ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், படம் தற்போது எப்படி இருக்கிறது? என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2002 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் பாபா. மனீஷா கொய்ராலா, கவுண்டமணி, நம்பியார், சுஜாதா உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதியிருந்தார். இதுதான் அவர் கடைசியாக திரைக்கதை எழுதிய படமும் கூட.
இதையும் படியுங்கள்: சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த விஜய் : யோகிபாபு வெளியிட்ட முக்கிய பதிவு
அரசியலும், ஆன்மீகமும் கலந்து பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில், வெளியான திரைப்படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்த முடியாமல் தோல்வியடைந்தது. இருப்பினும் இந்தப் படத்தில் ரஜினி பேசிய அரசியல் வசனங்கள் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்தநிலையில், பாபா திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சில மாற்றங்களுடன் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அப்போது எந்த அளவுக்கு வரவேற்பு அளித்தார்களோ, அதே அளவுக்கு ரஜினி ரசிகர்கள் இப்போதும் வரவேற்பு அளித்து வருகிறார்கள். திரையில் ரஜினியை பார்ப்பதற்காகவே ஒரு பெருங்கூட்டம் திரையரங்கிற்கு வந்துள்ளது. திரையில் அவர் அடிக்கும் பன்ச் டயலாக்குகளுக்கு விசில் பறக்கிறது. வெகு நாட்களுக்குப் பிறகு கவுண்டமணியின் நடிப்பை திரையில் பார்க்க முடிகிறது. இந்த தலைமுறை ரசிகர்கள் கவுண்டமணியின் கவுண்டர்களை திரையில் காண இந்த ரீரிலீஸ் வாய்ப்பளிக்கிறது.
2002 பாபாவில் 7 வரங்களுக்கு பதிலாக புதிய பாபாவில் 5 வரங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் வசனங்கள் அப்படியே உள்ளது.
2002ஆம் ஆண்டு வெளிவந்த பாபா படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் மக்களிடம் செல்வதா அல்லது பாபாவிடம் செல்வதா என்று பாபாவை சந்தித்து ரஜினி ஆலோசனை செய்வார். அப்போது பாபா கூறிய அறிவுரையை ஏற்று ரஜினிகாந்த் மக்களிடம் செல்வது போல் சற்று அரசியல் கலந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த கிளைமாக்ஸ் காட்சியில் ‘உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்’ என்ற பாடல் வரிகள் வந்தபோது திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர்.ஆனால், இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ள பாபா படத்தில் அதை மொத்தமாக தூக்கிவிட்டார்கள்.
அதற்கு பதிலாக, மீண்டும் உன்னுடைய தாய் வயிற்றில் மறுஜென்மத்தில் பிறந்து உன் தாயின் அணைத்து ஆசைகளையும் நிறைவேற்று, அதன்பின் நானே உன்னை அழைத்து வருகிறேன் என்று ரஜினியிடம் பாபா கூறுகிறார். அதன்படி ரஜினி மக்களோடு மக்களாக கலந்து விடுகிறார். ஒட்டுமொத்தமாக பார்க்கையில், இந்த ரீரிலீஸ் ரஜினி ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil