ஜனார்தன் கௌஷிக்
Vishwaroopam 2 Review : கமல் ஹாசன் என்ற மிக சிறந்த நடிகர் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தன்னை மட்டுமல்லாது தமிழ் சினிமாவையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியோடு செயல்படுவார். அதிலும், தான் இயக்கும் படத்தில் மிகவும் நேர்த்தியுடன் செயல்படுவார்.
அந்த நேர்த்தியும், அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங் (Out of the Box Thinking) என்று சொல்லக்கூடிய தன்மையும் தான் கமல் ஹாசனை மற்ற இயக்குநர்களிடத்தில் இருந்து வேறுபடுத்தி காட்டும்.
அந்த அளவுக்கு திறமை வாய்ந்த கமல் ஹாசன் என்ற இயக்குனர், இந்த ஸ்பை திரில்லர் Genre-இல் உருவாகியிருக்கும் விஸ்வரூபம் 2 வில் அவரது ரசிகர்களை மட்டுமல்லாது, சினிமாவின் ரசிகர்களையும் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார்.
Vishwaroopam 2 Review : விஸ்வரூபம் 2 படத்திற்குள் தென்படும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்:
மக்கள் நீதி மையத்தின் தலைவர் (அப்படி தான் இனி அழைக்க வேண்டும் போல் இருக்கிறது, ஏனென்றால், படத்தின் தொடக்கத்திலே மக்கள் நீதி மய்யம் கட்சி உருவான விதத்தின் காட்சிகள் தான் முதலில் தென்படுகின்றன.
தீம் பாடலான ‘நாளை நமதே’ பின்னணியில் ஒலிக்கிறது) விசாம், அஸ்மிதா, நிரூபமா மற்றும் கோளோனேல் ஜெகன்னாத் விமானத்தில் சென்றுகொண்டிருக்கின்றனர்.
உங்கள எப்படி இந்த வேளைக்கு எடுத்தாங்க என்று நிரூபமா கேட்க, பிகாஸ் ஆஃப் மை இல்லிஜிமேட் ஃபாதர் இன் பாகிஸ்தான் (Because of my illegitimate father in Pakistan) என்று முடிக்கிறார் விசாம்.
அப்போ இது என்று விசாமின் தோள் மீது பயணக் களைப்பு காரணமாக தூங்கி கொண்டிருக்கும் அஸ்மிதாவை நோக்கி நிரூபமா கேட்க, இது தூங்குது என்று சொல்லிவிட்டு தலையை சாய்த்து கண் மூடுகிறார் விசாம், அங்கே ஆரம்பிக்கிறது பிளஷ் பேக்.
Vishwaroopam 2: விஸ்வரூபம் 2 ரிலீஸ் ஆகாத சில மாவட்டங்கள்!
விசாமின் பயிற்சி பட்டறையில் அஸ்மிதா எவ்வாறு எல்லாம் பயிற்சி பெறுகிறாள் என்று சாதி மதம் ஒற்றை பாடலின் மூலமாக விளக்கம் தருகிறார்கள். விசாமும் அஸ்மிதாவும் எப்படி இந்த தீவிரவாத அமைப்புகளின் திட்டங்களை முறியடிக்க தேர்வு செய்யப்பட்டனர், விசாம் எப்படி அல் கொய்தா (Al-Qaeda) அமைப்பில் சேர்ந்தார் போன்ற காட்சிகள் சற்று விறுவிறுப்பை ஏற்படுத்துகின்றது.
தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட டாக்கின்ஸின் உடலை விமானத்தில் அவரது சொந்த ஊரான லண்டனிற்கு கொண்டு செல்கின்றனர். அப்பொழுது காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ஒரு தீவிரவாத தாக்குதல் நடக்கிறது, அதிலிருந்து மீள்கிறார்கள் விசாம் மற்றும் அவரது கூட்டாளிகள்.
Vishwaroopam 2 Review : விஸ்வரூபம் 2 கிராஃபிக்ஸ்
அங்கே மறுபடியும் ஒரு பிளாஷ் பேக், ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு என்று ஆக்க்ஷன் காட்சிகள் நகர்கிறது, இந்த சம்பவங்கள் பெரும்பாலும் slow-மோஷன் மற்றும் Freezzing காட்சிகள் மூலம் காட்டியிருக்கிறார்கள்.
எங்கே தப்பு நடந்தாலும் தேடி வந்து உதவும் பழைய எம் ஜி ஆர் படங்களை போல, தீவிரவாதிகள் எங்கே வெடிகுண்டு வைத்தாலும் விசாம் கண்டுபிடித்து விடுவார். இவர்கள் வந்து இறங்கி இருக்கும் லண்டனில் கடலுக்கு அடியில் ஒரு வெடிகுண்டு தாக்குதலை தீவிரவாத அமைப்பு திட்டமிடுகிறது.
விசாமின் மனைவியான நிரூபமா தான் ஒரு நியூக்ளியர் ஆன்கோலாஜிஸ்ட் என்பதை படம் பார்ப்பவர்களுக்கு நினைவூட்டும் விதமாக, இந்த கடலுக்கு அடியில் இருக்கும் வெடிகுண்டை எப்படி செயல் இழக்க செய்வது என நான் சொல்கிறேன் என்று டக்கென்று கடலில் குதிக்கிறார்.
இவராவது சகல இயந்திரங்கள் உதவியுடன் குதிக்கிறார், ஆனால் இந்திய ரா ஏஜென்ட் ஆன விசாமோ, கடலுக்கு அடியில் கோட் சூட்டுடன், எந்த வித இயந்திர உதவியும் இன்றி சண்டை போடுகிறார். இறுதியில் சீஸியும் கலந்து இருக்கும் அந்த வெடிகுண்டையும் வெடிக்காமல் விசாம் காப்பாற்றுகிறார்.
இடைவேளைக்குப் பிறகு எப்படி இருக்கிறது விஸ்வரூபம் 2?
இடைவேளைக்கு பிறகு ,அனைவரும் சுற்றுலா செல்வது போல அடுத்த இடமான இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு செல்கின்றனர்.
முதல் பாகத்தில் ஒமர் தப்பிவிட, அவரை நாயகன் எப்படி பிடிக்கிறார் என்பது தான் இந்த இரண்டாம் பாக கதையாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு தோன்றியது.
ஆனால் அப்படி எண்ணி இருந்தவர்களுக்கு, மன்னிக்கவும் இது தவறான தேர்வு என்று கஸ்டமர் கால் சென்டரில் சொல்வது போல் அது குறித்த எந்த காட்சியையும் சேர்க்கவில்லை கமல்.
ஆப்கானிஸ்தான் பிளஷ் பேக் காட்சிகள் போல, விசாமின் தாய் உயிருடன் இருக்கிறார் என்பதனை காண்பிக்க, ஒரு சில காட்சிகளுக்கு வந்து போகிறார் வஹீதா ரஹ்மான். அவருக்கு அல்ஸீமர் நோய் இருப்பதால் அவர் விசாம் தன் மகன் என்று கூட தெரியாமல் இருக்கிறார்.
தன் கணவருடன் தன் மகன் பாகிஸ்தான் சென்று விட்டதாக கூறுகிறார் விசாமின் தாய், ஆனால் எதற்கு அவர்கள் சென்றனர் பின்பு இவர் எப்படி இந்த நினைவை இழந்தார் போன்ற காட்சிகளை காண்பிக்க தவறிவிட்டனர்.
படத்தில் பூஜா குமாருக்கு இருக்கும் காட்சி அளவு கூட வில்லன் ஒமருக்கு இல்லை. அவர் இறுதி காட்சியில் சொல்லி வைத்தார் போல் இரண்டு நாயகிகளையும், விசாமின் தாயையையும் கடத்தி செல்கிறார், அதில் அஸ்மிதா கொல்லப்படுகிறாள்.
வில்லனிடம் சிக்கி இருக்கும் நிரூபமாவையும், அவரது தாயையும் மீட்கிறார் விசாம். இறுதியில் தன் குடும்பம் விசாமால் அழியவில்லை, அவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்று உணர்ந்து இறக்கிறான் ஒமர், அத்துடன் நிறைவு பெறுகிறது இந்த இரண்டாம் பாகம்.
முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு, ஆக்க்ஷன் காட்சிகள் எதுவுமே இந்த பாகத்தில் இல்லை. கிராஃபிக்ஸ் (VFX) காட்சிகள் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்றே பாடல்கள் என்றாலும், ரசிக்கும் வண்ணமாக படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கிறது.
முதல் பகுதியைப் போல் போராடாமல் வெளிவந்து இருக்கும் விஸ்வரூபம் 2, போராட்டமின்றி முடிகிறது.