அரிய வேட்டையில் கிடைத்த பொக்கிஷம்... ஷங்கர் மகாதேவன் அதிரடி முடிவு

கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞரின் பாடலில் மெய் சிலிர்த்த பாடகர் ஷங்கர் மகாதேவன் நேற்று அந்த இளைஞரை தொடர்புக்கொண்டு பேசினார்.

பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவன் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் “உன்னை காணாத” பாடலைப் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தார். இந்த வீடியோவை வெளியிடும்போதே அந்த இளைஞரைத் தீவிரமாக தேடும் வேட்டையில் இறங்கினார் ஷங்கர் மகாதேவன். அதில் “உழைப்புக்குக் கிடைத்த பரிசு தான் இந்த இளைஞர் பாடும் பாட்டு. யாராவது இவரைக் கண்டுபிடிக்க உதவுங்கள். இவருடன் இணைந்து பாட ஆவலோடு இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

தற்போது சமூக வலைத்தளத்தில் பலரின் உதவியுடன் கேரள இளைஞரின் அடையாளத்தைக் கண்டறிந்தார் பாடகர் சங்கர் மகாதேவன். வீடியோவில் பாடிய இளைஞர் கேரளாவை சேர்ந்த ராகேஷ் உன்னி என்றும், அவர் ஷங்கர் மகாதேவனின் தீவிர ரசிகர் என்றும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரைத் தொலைப்பேசியில் அழைத்துப் பேசியுள்ளார் ஷங்கர் மகாதேவன். அப்போது இளைஞரின் பாடல் திறமையை புகழந்து பாராட்டியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு பகிர்ந்துள்ளார்.

ஷங்கர் மகாதேவன் டுவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ பதிவில் பேசியிருக்கிறார் ராகேஷ் உன்னி. அதில், “நான் ராகேஷ் உன்னி. நான் இன்று மிகவும் சந்தோஷமாக உள்ளேன். எனது குருவாக கருதும் ஷங்கர் மகாதேவன் சார் என்னை தொடர்புகொண்டு பேசினார். நான் நன்றாகப் பாடுவதாக சொன்னார். என்னைப் பாராட்டினார். இது எனக்கு அதிக சந்தோஷத்தை அளிக்கிறது. இதற்குக் காரணமாக இருந்த எனது ஃபேஸ்புக் நண்பர்கள் மற்றும் மக்கள் அனைவருக்கும் எனது நன்றி.” என்று பேசினார். மேலும் ஷங்கர் மகாதேவன் சாருக்காக அவருடைய பாடல் பாட விரும்புவதாகக் கூறிய மகேஷ், அன்னியம் படத்திலிருந்து “குமாரி” பாடலை அசத்தலாகப் பாடினார்.

பாடகர் ஷங்கர் மகாதேவன் அவர்களை வியப்பில் ஆழ்த்திய விவசாயி ராகேஷ் பாடல் வீடியோவை பார்க்க இந்த லிங்க் கிளிக் செய்யவும்

ஷங்கர் மகாதேவன் அவர்கள் பகிர்ந்துள்ள இந்தப் பதிவில், “விவசாயி ராகேஷ் உன்னியுடன் பேச இணையத்தளத்தில் உதவியவர்களுக்கு நன்றி. அவருடன் பேசினேன் மற்றும் இந்தப் பேச்சு வார்த்தைக்குப் பின்பு அடுத்தகட்ட முடிவை நிகழ்த்தும் வேலைகளில் இறங்கியுள்ளேன்” என்று கூறியிருந்தார். எனவே விரைவில் ஷங்கர் மகாதேவனுடன் இணைந்து ராகேஷ் உன்னி பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close