Advertisment
Presenting Partner
Desktop GIF

சுஷாந்த் மரணம் : புறக்கணிக்கப்படும் திறமை! வாரிசு நடிகர்களால் திணறும் B-டவுன்!

எப்போதுமே சமூக வலைதளங்களில் படு பிசியாக இருக்கும், பாலிவுட்டின் ரியல் டான் அமிதாப் பச்சன் இந்த நிமிடம் வரை சுஷாந்தின் மறைவிற்கு ஒரு இரங்கல் செய்தி கூட வெளியிடவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sushant Singh Rajput suicide Why Karan Johar and Alia Bhatt get trolled

Sushant Singh Rajput suicide Why Karan Johar and Alia Bhatt get trolled

இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் குறித்து நமக்கு அவ்வளவு தெரியவில்லை என்றாலும் கூட சுஷாந்த் என்பவரை மறக்க நமக்கு இன்னும் வெகு வருடங்கள் ஆகும். தோனியின் வாழ்க்கை வரலாற்றில் தோனியாகவே வாழ்ந்தவர் சுஷாந்த்.  சுஷாந்தினை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை கூறிக் கொள்வோம். இந்த இழப்பில் இருந்து விரைவில் அவர்கள் மீண்டு வர வேண்டும்.

Advertisment

மேலும் படிக்க : ‘அனைவரும் உங்களை என்னில் தேடுவார்கள்’ – தோனிக்கே நிலைமையை புரிய வைத்த சுஷாந்த் சிங்

ஆரம்ப காலம் முதலே பெரும் இன்னல்களையும் பிரச்சனைகளையும் தடைகளையும் தாண்டி ஒரு மனிதன் அடையும் வெற்றி என்பது அவனை மகிழ்விப்பதற்கானது மட்டுமல்ல. இத்தனை ஆண்டுகளாக தான் பெற்ற அவமானங்கள், துன்பங்கள், துயர்களுக்கு பதிலாய் அந்த  நெஞ்சில் ஏந்தி பொக்கிஷமாய் பாதுகாத்து கொள்ள ஒரு வெற்றி தேவையாய் இருக்கிறது.

சுஷாந்த் மற்ற வாரிசு நடிகர்கள் போன்று, கான், கபூர், சோப்ரா, சின்ஹா குடும்பங்களில் இருந்து வந்தவர் இல்லை. அதனால் தான் அவர் இந்த இடத்தை அடைய இத்தனை வருடங்கள் தேவைப்பட்டது. ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய சுஷாந்த் “2005ம் ஆண்டு இதே விருது வழங்கும் மேடையில் நான் நடன குழு உறுப்பினராக இருந்து பின்வரிசையில் நின்று நடனமாடினேன். 2013ம் ஆண்டு என்னை ஒரு கலைஞனாக மதித்து எனக்கு இதே மேடையில் நடனமாட  வாய்ப்பு வழங்கப்பட்டது. 2017ம் ஆண்டில் இந்த விருதினை பெறுவதற்காக பரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றேன். இது சொல்வதற்கு கொஞ்சம் ”வொர்த்தான” ஸ்டோரி தான்” என்று தன்னுடைய வாழ்க்கையை பற்றி பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ட்ரோல் ஆகும் வாரிசு நட்சத்திரங்கள்

கங்கனா ரானவத் ஏற்கனவே, புதுமுகங்களாக பாலிவுட்டிற்கு வரும் வெளி மாநிலத்தை சேர்ந்த நபர்கள் எத்தனை துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் என்று தொடர்ந்து பேசி வருகிறார். வாரிசு குடும்பங்களில் பிறக்கும் நட்சத்திரங்கள் பலரும் நாங்கள் படும் கஷ்டங்களில் கொஞ்சம் கூட பட்டிருப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை என்று கூறியுள்ளார். பாலிவுட்டில் அடிக்கடி பேசப்படும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்திருப்பது கரன் ஜோஹரின் காஃபி வித் கரன். எந்த ஒரு கலைஞனுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக இந்த நிகழ்வு அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புவது உண்டு. ஆனால் இங்கும் கூட வாரிசு நட்சத்திரங்களின் வரவுகள் தான் அதிகம். சுஷாந்த் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் ஆலியா பாட் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது சுஷாந்த் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, “யார் அவர்? நாடகங்களில் நடித்து, தற்போது படத்தில் நடிக்க முயற்சி செய்கிறாரே அவரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது சமூக வலைதளங்களில் அதன் வீடியோ க்ளிப்கள் தொடர்ந்து நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது. வாரிசு நட்சத்திரங்களுக்கு திறமைகள் மிகவும் குறைவு தான். தன்னுடைய அப்பா, மாமா, குடும்பப் பெயர் என்ற பின்புலம் அவர்களை இந்த  பி-டவுனில் வாழ வைக்கிறது. ஆனால் திறமை மிக்க நூற்றுக் கணக்கானோர் இந்த திக்கற்ற சந்தில் அடையாளம் காணப்படமாட்டோமா என்று ஏங்கியே இறந்துவிடுகிறார்கள் என்று கூறியுள்ளனர்.

திணறும் வெளியுலக நபர்கள்

2008ம் ஆண்டு வெளிவந்த ஃபேஷன் படத்திற்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கங்கனா ரானவத்திற்கு கிடைத்தது. இருப்பினும் காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் அவர் பங்கேற 9 வருடங்கள் ஆனது என்பது தான் உண்மை. ரங்கூன் திரைப்படத்தின் ப்ரோமோவிற்காக செய்ஃப் அலி கான், ஷாகித் கபூர் ஆகியோருடன் பங்கேற்ற கங்கனா, கரன் ஜோகரை “என்னுடைய வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படுமானால் நீங்கள் அதில் வாரிசு நடிகர்களை உருவாக்கும் நபராக நடிப்பீர்கள்” என்று குறிப்பிட்டார். அதன் பின்னர் லண்டன் சென்ற கரன் “கங்கனாவிற்கு பாலிவுட் மோசமானதாக தெரிந்தால், இங்கிருந்து போய்விடலாம்” என்று கருத்தரங்கு ஒன்றில் கூறினார். அன்றில் இருந்து இந்த நாள் வரை வாரிசு நடிகர்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து வெளி புறத்தில் இருந்து வரும் ஒவ்வொரு நடிகர், நடிகையும் முன்வைக்கின்றனர்.

இதே வாதத்தை சுஷாந்த்தும் முன் வைத்திருக்கிறார். பேட்டி ஒன்றில் “இந்த பாலிவுட் நட்சத்திரங்கள் என்னை அவர்களின் குடும்ப உறுப்பினர்களாகவே பார்க்கவில்லை. அவர்களின் பார்ட்டிகள் எதற்கும் என்னை ஒரு போதும் அழைத்ததே இல்லை” என்றும் கூறியுள்ளார்.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நகைச்சுவை நடிகர் விர் தாஸ், இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போது ”காஃபி வித் கரன் செட்டில் இருக்கின்றேன். இங்கு நிறைய “பிங்க்” இருக்கிறது. எனவே தாப்ஸி இங்கு வந்து நடிக்கலாம்” என்று கூறியுள்ளார். நகைச்சுவையாக அது பார்க்கப்பட்ட போதும் கூட, தாப்ஸி தன் தரப்பில் இருந்து சரியான பதிலை அதற்கு கூறியிருந்தார். காஃபி வித் கரன் நிகழ்வில் பங்கேற்கும் தகுதி இன்னும் எனக்கு வரவில்லை என்று பதில் கூறியிருந்தார்.

பிங்க், முல்க், மன்மர்ஜியான், பத்லா, கேம் ஓவர் என தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் ஒரு வெற்றி பெரும் நடிகையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டாலும் பாலிவுட் குடும்ப வாரிசுகள் மத்தியில் இவர்களின் திறமைகள் புறக்கப்படுகிறது என்பதை அப்பட்டமாக அவர் பதிவு செய்தார்.

இங்கு யாருமே உன் நண்பனில்லை

சுஷாந்தின் மரணம் குறித்து அவருடைய சிகை அலங்கார கலைஞர் சப்னா பவானி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “சுஷாந்த் கடந்த சில வருடங்களாக மிகவும் மோசமான சூழலில் இருந்தார் என்பதில் ரகசியங்கள் ஏதுமே கிடையாது. இந்த துறையில் இருக்கும் யாருமே அவருக்கு தேவையான உதவியை செய்து அவருடன் துணையாக நிற்கவில்லை. ஆனால் இன்று ட்வீட் பதிவிடுவது ஆழ்ந்த எண்ணங்களற்ற போக்கையே காட்டூகிறது. இங்கு யாரும் உன் நண்பனில்லை” என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.

எந்த கலைஞனுக்கும் அங்கீகாரம் என்பது எத்தனை முக்கியம் என்பதை பாலிவுட்டில், சினிமா பின்புலம் ஏதும் இல்லாத நடிகர்கள், நடிகைகள் நன்றாக உண்ர்வார்கள். அவர்கள் அனைவருக்குமே சுஷாந்தின் மரணம் பெரும் வேதனையாகவும் வலியாகவும் தான் இருக்கும். விவாதங்கள் உருவாகும் போது, அனைவருக்கும் சரியான அங்கீகாரம் கிடைக்கும் போது, நாளை சுஷாந்த் போன்று பலர் மோசமான முடிவை எடுக்க மாட்டார்கள் என்பது உண்மை. எப்போதுமே, ஆன்லைனில், சமூக வலைதளங்களில் படு பிசியாக இருக்கும், பாலிவுட்டின் ரியல் டான் அமிதாப் பச்சன் இந்த நிமிடம் வரை சுஷாந்தின் மறைவிற்கு ஒரு இரங்கல் செய்தி கூட வெளியிடவில்லை என்பதை யாராவது கவனித்தீர்களா?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sushant Singh Rajput Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment