மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தனர்.
'துணிவு' திரைப்படத்திற்கு பின்னர் ஏறத்தாழ 2 ஆண்டுகள் கழித்து அஜித் நடிப்பில் உருவான படம் என்பதால் இப்படத்தின் மீது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர். முன்னதாக பொங்கலின் போது 'விடாமுயற்சி' திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இறுதிகட்ட பணிகளின் தாமதம் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. இதில், வழக்கமான திரைப்படங்களின் பாணியில் இருந்து அஜித் மாறுபட்ட பாத்திரத்தில் நடித்திருந்ததாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும், இப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த சூழலில் 'விடாமுயற்சி' ஓடிடி வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் மார்ச் 3-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'விடாமுயற்சி' வெளியாக இருக்கிறது.
இதனிடையே, கார் ரேசிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அஜித் குமார் தற்போது ஸ்பெயினில் நடைபெற்று வரும் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதன் பின்னர், ஏப்ரல் 10-ஆம் தேதி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.