General Election 2019 Results BJP Historical Victory : இன்று வெளியான தேர்தல் முடிவுகள் 11 மணியின் போதே வெற்றியாளர் யார் என்பதை உறுதி செய்து அறிவித்துவிட்டது என்று தான் கூற வேண்டும். 11 மணி அளவில் பாஜக 292 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. கடந்த முறை தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்ற தொகுதிகளில் இருந்து 10 தொகுதிகள் அதிகம் இது. நிச்சயமாக 300ஐத் தாண்டி ஹை ஸ்பீடில் முன்னேறிக் கொண்டிருக்கிறது பாஜக வெற்றிகள்.
காங்கிரஸ் இல்லாத ஒரு தலைவர் மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வருவது இதுவே முதல் முறையாகும். அதுவும் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடத்தியப் பின்பு. 1984ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜீவ் காந்தி. அதன் பின்னர் இப்படி ஒரு வெற்றிப் பாதையில் முன்னேறியிருக்கிறது பாஜக.
மேலும் படிக்க : Lok Sabha Election Results Tamil Nadu 2019 Live: மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திருநாவுக்கரசர் வெற்றி!
எந்தெந்த மாநிலங்களில் பாஜக 50% மேல் வாக்குகளைப் பெற்றுள்ளது?
குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 2014ம் ஆண்டு தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்களை வென்றுள்ளது பாஜக.
இனிமேல் எதிர்க்கட்சியினர், பாஜகவிற்கு நாட்டில் அதிக அளவு ஆதரவு இல்லை என்று கூற இயலாது. வெற்றி பெற்ற 12 மாநிலங்களில் 50% மேல் வாக்குகளைப் பெற்றுள்ளது பாஜக. 11 மணி நிலவரப்படி ஹிமாச்சல் பிரதேசம் 69%, அருணாச்சலம் 63%, குஜராத் 62%, உத்திரகாண்ட் 61%, ராஜஸ்தான் 59%, மத்தியப் பிரதேசம் 58%, டெல்லி 57%, ஹரியானா 57%, கர்நாடகா 52%, உத்திரப்பிரதேசம் 50%, சத்தீஸ்கர் 50%.
மேற்கு வங்கத்தில் தன்னுடைய வாக்கு வங்கியினை 18%ல் இருந்து இரட்டிப்பாக்கி 39% பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும்.
General Election 2019 Results BJP Historical Victory
42 தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளில் முன்னிலை பெற்றது பாஜக. கடந்த முறை தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் 24 இடங்களில் முன்னிலை வகித்து வந்தது. காங்கிரஸ் 1 இடத்தில் முன்னிலை பெற இடதுசாரிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஒடிசாவில் 7 தொகுதிகளில் முன்னிலை பெற்றது பாஜக. அதன் வாக்கு சதவிகிதம் என்பது 37% ஆகும்.
என்ன ஆனது காங்கிரஸ் நிலை
மத்தியப் பிரதேசத்தில் ஒரு தொகுதி, ராஜஸ்தானில் ஜீரோ, சத்திஸ்கரில் 2 தொகுதி என்றே முன்னிலை பெற்று வருகிறது. பஞ்சாப் மற்றும் கேரளாவில் முறையே 19 மற்றும் 20 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை பெற்று வருகிறார்.
ஆனால் அமேதியில் ராகுலுக்கு பின்னடைவு. ஜோதிராதித்ய சிந்தியா குணா தொகுதியிலும், தீப்பேந்தர் ஹூரா ரோஹ்தக் தொகுதியிலும், கௌரவ் கோகோய் கலியாபர்கிலும், சுஷ்மிதா தேவ் சிலிச்சாரிலும் பின்னடைவு என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பூபேந்திர ஹூடா, மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் திக்விஜய சிங், முன்னாள் மத்திய அமைச்சர் எம்.வீரப்ப மொய்லியும் தங்களின் தொகுதிகளில் பின்னடைவு பெற்றுள்ளனர்.
கேரளாவில் காசர்கோட் தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. சபரிமலை விவகாரத்தில் சி.பி.ஐயின் நிலைப்பாடு அவர்களின் படுதோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
2014ம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாஜக. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணி வெற்றி பெறும் என்று நினைத்திருந்த நிலையில் 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பிகாரிலும் 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் + திமுக கூட்டணியும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெற்று வருகிறது.