கட்டுரையாளர்: ரவுனக் சரஸ்வத்
திருத்தப்பட்ட தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF) அடுத்த கல்வியாண்டில் நடைமுறைக்கு வந்தவுடன், மாணவர்கள் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மூன்று மொழிகளைப் படிப்பார்கள், அதில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்; மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் இரண்டு மொழிகளைப் படிப்பார்கள், அதில் ஒன்று இந்திய மொழியாக இருக்க வேண்டும்.
புதன்கிழமை வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட கட்டமைப்பானது, இந்திய மொழிகளைப் படிப்பதை பள்ளிக் கல்வியின் ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்குகிறது, மேலும் மாணவர்கள் பாடப்பிரிவுகளை பல்வேறு பாடங்களில் இருந்து தேர்வுசெய்யும் சுதந்திரத்தையும் அனுமதிக்கிறது.
இதையும் படியுங்கள்: சந்திர நிலநடுக்கம், உறைந்த நீர்: சந்திரயான் 3 மேற்கொள்ளும் சோதனைகள் என்ன?
இது தேசிய கல்விக் கொள்கை 2020ன் பார்வைக்கு இணங்க இந்திய மொழிகளில் கற்பித்தல் மற்றும் கற்றலை மேம்படுத்துதல் மற்றும் பள்ளிக் கல்வியில் அதிக இடைநிலையை சாத்தியமாக்குதல் ஆகும்.
முன்னாள் இஸ்ரோ தலைவர் கே கஸ்தூரிரங்கன் தலைமையிலான 13 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவால் உருவாக்கப்பட்ட, 640 பக்கங்கள் கொண்ட தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு வரைவின் புதுப்பிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. பாடப்புத்தகங்களை அடிப்படையாகக் கொண்ட முக்கிய ஆவணமான NCF, கடைசியாக 2005 இல் திருத்தப்பட்டது.
சில முக்கிய முன்மொழிவுகள்
வரைவைப் போலவே, திருத்தப்பட்ட NCF பள்ளிக் கல்வியை நான்கு நிலைகளாகப் பிரிக்கிறது: அடித்தளம் (பாலர் முதல் தரம் 2), தயார்நிலை (2 முதல் 5 வரை), நடுநிலை (6 முதல் 8 வரை), மற்றும் இடைநிலை (9 முதல் 12 வரை).
நடுத்தர நிலை வரை இரண்டு மொழிகளைக் கற்பிக்க பரிந்துரைக்கிறது; நடுத்தர நிலையிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை இரண்டு மொழிகளுடன் கூடுதலாக மூன்றாவது மொழியை கற்பிக்க பரிந்துரைக்கிறது. இந்த மூன்று மொழிகளில் இரண்டு "இந்தியாவின் பூர்வீகமாக" இருக்க வேண்டும்.
நடுத்தர கட்டத்தில், மாணவர்கள் மொழிகள் தவிர, கணிதம், கலைக் கல்வி, உடற்கல்வி, அறிவியல், சமூக அறிவியல் மற்றும் தொழிற்கல்வி பாடம் ஆகியவற்றைப் படிக்க வேண்டும்.
9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் சுற்றுச்சூழல் கல்வி பாடம் சேர்க்கப்படும்.
10 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் குறிப்பிட்ட நேரங்களையும் மதிப்புகளையும் இந்த கட்டமைப்பானது ஒதுக்குகிறது, மேலும் எந்தவொரு பாடத்திலும் மாணவரின் அறிவை அதிகரிக்க 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் விருப்பமான "கூடுதல் செறிவூட்டல் காலத்தையும்" பரிந்துரைக்கிறது.
வெவ்வேறு பாடங்கள் மற்றும் நிலைகளில் மாணவர்கள் அடைய வேண்டிய திறன்களையும் இது பட்டியலிடுகிறது. எடுத்துக்காட்டாக, சமூக அறிவியல் என்பது "உள்ளூர் முதல் உலகம் வரை" அறிவதில் இருந்து என்பது நடுத்தர நிலையில் கருப்பொருளாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும். மூன்று மொழிகளை பொறுத்தவரை, மாணவர்கள் "பயனுள்ள தொடர்பு, கலந்துரையாடல் மற்றும் எழுதும் திறன்களை" வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில், இரண்டு மொழிகளைப் படிப்பது கட்டாயமாகும், அதில் ஒன்று இந்திய மொழியாக இருக்க வேண்டும். இந்த கட்டத்தில், வணிகம், அறிவியல், மனிதநேயம் மற்றும் பல்வேறு துறைகளில் இருந்து மீதமுள்ள நான்கு அல்லது ஐந்து பாடங்களைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு சுதந்திரம் உள்ளது. ஒரு மாணவர் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தை தனது மொழிகளாக எடுத்துக் கொள்ளலாம், மேலும் வரலாறு, இதழியல், கணிதம் மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றைப் படிக்கலாம்.
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத் தேர்வுகள் என்பதை, சிறந்த மதிப்பெண்ணைத் தக்கவைத்துக்கொள்வதற்காக தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு பரிந்துரைக்கிறது. தற்போதைக்கு 12 ஆம் வகுப்பில் வருடாந்திர முறை தொடரும் அதே வேளையில், ஒரு செமஸ்டர் முடிந்தவுடன் மாணவர்கள் உடனடியாக வாரியத் தேர்வுகளை எழுத அனுமதிக்கும், இரண்டாம் நிலை பருவத்தில் ஒரு செமஸ்டர் முறைக்கு படிப்படியான மாற்றத்தை கட்டமைப்பு பரிந்துரைக்கிறது. NCF இதற்காக ஒரு "விரிவான வினாத்தாள் வங்கியை" உருவாக்க பரிந்துரைக்கிறது.
இரண்டு பதிப்புகள்
திருத்தப்பட்ட NCF ஆனது 10 ஆம் வகுப்பு வரை இரண்டு இந்திய மொழிகள் உட்பட மூன்று மொழிகளைப் படிக்க பரிந்துரைக்கும் அதே வேளையில், வரைவு ஆவணம் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் மூன்று மொழிகளை (R1, R2 மற்றும் R3 என அழைக்கப்படும்) கற்பிக்க பரிந்துரைத்தது. 9 மற்றும் 10 வகுப்புகளில் இரண்டு மொழிகள் (R1 மற்றும் R2).
R1 என்பது தாய்மொழி அல்லது உள்ளூர் மொழி, R2 என்பது வேறு எந்த மொழியாகவும் (ஆங்கிலம் உட்பட) இருக்கலாம், R3 என்பது R1 அல்லது R2 அல்லாத எந்த மொழியாகவும் இருக்கலாம். மாநில அரசுகள் மற்றும் பள்ளி வாரியங்கள் R1, R2 மற்றும் R3 வகைப்பாட்டை தீர்மானிக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வரைவு NCF இல், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மொழி ஒரு விருப்ப பாடமாக இருந்தது.
இந்திய மொழிகள் உட்பட, வரைவில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் 4,000 அமைப்புகளின் கருத்துக்களைத் தொடர்ந்து இணைக்கப்பட்டன என்று இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு வட்டாரங்கள் தெரிவித்தன. மிக விரைவில் செமஸ்டர் முறைக்கு மாறுவது குறித்து மாநிலங்கள் கருத்துக்களை பதிவு செய்ததைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட வரைவு தற்போதைக்கு வருடாந்திர முறையுடன் இருக்க விரும்புகிறது.
இப்போது என்ன நடக்கிறது
NCF பல்வேறு பாடங்களுக்கான பாடப்புத்தகங்களை உருவாக்குவதற்கான கட்டமைப்பை வழங்குகிறது. NCERT ஆனது 3 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான NCF க்கு இணங்க பாடப்புத்தகங்கள் மற்றும் துணைப் பொருட்களைத் தயாரிக்க 19 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அதற்கு அந்தந்த பாடங்களில் வல்லுநர்கள் குழுக்கள் உதவுவார்கள்.
புதிய பாடப்புத்தகங்கள் 2024-25 கல்வி அமர்வில் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சகம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது. தற்போது புழக்கத்தில் உள்ள பாடப்புத்தகங்கள் NCF 2005ஐப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன.
NEP அல்லது NCF இரண்டும் மாநிலங்களுக்குக் கட்டுப்படுவதில்லை. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா இந்த வாரம் NEP ஐப் பின்பற்றப் போவதில்லை என்று அறிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.