1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேரில் ஒருவரும், இந்தியாவின் நீண்ட கால சிறை பெண் கைதியுமான நளினி ஸ்ரீஹரன் அல்லது நளினி முருகன், நவம்பர் 11, வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். மே 21, 1991 அன்று விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஸ்ரீபெரும்புதூரில் உயிருடன் இருந்த ஒரே குற்றவாளி நளினி மட்டுமே. 31 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் 12 அன்று அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நிலையில், யார் இந்த நளினி, நாட்டின் மிகவும் சர்ச்சைக்குரிய வழக்குகளில் ஒன்றான ராஜீவ் கொலை வழக்கில் என்ன பங்கு வகித்தார் என்பதை இங்கே பார்க்கலாம்.
யார் இந்த நளினி?
எத்திராஜ் கல்லூரியில் ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தில் பட்டம் பெற்ற நளினி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் 2016 ஆம் ஆண்டு இறந்த செவிலியர் பத்மாவதி மற்றும் காவல் ஆய்வாளர் சங்கர நாராயணன் ஆகியோருக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் மூத்தவர். பெற்றோருக்கு இடையேயான திருமண பிரச்சனையால், அவரது குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாக இல்லை. அவரது இளமைப் பருவத்தில் அவளது தந்தை பிரிந்து வாழ்வதற்காக வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையும் படியுங்கள்: ராஜீவ் கொலை வழக்கு: பயங்கரவாத குற்றவாளிகளாக உச்ச நீதிமன்றம் கருதாதது ஏன்?
வழக்கின் மற்ற குற்றவாளிகளைப் போல் நளினி அல்லது அவரது குடும்பத்தினருக்கு அரசியல் தொடர்பு இல்லை. அவரது சகோதரர் பாக்யநாதனுக்கு சில நண்பர்களுடன் இருந்த நட்புதான் முருகன் என்கிற ஸ்ரீஹரனை நளினி வீட்டிற்கு அழைத்து வந்தது. முருகன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர். பின்னர் நளினியை திருமணம் செய்து கொண்டார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினியின் பங்கு என்ன?
மே 21, 1991 அன்று, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தலுக்கு முன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் இருந்தபோது, விடுதலைப் புலிகளின் பெண் தற்கொலைக் குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்டார். தற்கொலை குண்டுதாரி என அடையாளம் காணப்பட்ட தனு, பேரணியின் போது ராஜீவ் காந்தியின் அருகில் சென்று அவரது சல்வார் கமீஸ்ஸூக்குள் அணிந்திருந்த வெடிகுண்டை வெடிக்க வைக்கும் முன், ராஜீவ் காந்தியின் கால்களைத் தொட்டு வணங்கினார். ராஜீவ் காந்தியைத் தவிர, கிட்டத்தட்ட 15 பேர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
தடா காவலில் எடுக்கப்பட்ட நளினியின் வாக்குமூலத்தில், தாக்குதலை நடத்திய சுபா மற்றும் தனு ஆகிய இரு இலங்கைப் பெண்களுக்கு அவர் அடைக்கலம் கொடுத்ததாக கூறியுள்ளார். கொலை செய்யப்பட்ட நாளில் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை வாங்க அவர்களை அழைத்துச் சென்றதாகவும், அவர்களின் திட்டத்தை முன்கூட்டியே அறிந்து இருந்ததாகவும், ராஜீவ் காந்தியின் தேர்தல் பேரணிக்கு அவர்களுடன் சென்றதாகவும் நளினி மீது குற்றம் சாட்டப்பட்டது.
சிவராசன், சுபா, தனு, புகைப்படக் கலைஞர் எஸ் ஹரிபாபு ஆகியோருடன் நளினி ஸ்ரீபெரும்புதூருக்கு பேருந்தில் பயணம் செய்தார். நளினி, சுபா மற்றும் விடுதலைப் புலிகளின் மூளையாக செயல்பட்ட சிவராசன் ஆகியோர் தனு தன்னைத் தானே வெடிக்கச் செய்துக் கொண்ட பின் தப்பிவிட்டனர் என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. ஹரிபாபுவும் விடுதலைப் புலிகளின் அனுதாபியாக இருந்ததால், படுகொலையை ஆவணப்படுத்துவதற்காக பணி அமர்த்தப்பட்டுள்ளார். நளினியின் ஈடுபாட்டைக் காட்டியது ஹரிபாபுவின் கேமரா.
படுகொலைக்குப் பிறகும் பல நாட்கள் தலைமறைவாக இருந்த நளினி மற்றும் முருகன் இருவரும் ஜூன் 15, 1991 அன்று சென்னை சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். சதியில் நளினியின் பங்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் கூட விவாதப் பொருளாக இருந்தாலும், ராஜீவ் கொலையாளிகளுடன் அவருக்கு இருந்த நெருங்கிய தொடர்பு அவரை வழக்கின் மையமாக வைத்தது. கைது செய்யப்பட்ட போது நளினி கர்ப்பமாக இருந்தார்.
இருப்பினும், பத்திரிகையாளர் ஏகலைவன், தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த, நளினியின் சுயசரிதை புத்தகமான ராஜீவ் படுகொலை: மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் நளினி மற்றும் பிரியங்கா சந்திப்பு, புத்தகத்தில் அந்த சம்பவத்தை விவரிக்கிறார், “நாங்கள் சாலையை நோக்கி 200 அடி நடந்திருப்போம். பெரிய வெடிச்சத்தம் கேட்டது. பட்டாசுகளை வெடித்து தலைவர்களை வரவேற்பது வழக்கம், ஆனால் இது அந்த பகுதியையே பேரழிவை ஏற்படுத்தியது. நான் திரும்பிப் பார்த்தேன், வானத்திற்கும் நிலத்திற்கும் இடையில் ஒரு நெருப்பு மற்றும் புகை பந்து. அந்த இடம் பரபரப்புடன் நிறைந்தது. மக்கள் அலறியடித்து ஓடினர். நெரிசலில் பலர் காயமடைந்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். என்ன நடந்தது என்று நான் இன்னும் அறியாமல் இருந்தேன். சிறிது நேரத்தில் சுபா நின்றாள். நான் பயத்தில் நடுங்கினேன், என் தொண்டை வறண்டு போனது. என்ன நடந்தது என்று எனக்கு இன்னும் தெரியவில்லை, ஆனால் ஏதோ தவறு நடந்துவிட்டது என்று நான் உறுதியாக நம்பினேன். மக்கள் இன்னும் பீதியில் ஓடிக்கொண்டிருந்தனர்,” என்று கூறினார்.
நளினி மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
1998ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் நளினி, முருகன் உள்ளிட்ட 26 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தது. முக்கிய சதிகாரர்கள் யாரும் உயிருடன் பிடிபடாத நிலையில், நளினியின் தாயார் பத்மாவதி மற்றும் சகோதரர் பாக்யநாதன் ஆகியோர் 1998 இல் தடா நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் அடங்குவர். அவர்கள் 1999 இல் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்; இருப்பினும், நளினி, முருகன் மற்றும் ஐந்து பேருக்கும் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
கிரிமினல் சதி மற்றும் கொலை (ஐ.பி.சி பிரிவு 120பி) கீழ் தான் தண்டிக்கப்பட்டாலும், நளினி தனது புத்தகத்தில், படுகொலை சதி பற்றி தனக்கு தெரியாது என்று கூறினார். புத்தகத்திலிருந்து ஒரு பகுதி பின்வருமாறு: “குண்டு வெடிப்புக்கு சற்று முன்பு நான் கர்ப்பமாக இருப்பதாக அவரிடம் சொன்னேன். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், அவர் என்னைத் தூக்கிக்கொண்டு நடனமாடினார். குழந்தையின் பெயர்களைக் கூட நாங்கள் விவாதித்தோம். இதை அறிந்திருந்தால் அந்த பெரிய தலைவரைக் கொல்லும் சதியில் நாங்கள் ஈடுபட்டிருந்தால், குழந்தையைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைந்திருப்போமா? நாங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க முடியுமா? பொதுக்கூட்டத்திற்கு என்னைத் தனியாக அனுப்பிவிட்டு மே 21 அன்று என் கணவர் நிம்மதியாகப் படுக்கைக்குச் சென்றிருக்க முடியுமா?”
“எந்தப் பெண்ணும் தன் முதல் கர்ப்பத்திற்கு ஆபத்தாக முடியும் என்று தெரிந்திருந்தால், அத்தகைய இடத்திற்குச் செல்வாரா? அப்போது நான் முதல் மூன்று மாதங்களில் இருந்தேன். ஒரு சிறிய அதிர்ச்சி அல்லது நீண்ட பயணம் கூட என் கர்ப்பத்திற்கு ஆபத்தானது என்று எனக்குத் தெரியும். என் அம்மாவுக்கு மருத்துவச்சியாக 25 வருட அனுபவம் உண்டு. என் கர்ப்பத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நான் எதையும் செய்திருக்க மாட்டேன், ”என்று நளினி கூறினார்.
கணவன் அவரை மூளைச் சலவை செய்துவிட்டார் என்பது நளினி மீது சுமத்தப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று. அதற்கு பதிலளிக்கும் விதமாக, அவர் தனது புத்தகத்தில், “நாங்கள் சந்தித்த நாள் முதல், எங்களுக்கு இடையே எந்த தனிப்பட்ட விஷயமும் (ஒளிவுமறைவும்) இல்லை. நாங்கள் தனிமையில் சந்தித்த நாட்களில் எங்கள் உரையாடல்கள் ஒப்புதல் வாக்குமூலங்களாக வழங்கப்பட்டன. மே 7 முதல் மே 21 பிற்பகல் வரை நாங்கள் தினமும் ஒருமுறை கூட சந்தித்துக் கொண்டதில்லை, என்று எழுதியிருந்தார்.
“மே 18 அன்று ஒரே ஒரு முறை, நாங்கள் என் கர்ப்பம் குறித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டோம். அவர் எப்படி என்னை மூளைச்சலவை செய்திருப்பார்? அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் நிரபராதி என்பதை உறுதிப்படுத்த இதுவே போதுமானது என்று நான் நினைக்கிறேன்,” என்று நளினி கூறினார்.
1999 இல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தபோது, குற்றவாளிகளுக்கான தண்டனையின் அளவு குறித்து தனித்தனியாக தீர்ப்பு வழங்கியது. 3 நீதிபதிகள் கொண்ட உச்ச பெஞ்சில் பெரும்பான்மையினர் நளினிக்கு மரண தண்டனையை உறுதி செய்த நிலையில், நீதிபதி கே.டி தாமஸ் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
சாட்சியங்களை மேற்கோள் காட்டி, நீதிபதி கே.டி.தாமஸ், நளினி ஒரு கீழ்ப்படிதலுள்ள பங்கேற்பாளர் என்றும், "தனு ராஜீவ் காந்தியைக் கொல்லப் போகிறார் என்பதை ஸ்ரீபெரும்புதூரில் தான் உணர்ந்தார்" என்றும் குறிப்பிட்டார். ஆனால் அவள் பின்வாங்கியிருக்க முடியாது, ஏனென்றால் "அவள் சதியின் கூடாரத்திற்குள் சிக்கிக்கொண்டாள்", மேலும் "சிவராசனும் சாந்தனும் தங்களுக்கு ஆதரவாக நிற்காதவர்களை கலைத்துவிட்டனர்" என்று நீதிபதி தாமஸ் எழுதினார்.
இருப்பினும், தமிழ்நாடு உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் நளினி படுகொலைச் சதியில் விருப்பத்துடன் பங்கு கொண்டதாகக் குற்றம் சாட்டின.
2000 ஆம் ஆண்டில், சோனியா காந்தியின் (ராஜீவ் காந்தியின் மனைவி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர்) தலையீட்டின் பேரில் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, 2018-ம் ஆண்டு குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.
சிறை வாழ்க்கை
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக சிறையில் கழித்த நளினி, காவலில் இருந்தபோது தனக்கு நேர்ந்த துன்புறுத்தல்கள் மற்றும் வாரக்கணக்கில் அறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதைகள் பற்றி தனது புத்தகத்தில் பேசுகிறார். ஒரு கர்ப்பிணிப் பெண்ணாக காவல்துறையின் கைகளில் தான் சந்தித்த சித்திரவதைகள் பற்றியும் அவர் கூறுகிறார்.
“என்னையும் சேர்த்து இரண்டு உயிர்களைக் கொன்றுவிட வேண்டும் என்று சில அதிகாரிகளின் வேண்டுகோள்கள் இருந்தபோதிலும், அதைச் செய்ய மறுத்த மகளிர் மருத்துவ நிபுணரை என்னால் மறக்கவே முடியாது. இன்றுவரை, நான் என் பிரார்த்தனைகளில் மகளிர் மருத்துவ நிபுணரை வைத்திருக்கிறேன், ”என்று நளினி எழுதினார்.
“இரண்டு வருடங்கள் என் மகள் என்னுடன் சிறையில் இருந்தாள், அவளுடைய தலைவிதி இப்படி ஆகிவிடக் கூடாது என்று நான் முடிவு செய்து அவளை ஒரு நண்பரின் தாயுடன் அனுப்பினேன். என் மகள் பிறப்பதற்கு முன்பே அவளை பாலியல் தொழிலில் தள்ளுவேன் என்று அதிகாரி ஒருவர் மிரட்டினார். அவள் என்ன தவறு செய்தாள்? அவளை என்னுடன் சிறையில் இருக்க நான் எப்படி அனுமதிப்பது?'' என்று புத்தகத்தின் ஒரு பகுதியில் எழுதப்பட்டிருந்தது.
சிறையில், நளினி எம்.சி.ஏ பட்டம் முடித்தார், அழகுக்கலைப் படிப்பு சான்றிதழுடன், சான்றளிக்கப்பட்ட தையல்காரர் மற்றும் யோகா பயிற்றுவிப்பாளராக உள்ளார்.
