உயர்தர மருத்துவ சாதனங்கள் இறக்குமதியில் இந்தியா அதிகம் சார்ந்திருக்காமல் இருப்பதற்காக புதிய கொள்கையை மத்திய அரசு வகுத்து வருகிறது.
வரிச் சலுகைகள் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் மூலம் மருத்துவ சாதனங்கள் மற்றும் அதுதொடர்புடைய தொழில்நுட்பத் திட்டங்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவித்தல், மருத்துவ சாதனங்கள் துறையில் “அதிக முக்கியத்துவம்” வாய்ந்த திட்டங்களில் அரசாங்க செலவினங்களை அதிகரிப்பது மற்றும் மருத்துவ சாதனங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான ஒற்றைச் சாளர அனுமதி அமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவையும் இந்த முன்மொழிவுகளில் அடங்கும்.
மருத்துவ சாதனங்களுக்கான தேசிய கொள்கை 2022, வரைவில், சுகாதாரச் செலவைக் குறைப்பதற்கும், மருத்துவச் சாதனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், பொது-தனியார் கூட்டுறவை மேற்கொள்ளவும் ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துத் துறை
முன்மொழிந்துள்ளது.
இந்தத் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகளின் மீது விலைக் கட்டுப்பாடு இல்லாத சூழலை செயல்படுத்தவும் இந்த வரைவு முன்மொழிகிறது.
இந்த கொள்கைக்கான தேவை என்ன?
நாட்டில் விற்பனையாகும் சுமார் 80 சதவீத மருத்துவ சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். குறிப்பாக உயர்தர சாதனங்கள் இதில் அடங்கும்.
குறைந்த விலையிலான குறைந்த தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பொருட்களை வாங்குவதிலேயே இத்துறையில் இருப்பவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதாவது ஒரு முறை வாங்கி பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பொருட்களையே விரும்புகிறார்கள். இதனால், அதிக அளவிலான லாபம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்கிறது.
புதிய வரைவு கொள்கை மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் தற்போதைய 80 சதவீத இறக்குமதி சார்ந்திருப்பை 30 சதவீதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், 2047-ஆம் ஆண்டில் மருத்துவ சாதன தயாரிப்பில் முதல் 5 இடங்களில் இந்தியாவும் இடம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1940 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின்படி இந்தியாவின் மருத்துவ சாதனத் துறை இதுவரை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது, மேலும் மருத்துவ சாதனங்கள் குறித்த ஒரு குறிப்பிட்ட கொள்கை வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவச் சேவைகளின் பகுதியளவு ஒழுங்குமுறையில் இருந்து அனைத்து மருத்துவ சாதனங்களுக்கும் முழுமையான கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்குவதற்கான மாற்றம் நடந்து வருவதாகவும், அக்டோபர் 2023 க்குள் இது நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
மேலும் தர உத்தரவாதம் மற்றும் சான்றிதழின் அடிப்படையில் இன்னும் தெளிவான வெளிப்பாடு தேவைப்படுவதாகவும் மத்திய அரசு கூறுகிறது.
மருத்துவ சாதனங்களுக்கான இந்தியாவின் தனிநபர் செலவினத்தை அதிகரிப்பதையும் இந்த வரைவு மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக சராசரி தனிநபர் நுகர்வு $47 உடன் ஒப்பிடும் போது, மருத்துவ சாதனங்களுக்கான தனிநபர் செலவினங்களில் இந்தியா மிகக் குறைந்த $3 இல் உள்ளது.
மேலும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் தனிநபர் நுகர்வு $415 ஆகவும் ஜெர்மனி $313 ஆகவும் உள்ளது. இதை விட இந்தியா கணிசமாகக் குறைவாக உள்ளது.
வரைவுக் கொள்கையின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகள் என்னென்ன?
உள்ளூர் ஆதாரங்களை ஊக்குவித்தல், தொழிற்சாலைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவித்தல், விற்பனையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் மையக் குழுவை உருவாக்குதல் உள்ளிட்டவை கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களை உள்ளடக்கிய கூட்டு ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஒரு பிரத்யேக நிதியை ஒதுக்கவும் இது முன்மொழிகிறது. அனைத்து குடிமக்களுக்கும் மலிவு விலையில் தரமான மற்றும் பயனுள்ள மருத்துவ சாதனங்களை கிடைக்கச் செய்வதற்கு, ஒரு ஒத்திசைவான விலை நிர்ணயம் செய்வதற்கான கட்டமைப்பையும் இது இணைக்கும்.
மருத்துவ சாதனங்கள் துறை எவ்வளவு பெரியதாக இருக்கும்?
2047 ஆம் ஆண்டில், இந்தியா 25 பில்லியன் டாலர் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், மருத்துவ சாதனங்கள் துறையில் 10-12 சதவீத உலகளாவிய சந்தைப் பங்கை அடைந்து $100-300 பில்லியன் தொழில்துறையை அடையும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் மருத்துவ சாதனங்கள் தயாரிப்பை ஊக்குவிக்கும் மற்ற நடவடிக்கைகள் என்ன?
போதிய உள்கட்டமைப்பு, உள்நாட்டு விநியோகச் சங்கிலி மற்றும் தளவாடங்கள், அதிக நிதிச் செலவு போன்ற காரணங்களால், இந்தியாவில் உள்ள மருத்துவ சாதனத் துறையானது, போட்டியிடும் பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது, மற்ற நாடுகளுக்கு இடையே, உற்பத்தி இயலாமையால் கணிசமாக பாதிக்கப்படுகிறது என்று மத்திய அரசு குறிப்பிடுகிறது.
உயர்தர மருத்துவ சாதனங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதற்காக உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை (பிஎல்ஐ திட்டம்) கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், சிடி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ இயந்திரங்கள் போன்ற சாதனங்களை தயாரிப்பதற்காகவும், டயாலிசர்கள், அனஸ்தீசியா யூனிட் வென்டிலேட்டர்கள், டிரான்ஸ்கேட்டர், ஸ்டென்ட்கள் போன்றவற்றை தயாரிப்பதற்காகவும் ரூ.730 கோடி மதிப்பிலான உற்பத்திக்கு ஒப்புதல் அளித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil