கோவிட்-19 ஆன்ட்டிபாடி சோதனைகள் எவ்வாறு வேலை செய்கிறது? அது எவ்வளவு துல்லியமானது?

தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க பல நாடுகள் ஆன்ட்டிபாடி பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ள நிலையில், மக்களை மீண்டும் பணியில் சேர அனுமதிப்பதற்கு முன்பு இதே போன்ற அறிக்கைகளை அலுவலகங்களும் கேட்க துவங்குகின்றன.

How the Covid-19 antibody test works,

 Rounak Bagchi

Covid-19 antibody test works : கோவிட் -19 தடுப்பூசி எனக்கு வேலை செய்ததா? கொரோனா வைரஸை இரண்டாவது முறையாக சமாளிக்க எனக்கு ஆன்டிபாடிகள் உள்ளதா? தங்களுக்கான ஆன்டிபாடி சோதனைகளை பதிவுசெய்யும்போது மக்களின் மனதில் இருக்கும் சில கேள்விகள் இவை.

புதிய இயல்புக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் 100% பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய விரும்புகின்றனர். எனவே, கொரோனா தொற்றுக்கு எதிராக அவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்பதை கண்டறிய ஆன்டிபாடி சோதனைகளை பலர் மேற்கொள்கின்றனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க பல நாடுகள் ஆன்ட்டிபாடி பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ள நிலையில், மக்களை மீண்டும் பணியில் சேர அனுமதிப்பதற்கு முன்பு இதே போன்ற அறிக்கைகளை அலுவலகங்களும் கேட்க துவங்குகின்றன.

இதுபோன்ற சோதனைகளின் செயல்திறன் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியின் குறிகாட்டியாக இது இருக்க முடியுமா என்பது குறித்து நிறைய விவாதங்கள் நடைபெற்று வருவதால், இந்த சோதனைகள் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாங்கள் விளக்குகிறோம்.

ஆன்ட்டிபாடிகள் என்றால் என்ன?

ஆன்டிபாடிகள் SARS-CoV-2 போன்ற ஒரு குறிப்பிட்ட வைரஸை எதிர்த்துப் போராட உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் உருவாக்கப்பட்ட புரதங்கள் ஆகும். அவை நோக்கம் மிகவும் குறிப்பிட்டவையாக இருப்பதால், ஒரு வைரஸை நோக்கி இயங்கும் ஆன்டிபாடிகள் வேறொரு தாக்குதலில் இருந்து பாதுகாக்காது. உங்களுக்கு அம்மை நோய் ஏற்பட்டிருந்தால் அதனால் உருவாக்கப்பட்ட ஆன்ட்டிபாடிகள் அம்மை வைரஸுக்கு எதிராகவே செயல்படும் தவிர கொரோனா வைரஸில் இருந்து உங்களை பாதுகாக்காது.

ZyCov-D தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது?

ஆன்ட்டிபாடி சோதனைகள் என்பது வைரஸை சோதிப்பது அல்ல. உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பை சோதனையிடுகின்றன. எந்தவொரு நோய்க்கும் எதிராக உங்கள் உடலின் பாதுகாப்பு மற்றும் நோய்த்தொற்றுக்கு பதிலளித்திருக்கிறதா என்பதை சோதனையிடுகிறது.

ஆன்ட்டிபாடி சோதனை எவ்வாறு செயல்படுகிறது?

நோய்த்தொற்றுக்குப் பிறகு உற்பத்தி செய்யப்படும் ஐந்து முக்கிய வகை ஆன்ட்டிபாடிகளில், ஒரு சோதனை வெறும் மூன்று – இம்யூனோகுளோபுலின்ஸ் A (IgA), M (IgM) மற்றும் (IgG) ஆகியவற்றைத் தேடுகிறது.

வெள்ளை இரத்த அணுக்கள் – குறிப்பாக பி லிம்போசைட்டுகள் – ஒரு வெளி ஆன்டிஜென் வழங்கப்பட்ட பின்னர் முதலில் IgM ஆன்ட்டிபாடிகளை உருவாக்குகின்றன, ஆனால் பின்னர் IgG அல்லது IgA ஆன்ட்டிபாடிகளை உற்பத்தி செய்வதற்கு மாறுகின்றன.IgG ஆன்ட்டிபாடிகள் இரத்தத்தில் காணப்படும் மிகவும் பொதுவான வகை மற்றும் பாக்டீரியா அல்லது வைரஸ்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் IgA ஆன்ட்டிபாடிகள் உமிழ்நீர் போன்ற உடல் சுரப்புகளில் காணப்படுகின்றன.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் ஆய்வுப்படி, SARS-CoV-2 ஆன்டிஜென்களுக்கான IgM மற்றும் IgG ஆன்டிபாடிகள் பொதுவாக நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு இடையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் அவை உடலில் எவ்வளவு காலம் இருக்கின்றன என்பது இன்னும் அறியப்படவில்லை.

