையவில்லை. படத்தின் அனைத்து சுவாரஸ்யமான காட்சிகளும் இடைவெளிக்கு முந்தைய பகுதிகளைச் சேர்ந்தவை, அவைகள் தான் அடுத்த பாதியைப் பார்க்கும் ஆர்வத்தை நம்மிடம் தூண்டுகின்றன.
திரு - வெண்பாவுக்கு இடையே வரும் காதல் காட்சிகள் ரசிக்க செய்கின்றன. குறிப்பாக எதிர்பாராத விதத்தில் விமான நிலையத்தில் வெண்பாவுக்கு தாலி கட்டும் திரு ஈர்க்கிறார். அஞ்சலியின் முக பாவனைகளுக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம். சில இடங்களில், விஜய் சேதுபதியை விட அதிக ஸ்கோர் செய்கிறார்.
வெண்பா கடத்தப்படுகிறாள், திரு அவளைக் காப்பாற்றுகிறான். வேலயுதம் பட க்ளைமேக்ஸில் விஜய் செய்ததை விஜய் சேதுபதி தெளிவற்ற முறையில் செய்கிறார். ஆண்டவன் கட்டளை, விக்ரம் வேதா, சூப்பர் டீலக்ஸ், 96 என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை மகிழ்வித்த ஒருவர், இப்படியான படங்களில் நடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒரு சில காட்சிகளில் இருக்கும் அந்த ஈர்ப்பு படம் முழுவதும் இருக்கும்படி செய்திருந்தால், சிந்துபாத் மிகச்சிறந்த படமாக உருவாகியிருக்கும். ’ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ பாடல் பின்னணியில் ஒலிக்கும் போது மனைவியைத் தேடுவதும், மனைவிக்காக பாலியல் தொழிலாளியில் காலில் விழும்போதும் நடிப்பில் அசத்துகிறார் விஜய்சேதுபதி. ஆனால் இவற்றால் மட்டும் சிந்துபாத்தை தூக்கி நிறுத்த முடியாது.
தந்தை-மகன் இருவரும் திரையில் கலக்குகிறார்கள். உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் கூட, உண்மையிலேயே வேடிக்கையான தருணங்களை நமக்கு தந்திருக்கிறார்கள். கதாபாத்திரங்களுக்குள் ரசிகர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள அருண்குமார் இடம் கொடுத்திருப்பது கொஞ்சம் ஆறுதல்!