Raising legal age of marriage for women : பெண்களின் திருமண வயதை 18 வயதில் இருந்து 21 வயதாக உயர்த்தி அறிவிக்கும் முடிவை இந்திய அமைச்சரவை புதன்கிழமை (டிசம்பர் 15) அன்று எடுத்தது. ஆண்களுக்கான திருமண வயது 21. அமைச்சரவையின் இந்த முடிவு ஆண் மற்றும் பெண்ணுக்கான சரியான திருமண வயது 21 என்ற நிலையை எட்டியுள்ளது.
திருமணம் செய்து கொள்ள வயதை தீர்மானிக்க காரணம் என்ன?
திருமணம் செய்து கொள்ள குறைந்தபட்ச வயதை சட்டப்பூர்வமாக கொண்டு வருவது குழந்தைகள் திருமணத்தை தடுக்கும். மேலும் சிறுவயதினர் துன்புறுத்தப்படுவது தடுத்து நிறுத்தப்படும். பல்வேறு மதங்கள் திருமணங்களை கையாள சொந்த விதிமுறைகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலும் அவர்களின் பழக்கவழக்கங்களை அது பிரதிபலிக்கும்.
இந்துக்களைப் பொறுத்தமட்டில், இந்து திருமண சட்டம் 1955 பெண் ஒருவரின் திருமண வயதை 18 ஆகவும், ஆணின் திருமண வயதை 21 ஆகவும் உறுதி செய்துள்ளது. இஸ்லாமிய மதத்தில் வயது வந்தவர்கள் திருமணம் செய்து கொள்வது செல்லுபடியாகும்.
சிறப்பு திருமண சட்டம் 1954 மற்றும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006 ஆகியவையும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு முறையே 18 மற்றும் 21 ஆண்டுகள் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதாக இருக்க வேண்டும். புதிய வயதுகள் நடைமுறைக்கு வர இந்த சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்கப்படுகிறது.
பெண்களின் திருமண வயது 18லிருந்து 21 ஆக உயர்கிறது; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
திருமண வயதை அரசு மறு பரிசீலனை செய்ய காரணம் என்ன?
பாலின நடுநிலைத் தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நரேந்திர மோடி அரசு பெண்களின் திருமண வயதை மறு பரிசீலனை செய்துள்ளது. சிறிய வயதில் திருமணம் செய்து கொள்வது, அதன் பிறகு ஏற்படும் கர்ப்பம் போன்றவை தாய் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவுகளையும், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் மனநிலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது சிசு இறப்பு விகிதம் மற்றும் தாய் இறப்பு விகிதம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மேலும் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கான அணுகலில் இருந்து இந்த திருமணங்கள் தடுத்து வைக்கிறது. 2015-2016ம் ஆண்டு இருந்த குழந்தைத் திருமணங்கள் விகிதம் 27% முதல் 2019-20 காலங்களில் 23% ஆக குறைந்துள்ளது என்று தேசிய குடும்ப சுகாதார கணாக்கெடுப்பு கூறியுள்ளது.
ஜெயா ஜெட்லி கமிட்டி என்றால் என்ன?
ஜூன் 2020-ல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை பெண்களின் ஊட்டச்சத்து, இரத்த சோகையின் பாதிப்பு, குழந்தைகள் இறப்பு விகிதம், கர்ப்பிணி பெண்கள் இறப்பு விகிதம் மற்றும் பிற சமூகக் குறியீடுகளுடன் திருமண வயதுக்கு இடையே உள்ள தொடர்பைக் கண்டறிய ஒரு பணிக்குழுவை அமைத்தது.
சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி தலைமையில் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. நிதி ஆயோக் சுகாதாரத்துறை உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால் மற்றும் சில அமைச்சகத்தின் செயலாளர்களும் இந்த கமிட்டியில் இடம் பெற்றிருந்தனர்.
திருமண வயதை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் மற்றும் பெண்களுக்கான கல்விக்கான அணுகலை எவ்வாறு அதிகரிப்பது போன்றவற்றை இந்த குழு ஆராய்ந்தது. இந்தக் குழுவானது, கொள்கையை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவையும், இது நடப்பதற்காக தற்போதுள்ள சட்டங்களில் செய்ய வேண்டிய திருத்தங்களையும் பரிந்துரைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
கமிட்டியின் பரிந்துரைகள் என்ன?
நாட்டில் உள்ள 16 பல்கலைக்கழகங்களில் படித்து வரும் இளம் சமூக உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் பெண்களுக்கான திருமண வயது 21 ஆக அதிகரித்தது. 15க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொலைதூரப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் கருத்துகளை கேட்க பயன்படுத்தப்பட்டது.
அனைத்து மதங்களைச் சேர்ந்த இளைஞர்களிடமிருந்தும், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் இருந்தும் சமமாக கருத்துக்கள் பெறப்பட்டதாக குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கான அணுகலை அதிகரிப்பது குறித்து ஆராயுமாறும் குழு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது. மேலும் இந்த கல்வி நிறுவனங்களில் பயில தொலை தூரங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் மற்றும் பாலியல் கல்வியை பள்ளியில் பாடமாக கொண்டு வருவதையும் ஜெயா ஜெட்லி கமிட்டி பரிந்துரை செய்தது.
முதலில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் இந்த சட்டம் கொண்டு வருவதில் பயன் இல்லாமல் போய்விடும் என்று கூறியது அந்த கமிட்டி. திருமண வயது அதிகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளவும், புதிய சட்டத்தை சமூக ரீதியாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும் குழு பரிந்துரை செய்துள்ளது.
திருமண வயதை உயர்த்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வைக்கப்படும் விமர்சனங்கள் என்ன?
பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் மற்றும் குடும்ப கட்டுப்பாட்டு நிபுணர்கள் பெண்களின் திருமண வயதை அதிகரிப்பது குறித்த இந்த சட்டத்திற்கு ஆதரவாக இல்லை. இது மக்கள் தொகையின் பெரும் பகுதியை சட்டத்திற்கு புறம்பாக திருமணம் செய்ய ஊக்குவிக்கும்.
பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை 18 ஆக வைத்திருந்தாலும், இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் தொடர்கின்றன என்றும், தற்போதுள்ள சட்டத்தால் அத்தகைய திருமணங்கள் குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் பெண்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மற்றுமே மாற்றங்களை தோற்றுவிக்கும் என்றும் வாதிடுகின்றனர்.
சட்டம் வலுக்கட்டாயமாக முடிவடையும் என்றும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகங்களான பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினரை எதிர்மறையாக பாதிக்கும் என்றும், அவர்களை சட்டத்தை மீறுபவர்களாக மாற்றும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil