Sonu Sood helps migrants : Will continue help till the last one reunites with family says Sonu
Sonu Sood helps migrants : “அடியேய் அருந்ததி” இந்த குரலை நாம் எப்பவும் மறக்கமாட்டோம், அந்த குரலுக்கேற்ற ஒப்பனையுடன் அகோரியாய் இருந்த சோனு சூட்டையும் மறக்க மாட்டோம். சந்திரமுகி, அருந்ததி, ஒஸ்தி, தேவி போன்ற படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தவர் நடிகர் சோனுசூட். ஆனால் அவர் நிஜ வாழ்க்கையில் ஹீரோ தான்.
கொரோனா நோய் தொற்றால் நாடு முழுவதும் இரண்டு மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்ற புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப இயலாமல் மிகவும் வேதனை அடைந்து வந்தனர். சிலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு வெறுங்காலிலேயே நடந்து சென்ற அவலமும் ஏற்பட்டது. சொந்த ஊர் செல்வதற்கு முன்பே வலியில் மயங்கி விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது.
இந்நிலையில் நல் உள்ளம் படைத்த வெகுசிலரோ, தன் சக குடிமகனுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். ஜூஹூ பகுதியில் இருக்கும் தன்னுடைய நட்சத்திர தங்கும் விடுதியை, புலம் பெயர் தொழிலாளர்கள் தங்குவதற்காக கொடுத்து உதவினார் சோனு. தற்போது உத்திர பிரதேசத்தில் சிக்கியுள்ள புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பேருந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறார்.
உ.பி. அரசிடம் அனுமதி வாங்கிய அவர், ”புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் வீடுகளுக்கு செல்லாமல் அலைந்து திரிவது மனவேதனையை அளிக்கிறது. என்னுடைய கடைசி உடமைகளையும் கூட விற்று அவர்களுக்கு உதவுவேன்” என்று கூறியுள்ளார். மேலும் புலம் பெயர் தொழிலாளர்களை தானே முன்னின்று பேருந்தில் வழி அனுப்பி வைக்கிறார் சோனு சூட்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
10 நாட்களுக்கு முன்பு, கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ், 44 நாட்களாக தன்னுடைய பண்ணை வீட்டில் தங்கியிருந்த 31 வெளி மாநில தொழிலாளர்களை பத்திரமாக அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். சக குடிமகனாக, இந்த இக்கட்டான சூழலில் அவர்களை நான் கைவிட்டுவிடவிலை என்று உருக்கமாக பேசியிருந்தார் அவர் என்பது குறிப்பிடத்தகக்து.