தமிழ் திரையுலகில் புதன்கிழமை காலை தொடங்கிய வருமான வரி சோதனைகள் வியாழக்கிழமையும் தொடர்ந்தன. இந்த சோதனையில், கிட்டத்தட்ட ரூ.300 கோடி வருமானம் மறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை மற்றும் மதுரையில் மொத்தம் 38 இடங்களில் இந்த வருமானவரி சோதனைகள் நடத்தப்பட்டன. ஏஜிஎஸ் சினிமாஸ், திரைப்பட ஃபைனான்சியர் அன்பு செழியன், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த இரண்டு நாட்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை...
வருமான வரிச் சோதனையின் போது ஏராளமான சொத்து ஆவணங்கள், உறுதிமொழி குறிப்புகள் மற்றும் பின் தேதியிட்ட காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனையின் போது கண்டறியப்பட்ட ஆதாரங்களின்படி, ”கணக்கில் வராத பணம், ரூ.300 கோடியை தாண்டக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது” என்றும் ஐ-டி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதன்கிழமை காலை ஏ.ஜி.எஸ் சினிமாஸ் மற்றும் செழியன் வீடு ஆகிய இடங்களில் தொடங்கிய இந்த வருமானவரி சோதனை, மதியம் விஜய் வீட்டுக்குச் சென்றது. சென்னையிலிருந்து 200 கி.மீ தொலைவில் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்தார் விஜய். அவரிடம் விசாரித்த பின்னர், மேல் விசாரணைகளுக்காக விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றனர் ஐ.டி அதிகாரிகள்.
செழியன் மற்றும் ஏஜிஎஸ் சினிமாஸுக்குச் சொந்தமான வளாகத்தில் நடைபெற்ற சோதனைகளில் கணக்கிடப்படாத பணம், சொத்துக்கள், மற்றும் பிற சொத்துக்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விஜய் வீட்டில் சோதனையும், அவரிடமான விசாரனையும் நேற்று மாலை வரை நீடித்தது.
“இந்த நிறுவனங்களில் சோதனை நடத்த காரணம், சமீபத்திய திரைப்படத்தின் வெற்றி. பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற அப்படம் சுமார் 300 கோடி ரூபாய் வசூலித்தது. சென்னை மற்றும் மதுரை முழுவதும் 38 இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன” என யாரையும் பெயர் குறிப்பிடாமல் ஐ-டி துறை கூறியது.
இது பிகில் படத்தைப் பற்றிய ஒரு தெளிவான குறிப்பாக இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் சினிமாஸ், அன்பு செழியன் அதற்கு நிதியளித்ததாக கூறப்படுகிறது, மேலும் விஜய் முன்னணி நடிகராக இருந்தார். வருமானவரி சோதனையில் இந்த மூவருக்கும் பங்கு இருந்தது.
சோதனையில் கணக்கிடப்படாத சுமார் 77 கோடி ரூபாய் பணத்தை மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அமைந்துள்ள ரகசிய இடங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இப்பணம் நிதியாளர் அன்பு செழியனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
மூத்த ஐ-டி அதிகாரி ஒருவர் கூறுகையில், விஜய்யின் பிகில் மட்டுமல்லாமல், ரஜினிகாந்தின் கடைசி படமான தர்பார் மற்றும் பல பெரிய படங்களுக்கும் ஃபைனான்ஸ் செய்திருக்கிறார் அன்பு செழியன். அவர் வீடுகளில் சோதனை நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர் தான் விஜய் பட்டியலில் சேர்க்கப்பட்டார்” என்றார். மூன்று நாட்களுக்கு முன்பு, தர்பார் விநியோகஸ்தர்கள் சென்னையின் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்ததால், தங்களின் இழப்புகளுக்கு இழப்பீடு கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், விநியோகஸ்தர்களிடமிருந்து ரஜினிகாந்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், தர்பரை இயக்கிய திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்திருந்தார். விநியோகஸ்தர்கள் எனக் கூறிக் கொள்ளும் இரண்டு டஜன் ஆட்கள் தனது இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்து, இழப்பீடு கோருவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.