Advertisment

கர்நாடகா பசுவதை தடுப்புச் சட்டம்: பா.ஜ.க.,வின் தடையை திரும்பப் பெறும் காங்கிரஸ் திட்டம் சர்ச்சையாவது ஏன்?

கர்நாடகாவில் பா.ஜ.க அரசு கொண்டு வந்த பசுவதை தடைச் சட்டத்தை திரும்ப பெறும் நடவடிக்கை; கவனமாக அடியெடுத்து வைக்கும் காங்கிரஸ்

author-image
WebDesk
New Update
gaushala

கர்நாடகாவில் பா.ஜ.க அரசு கொண்டு வந்த பசுவதை தடைச் சட்டத்தை திரும்ப பெறும் நடவடிக்கை; கவனமாக அடியெடுத்து வைக்கும் காங்கிரஸ் (பிரதிநிதித்துவ படம்)

Johnson T A

Advertisment

கர்நாடகாவில் பசுவதைக்கு கிட்டத்தட்ட முழுத் தடை விதிக்கும் வகையில், முந்தைய பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட கர்நாடகா வதை தடுப்புச் சட்டம், 2020, தற்போது சர்ச்சையின் மையமாக உள்ளது, இப்போது புதிதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி இந்த சட்டத்தை திரும்பப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சி 2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவும், தேர்தல் பிரச்சாரத்தின் போதும், ​​2020 சட்டத்தால் நோய்வாய்ப்பட்ட மற்றும் பலனளிக்காத கால்நடைகளின் வணிகத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு பசுவதைத் தடையை திரும்பப் பெற விரும்புவதாக சுட்டிக்காட்டியது.

இதையும் படியுங்கள்: இங்கிலாந்து செல்ல அதிஷிக்கு அனுமதி: மாநில அமைச்சர்கள் வெளிநாடு செல்ல மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்; ஏன்?

காங்கிரஸ் அரசாங்கத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் புதிய அமைச்சரான கே.வெங்கடேஷ், “காளைகளையும் எருமைகளையும் வெட்டலாம் என்றால், ஏன் பசுக்களை வெட்டக்கூடாது?” என்று கட்சியின் நோக்கத்தை சுட்டிக்காட்டியதை அடுத்து, பிரச்னை சமீபத்தில் தலைப்புச் செய்தியானது.

இந்த கருத்துக்கள் இந்து கலாச்சாரத்தில் பசுவின் புனிதத்தன்மையை வலியுறுத்தும் எதிர்க்கட்சியான பா.ஜ.க.,வின் எதிர்ப்பை கொண்டு வந்தது, மேலும் 2020 சட்டத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றால் உரிய விவாதத்திற்கு பிறகே மேற்கொள்ளப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவை விளக்கம் அளிக்க கட்டாயப்படுத்தியது. காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, வியாழன் அன்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

கர்நாடகா வதை தடுப்பு மற்றும் பசுக்களைப் பாதுகாத்தல் சட்டம், 2020 என்றால் என்ன?

எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியில் அப்போதைய ஆளும் பா.ஜ.க அரசாங்கத்தால் மாநில சட்டமன்றம் மற்றும் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த சட்டம் 2021 இல் நடைமுறைக்கு வந்தது. கர்நாடகாவில் அனைத்து வகையான கால்நடைகளையும் வெட்டுவதைக் கட்டுப்படுத்தும் கடுமையான சட்டம் இது.

2020 ஆம் ஆண்டு சட்டம், 1964 முதல் மாநிலத்தில் இருந்து வரும் குறைவான கடுமை கொண்ட கர்நாடகா பசு வதை மற்றும் பசுப் பாதுகாப்புச் சட்டம், 1964ஐ ரத்து செய்து மாற்றியது. 1964 ஆம் ஆண்டு சட்டம் "பசு மாடு அல்லது பெண் எருமை கன்றுகளை" கொல்வதை தடை செய்தாலும், தகுதியான அதிகாரியால் சான்றளிக்கப்பட்டால், 12 வயதுக்கு மேற்பட்ட, இனப்பெருக்கம் செய்ய இயலாத, நோய்வாய்ப்பட்டதாக கருதப்பட்ட காளை மாடுகளையும், ஆண் அல்லது பெண் எருமைகளையும் வெட்ட அனுமதித்தது.

கர்நாடகா வதை தடுப்பு மற்றும் பசு மாடுகளை பாதுகாத்தல் சட்டம், 2020ன் கீழ், பசு மாடு, பசுவின் கன்று மற்றும் காளை, எருது மற்றும் எருமை ஆகியவை கால்நடை என குறிப்பிடப்பட்டு, அவற்றை வெட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. 13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகள், மருத்துவ ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் கால்நடைகள், நோய் பரவாமல் தடுக்க கால்நடை மருத்துவரால் படுகொலை செய்யப்பட்ட கால்நடைகள் மற்றும் மிகவும் நோய்வாய்ப்பட்ட கால்நடைகள் ஆகியவை மட்டுமே விதிவிலக்குகள்.

புதிய சட்டத்தில், சட்டத்தை மீறுவோருக்கு மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கும் வகையில் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 1964 சட்டத்தின்படி, அதிகபட்ச தண்டனையாக ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

புதிய சட்டம், சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு செல்வது, இறைச்சி விற்பனை செய்தல் மற்றும் இறைச்சிக்காக மாடுகளை வாங்குவது அல்லது கொண்டு செல்வது ஆகிய குற்றங்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கிறது.

பா.ஜ.க ஏன் கர்நாடகாவில் இவ்வளவு கடுமையான சட்டத்தை கொண்டு வந்தது?

பசு வதைக்கு தடை என்பது பா.ஜ.க.,வின் முக்கிய ஆதரவு தளமாக உள்ள ஆர்.எஸ்.எஸ் (RSS), விஸ்வ ஹிந்து பரிஷித் (VHP) போன்ற வலதுசாரி இந்துத்துவா குழுக்களின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்தக் குழுக்கள் கால்நடைகளை குறிப்பாக பசுவை, விவசாயச் சூழலில் அல்லாமல் மத ரீதியாகப் பார்க்கின்றன.

2008 முதல் 2013 வரை கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது, ​​கர்நாடகா வதை தடுப்பு மற்றும் பசுக்களைப் பாதுகாத்தல் மசோதா, 2010, பி.எஸ் எடியூரப்பா தலைமையிலான அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் 2010 ஆம் ஆண்டு சட்டம் ஆளுநரின் ஒப்புதலைப் பெறவில்லை, மேலும் 2013 இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, குறைவான கடுமை கொண்ட 1964 சட்டத்திற்கு மாற்றியது. 1964 சட்டம் வரையறுக்கப்பட்ட அடிப்படையில், அதாவது குறிப்பாக வயதான, நோய்வாய்ப்பட்ட அல்லது பண்ணைகளில் உற்பத்தி செய்ய இயலாது என வகைப்படுத்தப்பட்ட கால்நடைகளை வெட்டுவதை அனுமதித்தது.

2019 இல் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க.,வின் பசு பாதுகாப்புப் பிரிவு, முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்ட 2010 சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தக் கோரி முதல்வர் பி.எஸ் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியது.

“2010 ஆம் ஆண்டு முதலமைச்சராக நீங்கள் கர்நாடகா வதை தடுப்பு மற்றும் பசுக்களைப் பாதுகாத்தல் மசோதா, 2010ஐ இயற்ற முயற்சித்தீர்கள். சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. சித்தராமையா அரசாங்கம் பின்னர் மசோதாவை திரும்பப் பெற்றது, ”என்று பா.ஜ.க பசு பாதுகாப்பு பிரிவு முதல்வருக்கு ஆகஸ்ட் 27, 2019 தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளது.

"இப்போது மீண்டும் கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்துள்ளது, மாநில சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க, பசுவதைத் தடைச் சட்டம் மற்றும் 2010-ல் இயற்றப்பட்டதை விடக் கடுமையான சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கூறியுள்ளது. இந்த விவகாரத்தை அரசாங்கம் ஆராய வேண்டும். மேலும் மாநில சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 2020 இல், பா.ஜ.க அரசாங்கம் கர்நாடகா வதை தடுப்பு மற்றும் பசுக்களைப் பாதுகாத்தல் மசோதா 2020 ஐ மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது, அதே நேரத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் வெளிநடப்பு செய்தன. மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்ட விதத்தின் பின்னணியில், பா.ஜ.க.,வால் சட்டமன்றம் செயல்படுவதற்கான கொள்கைகள் கடுமையாக மீறப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

“மாடுகளை அறுப்பதைத் தடைசெய்வது மற்றும் கால்நடைகளின் இனங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக கர்நாடக பசு வதை மற்றும் பசுப் பாதுகாப்புச் சட்டம், 1964-ஐ ரத்து செய்வது அவசியமாகக் கருதப்படுகிறது மற்றும் ஒரு விரிவான சட்டத்தை இயற்றுவதன் மூலம் இந்திய அரசியலமைப்பின் 48 வது பிரிவின்படி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை ஒழுங்கமைக்க முயற்சிக்கிறது,” என புதிய சட்டம் அறிமுகத்திற்கான காரணங்களை அதன் அறிக்கையில் கூறியது.

பிப்ரவரி 2021 இல், காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் ஆகியவற்றின் கூட்டு பலத்தை விட பா.ஜ.க.,வுக்கு குறைவான உறுப்பினர்கள் இருந்தபோதிலும், சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இரண்டு கட்சிகளும் மீண்டும் ஒருமுறை மசோதாவை எதிர்த்தன, காங்கிரஸ் தலைவர் பி.கே.ஹரிபிரசாத், பசுக் கொலையில் பா.ஜ.க இரட்டை நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளது, ஒன்று கேரளா, கோவா, மணிப்பூர் மற்றும் மேகாலயா போன்ற மாநிலங்களில் பசு படுகொலையை ஆதரிக்கிறது, மற்றொன்று பிற இடங்களில் படுகொலையை எதிர்க்கிறது, என்று கூறினார்.

2020 சட்டத்தின் விளைவுகள் என்ன?

விவசாயப் பொருளாதாரம் 2020 சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக தெற்கு கர்நாடகாவில், பால் பண்ணை மற்றும் விவசாயத்தின் அடிப்படையில் கால்நடைகள் வாழ்வாதாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பசு வதை தடை தொடர்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், மேலும் பா.ஜ.க.,வின் பசுக்கொலை தடையால் கால்நடைகள் நோய்வாய்ப்படும்போது அல்லது பராமரிக்க முடியாத நிலை ஏற்படும்போது விவசாயிகள் மாற்று வழிகளை இழந்துள்ளதாக விவசாய சமூகங்களில் பரவலான புகார்கள் எழுந்துள்ளன.

பசு வதை தடைக்கு எதிராக விவசாய சமூகத்தில் மறைந்துள்ள கோபம், உரங்கள் மற்றும் தீவனங்களின் அதிக விலை உட்பட பா.ஜ.க ஆட்சியின் பிற அம்சங்களுடன் இணைந்தது, இது 2023 தேர்தலில் பா.ஜ.க தோல்வியில் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது.

பாரம்பரிய மாட்டுச் சந்தைகள் மெதுவாக மூடப்பட்டு வருகின்றன, மேலும் கால்நடைகளை வாங்க சில வணிகர்களே இருக்கின்றனர். மேலும், கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு இறைச்சிக்காக மாடுகளை கொண்டு செல்வதைத் தடுக்க, வலதுசாரி பசு காவலர்கள் அதாவது புதிய சட்டத்தின் கீழ் பலம் பெற்றவர்கள், தங்கள் கைகளில் சட்டத்தை எடுத்துக் கொண்ட சம்பவங்களும் உள்ளன.

"பசுக்கொலை மீதான தடை சுற்றுச்சூழல் அமைப்புக்கு நன்மை பயக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது, ஆனால் அது எதுவும் செய்யவில்லை. கால்நடைகள் உற்பத்தி செய்யவில்லை என்றால் விவசாயிகள் ஆரம்பத்திலே விற்பனை செய்வார்கள் ஆனால் இப்போது அதை செய்ய முடியாது. கால்நடைகளை சந்தைகளில் விற்க முடியாது, ஏனெனில் விவசாயி மீது வழக்கு பதிவு செய்யப்படும், ”என்று தற்போதைய காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா 2023 பிப்ரவரியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தப்போது கூறினார்.

“பசு வதை சட்டத்தை நீக்குங்கள், அது ஒரு மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் மற்றும் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலாகும். நோய்வாய்ப்பட்ட மற்றும் வயதான கால்நடைகளை வாங்க வணிகர்கள் இல்லை. விவசாயிகளுக்கு நஷ்டம்,'' என்று சித்தராமையா அப்போது கூறினார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசு என்ன செய்யப்போகிறது?

2023 கர்நாடக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, “பா.ஜ.க அரசால் இயற்றப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்வது மற்றும் விவசாயிகள் மீதான அரசியல் உள்நோக்கம் கொண்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவது”.

பசு வதைத் தடைச் சட்டம் 2020, கர்நாடக விவசாயப் பொருள் விற்பனை (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) (திருத்தம்) சட்டம் 2020 மற்றும் கர்நாடக நிலச் சீர்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் 2020 போன்ற “விவசாயிகளுக்கு எதிரான” சட்டங்களை ரத்து செய்வதற்கு குரல் கொடுத்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, பசு வதைச் சட்டம், ஏ.பி.எம்.சி சட்டம் மற்றும் நிலச் சீர்திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கான திருத்தங்களுக்கான கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்வேன் என்று சமீபத்தில் விவசாயிகள் பிரதிநிதிகளிடம் கூறினார்.

காங்கிரஸ் 1964 ஆம் ஆண்டு சட்டத்தை திரும்பப் பெற முயல்கிறது, இது பசுக்களை வெட்டுவதற்கு தடை விதித்தது, ஆனால் முதுமை, நோய் மற்றும் உற்பத்தித்திறன் குறைபாடு போன்ற காரணங்களால் மற்ற வகை மாடுகளை வெட்டுவதற்கு விதிமுறைகளுடன் அனுமதி அளித்தது. இந்த நடவடிக்கையை மதப் பிரச்சினையாக இல்லாமல், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வாழ்வுக்கு முக்கியமானதாக காங்கிரஸ் கட்சி முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“அவர்கள் (பா.ஜ.க) ஒரு முறை திருத்தம் செய்தார்கள். முந்தைய விதிமுறைகளுக்கு மாற்றியுள்ளோம். அதை மீண்டும் திருத்தியுள்ளனர். அமைச்சரவை கூட்டத்தில் விவாதிப்போம்” என கர்நாடக முதல்வர் சித்தராமையா சமீபத்தில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் பா.ஜ.க.,வின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ளக்கூடும், மேலும் சட்டமன்றத்தில் கட்சியின் எண்ணிக்கையில் பலம் இருந்தாலும் எச்சரிக்கையுடன் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 2020 சட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை வட இந்தியாவில் காங்கிரஸ் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று சில கவலைகள் உள்ளன, அங்கு இந்த நடவடிக்கை விவசாயப் பொருளாதாரத்தின் உண்மைகளுடன் தொடர்பில்லாத ஒரு மத அர்த்தத்தைப் பெறலாம்.

பசு வதை தடை விவகாரத்தில் காங்கிரஸ் மத்திய தலைமை "தனது வரம்புக்குள் இருக்க வேண்டும்" என புதிய காங்கிரஸ் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது, பா.ஜ.க.,வால் இயற்றப்பட்ட "விவசாயிகளுக்கு எதிரான" சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் ஒரு அளவீட்டு அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka Bjp Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment