தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வரும் ரக்ஷிதா சுரேஷ், மலேசியாவில் விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சீசன் 6ல் கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆக தேர்வானவர் ரக்ஷிதா சுரேஷ். அவர் அதற்கு முன்னதாக ஜூனியர் சீசனிலும் பங்கேற்றவர். மேலும், ஒரு கன்னட சேனலில் நடைபெற்ற லிட்டில் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி பெற்றுள்ளார்.
இதையும் படியுங்கள்: சரோஜாதேவிக்கு போட்டியாக ஜெயலலிதாவை வளர்த்த சின்னப்ப தேவர்: பாட்டால் உதவி செய்த கண்ணதாசன்
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னட உள்ளிட்ட திரைப்படங்களில் பாடி வருகிறார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார்.
இந்நிலையில், தற்போது கார் விபத்தில் சிக்கியதாக, பாடகி ரக்ஷிதா சுரேஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "இன்று பெரிய கார் விபத்தில் சிக்கினேன். காலையில் மலேசிய விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த டிவைடரில் பலமாக மோதிய கார் சாலையின் மறுபகுதிக்கு சென்றது. இந்தப் பெரிய பாதிப்பில் அந்த 10 வினாடிக்குள் என் மொத்த வாழ்க்கையும் என் கண் முன் தோன்றி மறைந்தது.
ஏர் பேக்குகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இல்லையெனில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். விபத்து நடந்தது இப்போதும் மிகவும் நடுக்கமாக இருக்கிறது. நானும், காரை இயக்கி வந்த டிரைவரும் உடன் பயணித்த இன்னொருவரும் லேசான வெளி காயங்களோடும் சிறு உட்காயங்களோடும் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைக்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது,” என பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil