Advertisment

உயரும் கச்சா எண்ணெய் விலை; அடுத்து என்ன?

எண்ணெய் உற்பத்திகாக ஒரு நாடு செய்யும் செலவும் இதில் முக்கிய பங்காற்றுகிறது. எண்ணெய் உற்பத்தியில் புதிய போட்டியாளராக களம் கண்டுள்ள அமெரிக்கா ஒரு பீப்பாய் எண்ணெய் உற்பத்திக்கு 40 அமெரிக்க டாலர்கள் செலவிடுகிறது. ரஷ்யாவும் சவுதியும் முறையே 20 மற்றும் 15 டாலர்களை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்திக்காக செலவிடுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Looming oil crisis What now

Udit Misra 

Advertisment

Looming oil crisis What now: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தீவிரம் அடைந்து வருகின்ற நிலையில், ரஷ்யாவின் அனைத்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியை அமெரிக்காவில் தடை செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செவ்வாய் அன்று அறிவித்தார். இங்கிலாந்து நாடும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவின் அனைத்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் நிறுத்த இருப்பதாக அறிவித்தது.

இந்த அறிவிப்பு கச்சா எண்ணெய் விலையை மேலும் உயர்த்தும். உலக நாடுகள் முழுவதும் பண வீக்கத்தினை இந்த விலை உயர்வு அதிகரிக்கும். குறிப்பாக அமெரிக்கா மற்றும் இதன் ஐரோப்ப கூட்டணி நாடுகளில் இந்த முடிவுகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு பண வீக்கம் அதிகரித்திருக்கின்ற நிலையில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரும் ஏற்றுமதியாளருமான ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டிருக்கும் இத்தடைகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தடை விதிக்கப்பட்ட நிலையில், உற்பத்தி மற்றும் விநியோகம் - தேவைக்கு இடையே உருவாக இருக்கும் இடைவெளியை நிரப்ப இயலுமா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது. நிரப்ப முடியும் என்கிற பட்சத்தில் எவ்வளவு விரைவாக, எவ்வளவு தூரத்திற்கு ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு மாற்று வழங்க இதர நாடுகளால் முடியும்? என்ற கேள்வியும் அடுத்து எழுகிறது.

அமெரிக்காவைக் காட்டிலும் ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயு தேவைக்காக ரஷ்யாவை அதிகம் நம்பியுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு அதன் வெளிநாட்டுக் கொள்கைக்கும் அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுக்கும் இடையே பிளவை உருவாக்குமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இந்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறது இந்த சிறப்புக் கட்டுரை.

publive-image

உக்ரைன் விவகாரத்திற்கு முன்பும் கச்சா எண்ணெய் விலையில் உயர்வு இருந்தது. இதற்கான காரணங்கள் என்ன?

கடந்த இரண்டு ஆண்டுகளாக கச்சா எண்ணெய்யில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. 2020ம் ஆண்டின் துவக்கத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 60 அமெரிக்க டாலர்களாக இருந்தது. கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்ட தேவை குறைவு காரணமாக, ஏப்ரல் மாதம் 2020ம் ஆண்டு 20 டாலர்கள் வரை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை உக்ரைன் நெருக்கடி காரணமாக மேலும் அதிகரித்தது.

உலக அளவில் விநியோகத்தைக் காட்டிலும் கச்சா எண்ணெய் தேவை அதிகமாக உள்ளது. விநியோகத்தில் உள்ள சில விவகாரங்களும் இந்த இடைவெளிக்கு காரணமாக அமைகின்றன என்று கூறுகிறார் சென்டர் ஃபார் சோசியல் அண்ட் எக்கானிமிக் அமைப்பின் தலைவரான விக்ரம் எஸ். மேத்தா.

ஐரோப்பாவிற்கு கூடுதலாக இயற்கை எரிவாயுவை வழங்குவதை நிறுத்தியுள்ளது ரஷ்யா.

இயற்கை எரிவாயு விலை உயர்ந்த நிலையில் மக்கள் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் பக்கம் திரும்ப அதன் விலையும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

புதுப்பிக்க இயலாத எரிபொருள்கள் மீது பொது மற்றும் ஒழுங்குமுறை வெறுப்பின் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு மீது தொடர்ந்து குறைந்த அளவில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

நீங்கள் விரும்பும் போது கூடுதலாக உங்களுக்கு எண்ணெய் வழங்கப்பட மாட்டாது.

மேலும் அங்கே மட்டுப்படுத்தப்பட்ட உதிரி திறன் தான் ஒபெக் அமைப்பில் உள்ளது. சவுதி மற்றும் அமீரகம் போன்ற நாடுகளில் மட்டுமே உதிரி திறன் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் இதில் திறம்பட செயல்படுவது குறித்து சிந்தித்து வருகின்றனர்

என்று எண்ணெய் விலை உயர்வுக்கான காரணங்களையும் விநியோகம் - பயன்பாட்டு தேவைக்கும் இடையே இருக்கும் இடைவெளி குறித்து பட்டியலிட்டார்.

ஏற்கனவே எண்ணெய் சந்தை மிகவும் நெருக்கடியாக இருக்கின்ற சூழலில் அமெரிக்காவின் தடை அமலுக்கு வந்துள்ளது.

உலக எண்ணெய் சந்தையில் ரஷ்யாவின் பங்கு என்ன?

உலக அளவில் மூன்று மிகப்பெரிய நாடுகள் எண்ணெய் சந்தையின் தலையெழுத்தை மாற்றி எழுதுகின்றன என்று கூறுகிறார் க்ரிசில் ரிசர்ச் நிறுவனத்தின் இயக்குநர் ஹேத்தல் காந்தி. உலக அளவில் அமெரிக்கா எண்ணெய் உலகில் 18 முதல் 19% வரை பங்குகளை கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா நாடுகள் தலா 12% பங்குகளைக் கொண்டுள்ளது. ஒபெக் அமைப்பைப் பொறுத்தமட்டிலும் சவுதி அரேபியா எழுதுவதே சட்டம். மூன்று நாடுகளின் ஒட்டுமொத்த பங்களிப்பும் எண்ணெய் உலகில் 45% பங்குகளைக் கொண்டுள்ளது. எனவே ரஷ்யாவின் பங்கு இதில் மிக முக்கியமான ஒன்றாகும்.

ரஷ்யாவின் உலக அளவிலான ஏற்றுமதி மட்டும் 12% ஆகும். ஒவ்வொரு நாளும் உலக சந்தையில் கிட்டத்தட்ட 5 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்களை விநியோகம் செய்கிறது. இது ஒன்றும் குறைவான அளவு என்று கருதமுடியாது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் இந்த அறிவிப்பானது உடனடியாக சந்தை உலகில் நெருக்கடியை உருவாக்கும் என்று விக்ரம் கூறினார்.

இவரின் இந்த கருத்தை ஒப்புக் கொண்ட ஹேத்தல் இதில் உள்ள மேலும் சில நுணுக்கமான பிரச்சனைகள் குறித்து பேசினார். எவ்வளவு இறக்குமதி செய்கிறார்கள் என்பதோடு அந்த கச்சா எண்ணெய் தன்மை, உற்பத்தி மற்றும் இறக்குமதிக்கான செலவு ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ரஷ்ய எண்ணெய்யோடு ஒப்பிடும் போது வெனிசுலா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயில் அதிக அளவில் மாசுக்கள் இடம் பெற்றிருக்கும். இதனை சுத்தகரிக்க மிகவும் நுட்பமான சுத்தகரிப்பு நிலையங்கள் தேவைப்படுகின்றன என்று மேற்கோள்காட்டினார் ஹேத்தல்.

எண்ணெய் உற்பத்திகாக ஒரு நாடு செய்யும் செலவும் இதில் முக்கிய பங்காற்றுகிறது. எண்ணெய் உற்பத்தியில் புதிய போட்டியாளராக களம் கண்டுள்ள அமெரிக்கா ஒரு பீப்பாய் எண்ணெய் உற்பத்திக்கு 40 அமெரிக்க டாலர்கள் செலவிடுகிறது. ரஷ்யாவும் சவுதியும் முறையே 20, 15 டாலர்களை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்திக்காக செலவிடுகிறது.

எனவே சந்தையில் ரஷ்யா இரண்டாவது மிகப்பெரிய நாடாக இருக்கின்ற அதே சமயத்தில் குறைவான ஆனால் தரமான எண்ணெய்யை வழங்கும் இரண்டாவது நாடாகவும் இது உள்ளது. இத்தகைய காரணங்கள் தான் எண்ணெய் விலை உயர்வுக்கு வழி வகுக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கையிருப்புகள் இந்த இடைவெளியை நிரப்ப உதவுமா?

அவசர காலத்தில் மட்டுமே இந்த கையிருப்பு யுக்திகள் அதிக அளவில் உதவிகரமாக இருக்கும். அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே அதிக அளவில் கச்சா பொருட்களை கையிருப்பாக வைத்திருக்கும். மொத்தமாக இந்நாடுகள் தங்களிடம் 1500 மில்லியன் பீப்பாய் எண்ணெய்களை அவசர தேவைக்காக கையிருப்பு வைத்திருக்கும். நாள் ஒன்றுக்கு 95 மில்லியன் பீப்பாய்கள் பயன்படுத்தப்படும் நிலையில் இவை 20 நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்காது என்று கூறுகிறார் ஹேத்தல். மேலும் சீனா இந்த சூழலில் உலக நாடுகளுக்கு உதவ முன்வருமா என்ற கேள்வி மிகவும் வெளிப்படையானது.

ஈரான் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகள்ளில் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க இயலுமா?

வெனிசுலா நாடு உலக அளவில் அதிக கச்சா எண்ணெய் இருப்புகளைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று. இருப்புகளைக் காட்டிலும் அதிக அளவில் உற்பத்தி தேவைப்படுகிறது. இந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி, அரசின் தவறான நிர்வாகம் மற்றும் அமெரிக்காவின் தீவிரமான பொருளாதாரத் தடைகளாலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் தற்போது கடனில் மூழ்கியுள்ளன. அவர்களிடம் சிறந்த எண்ணெய் கிணறுகள் துளையிடும் இயந்திரங்களும் இல்லை என்று ஹேத்தல் தெரிவித்தார். அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் ஈரான் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காது என்று மேத்தா தெரிவித்தார்.

உற்பத்தியை அதிகரிக்கலாம் ஆனால் அதற்கு நேரம், பணம் மற்றும் முயற்சி தேவைப்படும். மேலும், தனிப்பட்ட உற்பத்தி அளவுகள் மிகவும் குறைவாக இருப்பதால், பல நாடுகள் ஒன்றிணைய வேண்டும். ஆனால் அது ஒரு போதும் ரஷ்யாவின் இன்றைய உற்பத்திக்கு அருகில் கூட வர இயலாது என்று ஹேத்தல் தெரிவித்தார்.

ரஷ்யாவின் எரிசக்தி இறக்குமதியில் அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் சார்புக்கு வேறுபாடு உள்ளதா?

மிகப்பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. அதனால் தான் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில்கள் வேறுபடுகின்றன.

அமெரிக்கா தன்னுடைய எண்ணெய் தேவையில் 10%க்கும் குறைவாகவே ரஷ்யாவை நம்பியுள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் முற்றிலுமாக ரஷ்யாவையே தங்களின் எண்ணெய் தேவைக்காக நம்பியுள்ளன.

ஜெர்மனி தொழில்மயமான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடு மட்டுமல்ல. ஐரோப்பிய ஒன்றியத்தில் முடிவுகளை எடுக்கும் முக்கியமான உறுப்பு நாடும் கூட. ஆனாலும், ரஷ்யாவின் 12% எண்ணெய் ஏற்றுமதியில் பயன்பெறும் முக்கிய நாடாக ஜெர்மனி உள்ளது. தன்னுடைய நாட்டின் மொத்த எரிபொருள் தேவைக்காக 40% ரஷ்யாவையே ஜெர்மனி நம்பியுள்ளது. அதே போன்று இயற்கை எரிவாயு தேவைக்காகவும் ஜெர்மனி ரஷ்யாவை அதிகம் நம்பியுள்ளது. தன்னுடைய எரிசக்தி தேவைக்காக 75% நிலக்கரி, 10% கச்சா எண்ணெய் மற்றும் மிகக் குறைந்த அளவு இயற்கை எரிவாயுவை நம்பியிருக்கும் இந்தியா போன்று இல்லாமல் ஜெர்மனி 25%க்கும் அதிகமாக இயற்கை எரிவாயுவை நம்பியுள்ளது. அதுவும் ரஷ்யாவில் இருந்து தான் அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது.

இதில் அதிக சவாலானது தேவையான எரிபொருட்களை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு மாற்றுவதாகும். எல்என்ஜி (Liquid Natural Gas) வழங்குவதன் மூலம் மற்ற நாடுகள் ஜெர்மனியின் மீட்புக்கு வந்தாலும், ஜெர்மனியில் இதனை வழங்குவதற்கான குழாய் அமைப்புகள் ஏதும் இல்லை. இது நாள் வரையில் ரஷ்யாவில் இருந்து வந்த இயற்கை எரிவாயு குழாய்களையே ஜெர்மனி நம்பி இருந்தது. ஒரே நாளில் திரவ எரிவாயு முனையங்கள் மற்றும் குழாய்களை கட்டி எழுப்ப முடியாது என்று கூறினார் ஹேத்தல்.

தமிழில் : நித்யா பாண்டியன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment