Soorarai Pottru Review Rating : ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனைவரையும் விமானத்தில் பயணிக்க வைக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட விமான சேவை நிறுவன அதிபரின் கதை தான் 'சூரரைப் போற்று'.
’சூரரை போற்று சொல்லப்பட வேண்டிய கதை’ – மனம் திறந்த சூர்யா!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுமாறன் ராஜாங்கம் (சூர்யா). அவரது அப்பா ஆறு விரல் வாத்தியார் (பூ ராமு) மின்சார வசதி உள்ளிட்ட கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை மனு எழுதிப் போட்டு நிறைவேற்ற உதவுபவர். ஆனால் அவரின் அஹிம்சா வழியால் சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த முடியவில்லை. ஆனால், கள போராட்டத்தால் அதிர்வலையை ஏற்படுத்துகிறார் அவரின் மகன் சூர்யா. இது அப்பாவுக்குப் பிடிக்காமல் போகிறது. இதனால் மோதல் வலுக்க, சூர்யா தேசிய பாதுகாப்பு அகாடமியில் விமானப் படை அதிகாரியாகத் தேர்வாகிச் செல்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வுபெற்று சொந்த ஊர் திரும்புகிறார்.
தன்னைப் போன்று இருக்கும் ஏழைகள், உழைக்கும் தொழிலாளர்கள் என பேதமின்றி அனைவரையும் விமானத்தில் பயணிக்க வைக்க வேண்டும் என விரும்புகிறார் நெடுமாறன். இதற்காக விமான சேவை நிறுவன அதிபரிடம் உதவி கேட்கிறார். அவரோ உதாசீனப்படுத்துகிறார். மத்திய அரசு அலுவலகங்கள், ஏவியேஷன் அகாடமி என எல்லா இடங்களிலும் அலைக்கழிக்கப்படுகிறார் சூர்யா. லைசென்ஸ் சிக்கல், பணக்கார விமான சேவை நிறுவன அதிபர்களின் சூழ்ச்சி, நம்பிக்கைத் துரோகம், பொருளாதாரச் சிக்கல், குடும்ப உறவில் விரிசல், கடன் பிரச்சினை என அடுத்தடுத்து அதிகமான நெருக்கடிகளைச் சந்திக்கிறார். இவற்றையெல்லாம் கடந்து, சூர்யாவின் கனவு எப்படி நனவானது? ஏழை மக்களுக்கு மிக மிகக் குறைந்த விலையில் விமானப் பயணம் எப்படிச் சாத்தியமானது என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவியும், அவர் எழுதிய 'சிம்பிள் ஃப்ளை' நூலை அடிப்படையாகக் கொண்டும் 'சூரரைப் போற்று' படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. படத்தில் சூர்யாவின் நடிப்பை பாராட்டிக் கொண்டே இருக்கலாம். தன் தந்தை மரண தருவாயில் இருக்க, அவரைப் பார்க்க பணம் இல்லாமல் பயணம் செய்ய முடியாமல் அவர் கெஞ்சும் இடம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கிறது.
அபர்ணா பாலமுரளி, தனது கதாபாத்திரத்தின் கனம் உணர்ந்து அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். திருமணத்துக்குப் போடும் கண்டிஷன்கள், சூர்யா உடனான உரசலுக்குப் பிறகான நடவடிக்கை, ரூ.16 கோடி டீலை சூர்யா புறக்கணித்ததற்கான ரியாக்ஷன் என பக்குவமான நடிப்பைக் கொடுத்துள்ளார். குறிப்பாக அபர்ணாவின் கண்கள், அவரின் கதாபாத்திரத் தன்மைக்கு பெரிய பிளஸ்.
ஒருவரின் பயோகிராஃபியை அனைவரும் ரசிக்கும்படி குறிப்பாக இன்றைய இளைஞர்களை ஊக்குவிக்கும் திரைக்கதையோடு உருவாக்கி அப்ளாஸ்களை அள்ளுகிறார் சுதா. காளி வெங்கட், கருணாஸ், ஊர்வசி, மோகன்பாபு, சூர்யாவின் அப்பவாக வருபவர் என அனைவருமே நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.
Soorarai Pottru Review Live : கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சூர்யா – சூரரைப் போற்று விமர்சனம்
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை, படத்துக்கு இன்னும் வலு சேர்க்கிறது. சூர்யாவின் நடிப்பு, சுதாவின் திரைக்கதை, எளிய மக்களுக்கான வசனங்கள் என அனைத்தும் கிளாஸாக இருக்கிறது. சில செயற்கையான சினிமா தனங்களை தவிர்த்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் ஒரு மிகப் பெரிய நடிகர் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட காரணமாக, கதை மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை மனதார பாராட்டலாம். தியேட்டரில் வெளியாகியிருந்தால், சூர்யா ரசிகர்களுக்கு சூரரைப் போற்று சிறந்த தீபாவளி ட்ரீட்டாக இருந்திருக்கும்!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.