உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 255 தொகுதிகளில் பாஜக வென்றது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல விமர்சனங்களை முன்வைத்தாலும் அவைகளை எல்லாம் செல்லாக் காசுகளாக ஆக்கி மிகப் பெரிய வெற்றியை அடைந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது உத்தரப் பிரதேச பாஜக.
இத்தகைய வெற்றிக்கு பின்னால் இருக்கும் 5 காரணங்களை பார்ப்போம் வாருங்கள்.
1. சட்டம்-ஒழுங்கு
சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. அரசு உத்தரவு பேரில் மாஃபியா மற்றும் கொலைக் குற்றவாளிகளை போலீஸார் என்கவுன்டர் செய்து சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட உதவினர்.
தேர்தல் பிரசாரங்களில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உத்தரப் பிரதேசத்தில் கொலைகள், கடத்தல் சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவை கடந்த 5 ஆண்டுகளில் பெருமளவு குறைந்துவிட்டதாக பேசினர்.
2. நலத் திட்டங்கள்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலர் உயிரிழந்தனர். பலர் தங்கள் வேலைகளை இழக்க நேரிட்டது. அந்த சமயத்தில் இலவச ரேஷன் பொருட்களை வழங்கியது உத்தரப் பிரதேச அரசு.
மத்திய அரசு அளித்த ரேஷன் பொருட்களையும் உரிய பயனாளிகளுக்கு மிகச் சரியாக கொண்டு சேர்த்தது. அத்துடன், விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு பணம் செலுத்தும் பிரதமர் கிசான் நிதி திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியது. இத்தகைய நலத் திட்டங்கள் தேர்தலில் பாஜகவுக்கு கை கொடுத்தன.
3. ஹிந்துத்துவம்
ஹிந்துத்துவ கொள்கையை தொடர்ந்து தூக்கிப் பிடித்து வரும் பாஜக, தங்களின் கொள்கைகளுக்காகவும் பல நடவடிக்கைகளை எடுத்தது.
அயோத்தியில் காசி வழித்தடத்தை அமைப்பதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதை உதாரணத்துக்கு இங்கே கூறலாம்.
ஹிந்துக்களின் வாக்குகளை கவரும் வகையில் தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதைக் கூட உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
4. கட்சியினரின் அசுர உழைப்பு
பாஜகவினர் அசுரத்தனமாக உழைத்ததும் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஊரடங்கு காலத்தில் இருந்தே தேர்தலுக்கான களப் பணிகளை பாஜகவினர் செய்ய தொடங்கி விட்டனர்.
எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்யத் தொடங்குவதற்கு முன்பே கடந்த 6 மாதங்களாக மாநிலத்தின் பல இடங்களில் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் பிரசாரம் செய்யத் தொடங்கினர். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுக்களை பாஜக உருவாக்கியது. தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை பெறுவதற்காக சமுதாய தலைவர்கள் மாநாடுகளும் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டன.
கட்சியின் தேசியத் தலைவர்கள் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக மூன்றடுக்கு அமைப்பையும் பாஜக அமைத்தது.
இதையும் படியுங்கள்: 5 மாநில தேர்தல் முடிவுகள்; பாஜகவுக்கு ஊக்கமளிக்கும் வெற்றி; தேசிய முகமாகும் கெஜ்ரிவால்
5. எதிர்க்கட்சிகள் கூட்டணி இல்லை
2022 பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு அடுத்தபடியாக சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில் (111) வென்றுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
இந்தத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவை தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. இதனால் வாக்குகள் சிதறியது. கூட்டணி அமைத்து எதிர்க்கட்சிகள் தேர்தலைச் சந்தித்திருந்தால் அது பாஜகவுக்கு கடும் சவாலை கொடுத்திருக்கும்.
கூட்டணி இல்லாமல் எதிர்க்கட்சிகள் களம் கண்டதும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டதாகக் கருதலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.