கடந்த 29 ஆண்டுகளில், நளினி இரண்டு முறை மட்டுமே வெளியே வந்துள்ளார். முதலில் 2016 இல், 12 மணிநேரம், தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, இரண்டாவது ஜூலை 2019 இல், தனது மகள் ஹரிதாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய 51 நாள் பரோல் வழங்கப்பட்டது.
நவம்பர் 27, 2019 அன்று, நளினி பிரதமர் நரேந்திர மோடி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹி மற்றும் தமிழ்நாடு உள்துறைச் செயலர் அலுவலகம் ஆகியோருக்கு கருணைக்கொலை கோரி கடிதம் எழுதினார்.
அவரது விடுதலைக்குப் பின், “நான் கைது செய்யப்பட்ட முதல் நாளிலிருந்தே, நான் என்னை விடுவிக்க முயற்சித்தேன். நான் பல பின்னடைவுகளை எதிர்கொண்டேன், என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்தேன்... ஆனால் ஒவ்வொரு முறையும், எனது முயற்சிகளை ஒரு புதிய படியாக எடுக்க முயற்சித்தேன்.” என்று நளினி கூறினார்.
பிரியங்கா காந்தியுடன் நளினி சந்திப்பு
ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி கடந்த 2008-ம் ஆண்டு நளினியை சந்திக்க வேலூர் மத்திய சிறைக்கு சென்றிருந்தார். இது குறித்து பேசிய நளினி, இது நம்பமுடியாததாக இருந்தது என்றார். "என்னை நம்ப வைப்பதற்காக நான் அவரைத் தொட வேண்டியிருந்தது... அவள் ஒரு தேவதை போல இருந்தாள்... நான் பயந்தேன்... அவள் தன் தந்தையின் படுகொலையைப் பற்றி என்னிடம் கேட்க விரும்பினாள். அவள் அழுதாள். எனக்குத் தெரிந்த அனைத்தையும் அவளிடம் சொன்னேன். அவள் திரும்பி சென்ற பிறகு, நான் பயந்தேன். அவள் பாதுகாப்பாக (டெல்லிக்கு) திரும்புவதற்காக நான் பிரார்த்தனை செய்து உண்ணாவிரதம் இருந்தேன்,” என்று நளினி கூறினார்.
தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நளினி, ஒரு கேள்விக்கு பதிலளித்தார், இந்த விஷயத்தைப் பற்றி தனக்குத் தெரிந்ததை பிரியங்கா காந்தியிடம் சொன்னதாகக் கூறினார். பிரியங்கா வலுவாக இருந்தாரா அல்லது "உணர்ச்சியில் அழுதாரா" என்று கேட்டதற்கு, "ஆம், அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக இருந்தார்" என்று நளினி கூறினார்.
எதிர்கால திட்டங்கள்
திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் சிறை முகாமில் இருந்து தனது கணவர் முருகனை முறைப்படி விடுவிப்பதும், இங்கிலாந்தில் வசிக்கும் கிரீன் கார்டுதாரரான தங்கள் மகளுடன் சேர பாஸ்போர்ட் மற்றும் விசா பெறுவதும் தனது முதல் முன்னுரிமை என்று நளினி கூறினார். நளினி தன் மகளைச் சந்தித்து அங்கேயே தங்க விரும்புகிறாள். “அதுதான் எனது முதல் முன்னுரிமை. எனது முழு குடும்பமும் அழிந்துவிட்டது... நான் அவர்களை துண்டு துண்டாக சேகரிக்க வேண்டும். அவசர கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்களுக்காக நாங்கள் இலங்கை தூதரகத்தை அணுகுவோம், இதனால் எங்கள் மகள் எங்களை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல முடியும், ”என்று நளினி கூறினார்.
மூன்று குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவை, அவர்களின் "நீதிக்கான போராட்டம்" மற்றும் விடுதலைக்கான "குறிப்பிடத்தக்க அத்தியாயம்" எனக் குறிப்பிட்ட நளினி, ஒவ்வொரு கட்டத்திலும் சட்டச் செயல்முறை பெரும்பாலும் முடிவடையாமல் இருப்பதாக கூறினார். “எங்கள் கைதுக்குப் பிறகு, விசாரணையை முடிக்க ஏழு ஆண்டுகள் ஆனது. 2014 உச்ச உத்தரவுக்குப் பிறகு, எங்கள் விடுதலைக்கு மேலும் எட்டு ஆண்டுகள் ஆனது... எங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பே, நாங்கள் அனைவரும் மரண தண்டனைக் கைதிகளைப் போலவே நடத்தப்பட்டோம் மற்றும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டோம். நான் கர்ப்பமாக இருந்தபோது எனக்கு நடக்க அனுமதி வழங்க ஒரு மருத்துவர் தலையீடு தேவைப்பட்டது, ”என்று அவர் நினைவு கூர்ந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.