அண்ணாமலை படத்தின் பாடலில் ரஜினிகாந்த் பெயர் இடம்பெற்ற சுவாரஸ்யமான நிகழ்வை கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞரான வைரமுத்து, தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில், அண்ணாமலை பட பாடல்கள் குறித்தும், ரஜினிகாந்த்க்கு ஓபனிங் பாடல்கள் எழுதியும் குறித்தும் பேசியுள்ளார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: திறமையான நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது: கோவையில் அமிர்தா ஐயர் பேட்டி
அந்த வீடியோவில், ரஜினிகாந்த்க்கு நான் எழுதிய எல்லா பாடல்களும், நான் விரும்பி எழுதிய பாடல்கள். ஒருநாளும் எனக்கு இது வேண்டும் என்று ரஜினிகாந்த் கேட்டதில்லை. என்னைப் பற்றி எழுதுங்கள் என ரஜினிகாந்த் சொன்னதில்லை. ஆனால், ஒரே ஒருமுறை மட்டும் கேட்டிருக்கிறார்.
அண்ணாமலை திரைப்படத்திற்கு நான் பாடல்கள் எழுதி, கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். ”கொண்டையில் தாழம்பூ, கூடையில் என்ன பூ… குஷ்பூ” என பல்லவி எழுதிவிட்டேன். உடனே எல்லோரும், குஷ்பூ பேர் பாடலில் வருகிறதே, நல்லா இருக்குமா என்று கேட்டார்கள். நான் அதெல்லாம் நல்லா வரும், தியேட்டரில் விசில் பறக்கும் என்று கூறினேன். அப்போதெல்லாம் ஒரு பாடலை எழுதி அதற்கு சம்மதம் வாங்குவது எளிதல்ல.
முன்னதாக கவியரசர் கண்ணதாசன் ‘அம்பிகாபதி’ படத்தில் இடம்பெற்ற பாடலில், அதில் நடித்த நடிகை பானுமதியின் பெயரைச் சாமர்த்தியமாக சேர்த்திருந்தார். அதனைச் சொல்லி, குஷ்பூ பெயர் பாடலில் இடம்பெற்றதை நியாயப்படுத்தினேன். எல்லோரும் யோசிக்கலாம் என்று கூறினார்கள்.
அப்போது அங்கு வந்த ரஜினிகாந்த் பாடல் குறித்துக் கேட்டார். நான் தேவா சாரிடம் அந்த பாடலை பாடிக் காண்பிக்கச் சொன்னேன். குஷ்பூ பெயர் பாடல் இடம்பெற்றிருந்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ரஜினி, குஷ்பூ, குஷ்பூ… எனக் கூறி, பாடலில் பெயர் வருமா என்று கேட்டார். நான் வருது சார் என்று சொன்னேன். உடனே என்னுடைய பேர் வருமா என்று கேட்டார் ரஜினி. அதன் பின்னர் தான் ‘என்றும் நீ ராஜா நீ ரஜினி’ என்ற வரிகள் இடம்பெற்றது. என்னிடம் ரஜினி வாய்விட்டு கேட்ட ஒண்ணே ஒண்ணு இதுதான்.
மற்றபடி நான் அவருக்கு எழுதிய பாட்டெல்லாம் புகழ்பெற்றதற்கு காரணம், நான் எழுதிய தமிழ் அல்ல. அவர் இயல்பாகவே உழைத்து அந்த உயரத்திற்கு வந்திருந்தார். அந்த உயரத்தை நான் வரவேற்றேன். அவ்வளவு தான். எல்லாருக்கும் எழுதி இந்த மாதிரி உயரத்திற்கு கொண்டு வந்துவிட முடியுமா? எல்லாருக்கும் அப்படி எழுதத்தான் முடியுமா? எழுதினாலும் அவர்களால் பாட முடியுமா? பாடினால் பொருந்துமா? பொருந்தினால் தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்களா? எது பொருத்தமோ? அதைத்தான் பொருத்த முடியும்.
’அன்னை வாரிக் கொடுத்தது தாய்ப்பால், என்னை வாழ வைத்தது தமிழ் பால்’ என்ற வரிகளில் தமிழ் பால் என்ற வார்த்தை வேண்டாம் என்றார்கள். எனக்கு கோபம் வந்தது. நான் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து எழுதுகிறேன். தமிழ் பால் என்ற வரிகள் வரும்போது, ரஜினி ரசிகர்களை நோக்கி கை காண்பித்துவிட்டால், அதன் வரவேற்பு வேறு மாதிரி இருக்கும், தியேட்டர் கிழிந்துவிடும் என்று கூறினேன். என்னுடைய கோபத்தை பார்த்து வைத்துக் கொள்ளலாம் என்றார்கள். ரசிகர்களுக்கு அந்த வரிகள் பிடித்தது. எனவே எந்தவொரு நட்சத்திர நடிகருக்கும் நான் விரும்பித்தான் எழுதியிருக்கிறேனே தவிர, விரும்பாமல் எழுதவில்லை. இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.