ஒரு நேர்மறையான ஆன்ட்டிபாடி சோதனை முடிவு ஒருவருக்கு முந்தைய தொற்றுநோயிலிருந்து ஆன்டிபாடிகள் இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. கோவிட் -19 இன் அறிகுறிகள் ஒருபோதும் இல்லை என்றாலும் கூட ஆன்ட்டிபாடி சோதனைகளை மேற்கொள்ளலாம். சில நேரங்களில் ஒரு நபர் SARS-CoV-2 ஆன்ட்டிபாடிகளுக்கு அந்த குறிப்பிட்ட ஆன்ட்டிபாடிகள் இல்லாதபோது நேர்மறையை சோதிக்க முடியும். இது தவறான நேர்மறை என்று அழைக்கப்படுகிறது.

இருப்பினும், ஒரு எதிர்மறையான முடிவு என்னவென்றால் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகவில்லை. அல்லது ஒருவரின் உடல் தேவையான ஆன்ட்டிபாடிகளை உற்பத்தி செய்வதற்கு முன்பு சோதனை மேற்கொண்டுள்ளார் என்பதாகும். ஆன்ட்டிபாடிகளை உருவாக்க உங்கள் உடலுக்கு தொற்று ஏற்பட்ட பின்னர் ஒன்று முதல் மூன்று வாரங்கள் ஆகும்.

எத்தனை வகையான ஆன்ட்டிபாடி சோதனைகள் உள்ளன, அவை எவ்வளவு துல்லியமானவை?

ஒருவர் வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கியிருக்கிறாரா என்பதை தீர்மானிக்க இரண்டு வகையான சோதனைகள் உள்ளன: ஒரு ஆய்வக சோதனை, நோயாளியிடமிருந்து ஒரு இரத்த மாதிரியை எடுக்க ஒரு சுகாதார நிபுணர் தேவை, முடிவுகளுக்காக இந்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. அல்லது finger-prick blood சோதனை. இது வீட்டிலேயே எடுக்கக்கூடிய விரைவான சோதனை ஆகும்.

நான்கு நாடுகளைச் சேர்ந்த 38 ஆன்டிபாடி சோதனை துல்லியம் குறித்து நடத்தப்பட்ட கோக்ரேன் மதிப்பாய்வு (Cochrane), ஐ.ஜி.ஜி / ஐ.ஜி.எம் ஆன்டிபாடிகளைத் தேடும் சோதனைகள் குறைந்த உணர்திறனைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தன. ஆன்ட்டிபாடிகளுடன் மாதிரிகளை சரியாக அடையாளம் காணும் சோதனையின் உணர்திறன் அறிகுறிகள் தோன்றிய முதல் வாரத்தில் 30.1% ஆக இருந்தது. உணர்திறன் இரண்டாவது வாரத்தில் 72.2% ஆகவும் மூன்றாவது வாரத்தில் 91.4% – ஆகவும் உயர்ந்தது.

அறிகுறிகள் தோன்றிய 15 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்குப் பிறகு பயன்படுத்தினால் முந்தைய Sars-CoV-2 தொற்றுநோயைக் கண்டறிய ஆன்ட்டிபாடி சோதனைகள் பயனுள்ள பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நேர்மறையான முடிவுகள் வந்தால் நான் வைரஸிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளேன் என்று அர்த்தமா?

சில நோய்களில், ஆன்ட்டிபாடிகள் இருப்பது என்பது நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர் அல்லது எதிர்கால நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட தேவையான ஆன்ட்டிபாடிகளை பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தமாகும். உங்கள் உடல் அந்த வைரஸை அடையாளம் காணக் கற்றுக் கொண்டது மற்றும் அதை எதிர்த்துப் போராட ஆன்ட்டிபாடிகளை உருவாக்கியுள்ளது என்று அர்த்தம்.

நோய் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் மங்கக்கூடும். கொரோனா வைரஸுக்கு சில ஆன்டிபாடிகள் இருப்பது கோவிட் -19 இன் மிகவும் கடுமையான தொற்றில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆன்ட்டிபாடிகள் இருப்பதற்கும் நோயெதிர்ப்பு அல்லது எதிர்கால SARS-CoV-2 நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும் இடையிலான உறவை தெளிவுபடுத்த கூடுதல் ஆராய்ச்சி உதவும்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்த சோதனைகள் தேவையற்றவை மேலும் நம்பமுடியாதவை என்று நம்புகின்றன. மேலும் இந்த சோதனை முடிவுகளை வைத்து கோவிட் -19 தடுப்பூசிகளிலிருந்து ஒருவர் எவ்வளவு பாதுகாப்பைப் பெறுகிறார் என்பதைத் தீர்மானிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளது. ஆன்டிபாடி சோதனை முடிவுகள் தவறாக விளக்கப்பட்டால், மக்கள் SARS-CoV-2 வெளிப்பாட்டிற்கு எதிராக குறைவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று கூறியுள்ளது.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் பாதிக்கும் தன்மை கொரோனா வைரஸ் குறித்த குழப்பமான விசயங்களில் ஒன்றாகும். உங்களிடம் கோவிட் -19 இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க சோதனை சிறந்த வழியாகும்.உங்களின் ஆன்ட்டிபாடி சோதனைகள் முடிவுகள் நேர்மறையானதோ அல்லது எதிர்மறையானதோ, உங்களுக்கு நோய்தொற்று அறிகுறிகள் இருந்தாலும் இல்லையென்றாலும் உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும், உங்களை அறியாமல் நீங்கள் அதனை மற்றவர்களுக்கு பரப்ப முடியும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How the covid 19 antibody test works and how accurate it is

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com