அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரத்து: எம்.பி. தொகுதி நிதி பங்கீடு விகிதம் தெரியுமா?

2019 ஜூலை மாதம், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், இந்த திட்டம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது? என்பது குறித்த ஆலோசிக்க உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

By: Updated: April 7, 2020, 02:37:29 PM

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கருத்தில் கொண்டு, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளுக்கான  நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை  தற்காலிகமாக நிறுத்திவைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதன் மூலம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு, இந்திய ஒருங்கிணைந்த நிதிக்கு (Consolidate Fund of India) ரூ. 7900 கோடி வரவு கிடைக்கும்” என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

பிரதமர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள், ஓய்வூதியங்களை ஒரு வருடத்திற்கு 30 சதவீதம் குறைக்கும் சட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தொகை கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா? தயங்கும் மாநில அரசுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி என்றால் என்ன?  

இந்த திட்டம் 1993 ஆம் ஆண்டில் நரசிம்மராவ் அரசாங்கத்தின் போது தொடங்கப்பட்டது. மாநில மற்றும் மத்திய அரசின் திட்டங்களால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளியினை, உள்ளூர் தேவைக்கேற்ப நிலையான கட்டமைப்பு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்து நிரப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

சுருங்கச் சொன்னால்,ஒவ்வொரு தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் மேம்பாட்டுப் பணித்திட்டங்களை  பரிந்துரைக்க முடியும். (பொதுவாக, அமைச்சர் ஒருவரே திட்டங்கள் வகுத்து செயல்படுத்துவார், ஆனால் இந்த திட்டம் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்டங்களை பரிந்துரைக்கலாம்)

1994-95 முதல் 1997-98 வருடாந்திர மேம்பாட்டு நிதியின் அளவு ரூ. 1 கோடி என்ற அளவில் இருந்தது. பின்னர், இந்த வருடாந்திர மேம்பாட்டுத் தொகை இரண்டு கோடியாக உயர்த்தப்பட்டது.


2011-12 ஆம் ஆண்டில், தேசிய முற்போக்கு ஆட்சிக் காலத்தில், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும்இந்த திட்டத்தின் கீழ் ரூ .5 கோடி ஒதுக்கப்பட்டது .

ஜூன் 2016-ம் ஆண்டு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ‘ நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் குறித்த வழிகாட்டுதலில், “ மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவைப்படும் நீடித்த பொதுச் சொத்துக்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இத்திட்டம் வழிவகுக்கிறது. குடிநீர், ஆரம்ப கல்வி, பொது சுகாதாரம்,  சாலைகள் போன்ற பொதுச் சொத்துகளுக்கு இத்திட்டம் முன்னுரிமை கொடுக்கின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், குறைந்தபட்சம் 15 சதவிகித (குறைந்தது 75 லட்சம் ) பணிகள், பட்டியல் சாதி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பட்டியல் பழங்குடியினர்  மக்கள் வசிக்கும் பகுதிகளில், 7.5 சதவிகித திட்டப் பணிகளை ( 37.5 லட்சம்  )மேற்கொள்ள வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. மக்களவை உறுப்பினர்  தனது தொகுதியில் போதிய பழங்குடி மக்கள் இல்லாதிருந்தால், தங்கள் தொகுதிக்கு வெளியே இருக்கும் பழங்குடியினர் பகுதிகளில் சமூக சொத்துக்களை உருவாக்க இந்த தொகையை பரிந்துரைக்கலாம்,” என்றும் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவர்கள் விருப்பத்திற்கிணங்க,  செய்ய வேண்டிய மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்க வேண்டும். நிர்வாக அனுமதியை மாவடட ஆட்சியர் வழங்கிய பின்,இப்பணிகளை தொடர்புடைய துறையினர் செயல்படுத்துவார்கள்.

என்ன வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன? 

ரயில்வே நிறுத்த நிலையங்களை நிர்மாணித்தல், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் , கூட்டுறவு சங்கம் , பார் அசோசியேஷன் போன்றவைகளுக்கு நிதியுதவி வழங்குதல், சி.சி.டி.வி கேமராக்களை நிறுவுதல், மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல மேம்பாட்டு பணிகளை இந்த வழிகாட்டுதல்கள்பரிந்துரைக்கின்றன .

இந்த  திட்டத்தை மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்புத் திட்டம் , கெலோ இந்தியா போன்ற பிற திட்டங்களுடன் இணைக்க முடியும்.

இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம், தனது 2007ம் ஆண்டு அறிக்கையில் : “ சட்டம்  இயற்றுபவர்களின் கையில் விருப்பநிதி இருப்பது (அல்லது), குறிப்பிட்ட மக்களுக்கு தேவைப்படும் திட்டங்ககளுக்கு அதிகாரமளிப்பது ஒரு நிர்வாக அதிகாரமாக கருதப்படும், இது தகுநீக்கத்திற்கும் வழிவகுக்கும் ” என்று கூறியிருந்தது. இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

மே மாதம் 6, 2010 ஆண்டு, இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம், தனது தீர்ப்பில்; நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்  திட்டம் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தது .

இந்திய பாராளுமன்றக் குழுக்கள் , தலைமைக் கணக்குத் தணிக்கையாளரும் (சிஏஜி) தங்களது  அறிக்கைகளில் இந்த திட்டம் குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவு செய்துளளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .  2019 ஜூலை மாதம், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், இந்த திட்டம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது ? என்பது குறித்த ஆலோசிக்க உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Covid 19 crisis modi government suspend mplads funds for two years

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X