Ajith's Dhaksha Team: கொரோனா வைரஸின் சமூக பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, யாரும் தேவையில்லாமல் யாரும் வெளியில் வரக் கூடாது என்பது கடுமையாக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமே மக்கள் நலனுக்காக தங்கள் வேலையைச் செய்வதற்காக வெளியில் வர அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் நடிகர் அஜித்தின் குழு தமிழக அரசுக்கு உதவி வருகிறது.
கொரோனா வைரஸ் அதிகம் உள்ள பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிப்பதில் சுகாதாரத் துறை தீவிரம் காட்டுகிறது. இருப்பினும், எல்லா இடங்களிலும் ஆண்டிசெப்டிக்குகள் தெளிக்க, சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. ஆகையால் ட்ரோன்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த முயற்சியில், தற்போது கல்லூரி மாணவர்கள் குழு தமிழக அரசுக்கு உதவி செய்து வருகிறது. அந்தக் குழு வேறு யாருமல்ல, நடிகர் அஜித் பயிற்சியளித்த 'டீம் தக்ஷா'.
நடிகர் அஜித் பயிற்சியளித்த இந்த ’தக்ஷா’ குழு, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பல விருதுகளை வென்றது. இதற்கிடையே, ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்த அஜித்தின் 'வலிமை' படப்பிடிப்பும் மற்ற எல்லா படப்பிடிப்புகளையும் போலவே, கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.