உலகம் முழுவதும் தற்போதைய பெரும் பிரச்னையாக கொரோனா வைரஸ் உள்ளது. சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை யாரையும் இது விட்டு வைக்கவில்லை. கொரோனாவின் கோர தாண்டவத்தைக் கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.
ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நடிகர் கைது
திரைத்துறையினர் படப்பிடிப்பின்றி வீட்டிலேயே இருந்தாலும் அவர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. பாலிவுட்டில் நடிகர் அமிதாப்பச்சனின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் குணமடைந்தனர். அதேபோல் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸூக்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் அதிலிருந்து மீண்டார்.
இந்நிலையில் தனது கொரோனா வைரஸ் டெஸ்ட்டின் முடிவுகளை அறிவித்துள்ளார் நடிகை தமன்னா. இது குறித்து ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர், ”கடந்த வார இறுதி நாட்களில் என் பெற்றோருக்கு கோவிட்-19 அறிகுறிகள் லேசாக இருந்தது. இதையடுத்து வீட்டில் இருக்கும் அனைவரும் உடனே பரிசோதனை செய்து கொண்டோம். பரிசோதனை முடிவுகள் தற்போது தான் வந்துள்ளது. அதன்படி துரதிர்ஷ்டவசமாக என் பெற்றோருக்கு பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது.
உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நான் மற்றும் பணியாட்கள் உட்பட மற்ற அனைவருக்கும் நெகட்டிவ் என்று வந்திருக்கிறது. கடவுளின் அருளால் அவர்கள் தாக்குப் பிடிக்கிறார்கள். உங்களின் பிரார்த்தனை மற்றும் ஆசியால் அவர்கள் குணமடைவார்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தமன்னாவின் பெற்றோர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகளும், ரசிகர்களும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”