Kerala’s SilverLine: சிலவர் லைன் எனப்படும் செமி ஹைஸ்பீட் ரயில்வே திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மக்கள் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் இயக்கப்படும் ரயிலானது மணிக்கு 200 கி.மீ வேகத்தில் செல்லக் கூடும் என்றும் இந்த திட்டம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் துவங்கி, கேரளம் முடியும் தெற்குப் பகுதி வரை அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ரூ. 63,940 கோடி மதிப்பில் முன்மொழியப்பட்டுள்ள இந்த திட்டம் பினராயி விஜயனால் அறிமுகம் செய்யப்பட்ட மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
சில்வர்லைன் திட்டம் என்றால் என்ன?
தெற்கில் திருவனந்தபுரத்தையும் வடக்கில் காசர்கோடையும் இணைக்கும் 529.45 கிமீ திட்டம் இது. 11 மாவட்டங்களில் உள்ள 11 ரயில் நிலையங்களை இது இணைக்கும். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் ஒருவர் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோட்டிற்கு நான்கு மணி நேரத்திற்கு குறைவான நேரத்தில் செல்ல முடியும். ஏற்கனவே இருக்கும் ரயில் பாதைகளை பயன்படுத்தி பயணம் செய்தால் தெற்கில் இருந்து வடக்கில் உள்ள காசர்கோடு செல்ல 12 மணி நேரம் ஆகும். கேரள ரயில் மேம்பாட்டுக் கழகம் (KRDCL) செயல்படுத்தும் திட்டத்திற்கான காலக்கெடு 2025 ஆகும். KRDCL அல்லது K-Rail என்பது கேரள அரசும் மத்திய அரசும் பெரிய ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டு முயற்சியாகும்.
ஆதார் இணைப்பு முடிந்தது; பொது வாக்காளர் பட்டியல் திட்டத்தை கொண்டு வர முனைகிறதா அரசு?
சில்வர்லைன் திட்டத்தை நிறைவேற்ற என்ன தேவை?
நகர்புற கொள்கை நிபுணர்கள், வருங்கால தேவைகளை கேரளாவில் தற்போது இருக்கும் ரயில் நிலையங்கள் மற்றும் அமைப்புகள் பூர்த்தி செய்யாது என்று நீண்ட நாட்களாக கூறி வருகின்றனர். பொதுவாக அனைத்து ரயில்களும், தற்போது உள்ள பாதியில் இருக்கும் வளைவுகள் மற்றும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக மணிக்கு 45 கி.மீ வேகத்தில் மட்டுமே பயணிக்கின்றன. சில்வர்லைன் திட்டமானது தற்போதுள்ள பாதையில் கணிசமான போக்குவரத்தை எடுத்துக் கொண்டு மக்களுக்கு விரைவான ரயில்வே சேவைகளை வழங்கும் என்றும், சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் குறைக்கப்பட்டு விபத்துகளை குறைக்கும் என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்த ரயில்வே திட்டம் பசுமையக வாயுக்கள் வெளியீட்டை குறைத்து ஆர்.ஓ. – ஆர்.ஓ. சேவைகளை அதிகரிக்க உதவும் என்றும், வேலைவாய்ப்பினை உருவாக்கி தரும் என்றும், விமான நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஹப்களை ஒருங்கிணைக்க உதவும் என்றும், மேலும் அது கடந்து செல்லும் நகரங்களின் விரைவான வளர்ச்சிக்கு உதவும் என்றும் அரசாங்கம் கூறுகிறது.
இதன் சிறப்பம்சங்கள் என்ன?
கே-ரயில் இந்த திட்டத்தின் கீழ் இயக்கப்படும் ரயில்கள் எலெக்ட்ரிக் மல்பிடிள் யூனிட் வகையை சார்ந்தவை. ஒவ்வொரு ரயிலும் 9 முதல் 12 பெட்டிகளை கொண்டிருக்கும். பிசினஸ் மற்றும் ஸ்டேன்டர்ட் க்ளாஸ் பகுதிகளை கொண்ட இந்த ரயில்களில் 675 நபர்கள் பயணிக்க முடியும்.. இதன் அதிகபட்ச வேகம், ஸ்டேன்டர்ட் காஜ் ட்ராக்கில் மணிக்கு 220 கி.மீ ஆகும். திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு அல்லது காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் செல்ல 4 மணி நேரமே எடுத்துக் கொள்ளும் என்று கூறுகிற்றது.
இந்த திட்டத்தின் படி ரயில்வே பாதை அமைக்கும் பணி திருவனந்தபுரத்தில் துவங்கி, கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், கொச்சி விமான நிலையம், திருச்சூர், திரூர், கோழிக்கோடு, கண்ணூர் போன்ற இடங்களில் ரயில் நிலையங்கள் அமைத்து இறுதியில் காசர்கோட்டில் முடியும். இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் அமைக்க கொச்சி சர்வதேச விமான நிலையம் ஏற்கனவே 1 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது.
11 நிலையங்களில், மூன்று ரயில்நிலையங்கள் எலவேட் செய்யப்படும் (திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர்). கோழிக்கோட்டில் நிலத்தின் கீழ் அண்டர் கிரௌண்ட் ரயில்நிலையமாக செயல்படும். மற்றவை தரநிலையில் உயர்த்தப்படும். ஒவ்வொரு 500 மீட்டர்களுக்கும் இடையே சர்வீஸ் ரோடுகளுடன் கீழ்ப்பாதைகள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?
இதற்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து, நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது. கையகப்படுத்த வேண்டிய 1,383 ஹெக்டேரில், 1,198 ஹெக்டேர் தனியார் நிலமாக இருக்கும். அரசின் மத்திய முதலீட்டுப் பிரிவான கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்திடம் (KIIFB – Kerala Infrastructure Investment Fund Board ) இருந்து ரூ.2,100 கோடி பெறுவதற்கான நிர்வாக அனுமதிக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நிலம் கையகப்படுத்தும் முதல் கட்ட பணியில் வருவாய்த்துறையினர் மற்றும் கே-ரயில் அதிகாரிகள் களத்தில் இறங்கி, நிலம் வரையறை செய்து கற்கள் பதிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும், எவ்வளவு மக்கள் இடம் பெயர நேரிடும் என்பதை அறிய இது உதவும் என்பதால் அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் விஜயன், தனிப்பட்ட தலையீட்டின் கீழ் தேவையான அனைத்து அனுமதிகளையும் வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு திட்டத்திற்கு கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது. கேரள அரசு, மத்திய அரசு மற்றும் பலதரப்பு கடன் வழங்கும் நிறுவனங்களின் கடன்கள் ஆகியவற்றின் மூலம் இந்த ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிநவீன தொழில்நுட்பத்தில் நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலெஸ்கோப் – சிறப்பம்சங்கள் என்ன?
இந்த திட்டத்திற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது?
காங்கிரஸ், பிஜேபி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) போன்ற அரசியல் கட்சிகளும், கே-ரயில் சில்வர் லைன் விருத்த ஜனகீய சமிதி போன்ற அமைப்புகளும் தனித்தனியாக போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். 17 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனுவில், இந்த திட்டம் ஒரு மிகப்பெரிய மோசடி என்றும், இது மாநிலத்தை மேலும் கடனுக்குள் மூழ்கடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பப்பட்ட மனுவில், இந்த திட்டம் நிதி ரீதியாக சாத்தியமற்றது என்றும் 30,000 குடும்பங்கள் இடம்பெயர்வதற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சமிதி மற்றும் பசுமை ஆர்வலர்கள் சில்வர்லைன் அதன் பாதை விலைமதிப்பற்ற சதுப்பு நிலங்கள், நெல் வயல்கள் மற்றும் மலைகள் வழியாக செல்வதால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
ரயில் பாதையின் இரண்டு பகுதிகளிலும் தடுப்பணைகள் உருவாக்கப்படும் என்று கூறுவது இயற்கையான வடிகால் பாதைகளை தடுக்க வழிவகை செய்யும் என்றும் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது. சூழலியல் நிபுணர்களின் மன்றமான கேரள பரிஸ்திதி ஐக்ய வேதி, திட்டத்தைக் கைவிட்டு, நிலையான தீர்வுகளை ஆராயுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
பாஜகவில் இணைந்த முன்னாள் டெல்லி மெட்ரோ தலைவர் இ.ஸ்ரீதரன், இந்த திட்டத்தை தவறான கருத்தாக்கம் என்றும் தவறான முன்மொழிவு என்றும் கூறியுள்ளார். தற்போதைய முன்மொழிவில் நிறைய திருத்தங்கள் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil