திரைப்படங்களில் பாடல்கள் பாடியும், நடித்தும் வரும் செந்தில் கணேஷ் – ராஜலெட்சுமி தம்பதி, தங்களுக்கு கடன் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி. சூப்பர் சிங்கருக்கு பிறகு இருவரும் சினிமாவில் பிஸியாக பாடல்கள் பாடி வருகின்றனர். இருவரும் இணைந்தும் தனித்தனியாகயும் நிறைய ஹிட் பாடல்களை பாடியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: அடிப்பாரு… கன்னா பின்னான்னு கத்துவாரு..! மாரி செல்வராஜ் பற்றி உதயநிதி ஷாக்
இதனையடுத்து, சென்னையிலேயே சொந்தமாக வீடு, கார் எல்லாம் வாங்கி செட்டில் ஆகிவிட்டனர். அடுத்ததாக இருவரும் சினிமாவில் பாட்டு பாடுவதை தவிர நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். ஏற்கனவே செந்தில் கணேஷ் ஹீரோவாக கரிமுகன் எனும் படத்தில் நடித்திருந்தார் சமீபத்தில் அவரது மனைவி ராஜலட்சுமி லைசன்ஸ் எனும் படத்தில் ஹீரோயினாகி உள்ளார். இதுதவிர செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இணைந்து இருளி எனும் படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ராஜலட்சுமி, ”சினிமாவில் நாங்கள் சாதித்து பல கோடி சொத்து வைத்திருப்பதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் வீடு, கார் எல்லாமே வாங்கியது இ.எம்.ஐ-ல வாங்கியது தான். நிறைய கடன் இருக்கு, அதுவும் கொரோனா காலத்துல ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ரொம்பவே கடனில் கஷ்டப்படுகிறோம்” எனக் கூறியுள்ளார்.
மேலும், கடன் பற்றி தானும் தனது கணவரும் பேசும் போது, ஒரு வேளை பேங்கக்காரங்க வந்து வீட்டை பிடிங்கிட்டு போயிட்டா என்ன பண்றது என்ற உடனே, அப்படியே சொந்த ஊரு பக்கமா போயிட வேண்டியது தான் என்று செந்தில் கணேஷ் சொன்னதாக ராஜலட்சுமி தனது பேட்டியில் கூறியுள்ளார்.
இதனையடுத்து, உங்களுக்கு நிறைய திறமை இருக்கு. நிறைய நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீரும் என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil