சூப்பர் ஸ்டார் பட்டம் சர்ச்சையின் தொடர்ச்சியாக நடிகர் ரஜினிகாந்தை வம்பு இழுக்கும் வகையில் நடிகர் விஜய் ரசிகர்கள் மதுரையில் ஒட்டி உள்ள போஸ்டர் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில், நடிகர் சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறி சர்ச்சையை தொடங்கிவைத்தார். சரத்குமாரின் பேச்சுக்கு தளபதி விஜய்யின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும், ரஜினிகாந்த் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் திரைப்பட விமர்சகர் ஒருவரும் ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விஜய் ரசிகர்களும், ரஜினிகாந்த் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: அமெரிக்காவில் ரஜினி அலை: பிரிமியருக்கு முன்பே மில்லியன் டாலர் வசூல் செய்த ஜெயிலர்
இந்த வகையில், ஆறு மாதத்திற்கு மேலாக ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே நடந்து வரும் இந்த சண்டையை தூண்டும் வகையில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ஹூக்கும் பாடலில் ’பேர தூக்க நாலு பேரு... அத்தனை பட்டத்தை பறிக்க நூறு பேரு... குட்டி செவுத்த எட்டி பார்த்தா... உசிரு கொடுக்க கோடி பேரு’ என்ற வரிகள் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில்,காக்கா - கழுகு கதையை சொல்லி ரஜினிகாந்த் மேலும் சர்ச்சையை கிளப்பினார். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு லியோ இசைவெளியீட்டு விழாவில் விஜய் நிச்சயம் பதிலடி கொடுப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய் ரசிகர்கள் ரஜினியை வம்பு இழுக்கும் வகையில், மதுரையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அவற்றில், 'என்னுடைய உச்சம்... உனக்கு ஏன் அச்சம்' என்ற வாசகங்களுடன் விஜய் மற்றும் ரஜினியின் புகைப்படங்களுடன் போஸ்டரை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் போஸ்டர்களை ரஜினி ரசிகர்கள் கிழித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil