நாட்டில் நிலவி வரும் வேலையின்மையை கருத்தில் கொண்டு, தொழிலாளர்களை மையமாக கொண்ட "பாரதிய எக்கானிமிக் மாடலு"க்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ஆர்.எஸ்.எஸ். ஞாயிற்றுக் கிழமை நிறைவேற்றியது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் முடிவெடுக்கும் அகில பாரதிய பிரதிநிதி சபா உறுப்பினர்களுக்காக நடைபெற்ற மூன்று நாள் மாநாட்டில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானத்தின் சிறப்பம்சங்கள் என்ன?
இந்தியர்களின் மதிப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பொருளாதார முன்னெடுப்பான ஆத்மநிர்பார் பாரத்தை மக்கள் முன்வந்து மேம்படுத்த வேண்டும் என்று இந்தியாவில் நிலைவரும் வேலையில்லா திண்டாட்டத்தை மேற்கோள் காட்டியுள்ளது இந்த தீர்மானம்.
ஆர்.எஸ்.எஸ் முன்மொழிந்துள்ள மனிதர்களை மையமாக கொண்ட, உழைப்பின் அடிப்படையிலான, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பாரதிய பொருளாதார மாதிரிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும் அதிகாரம் பரவலாக்கப்பட்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் நல உதவிகள் சரி சமமாக கொடுக்கப்பட்டு, கிராமப்புற பொருளாதாரம், சிறு குறுதொழில்கள், மற்றும் விவசாயம் சார்ந்த தொழிற்துறைகள் விரிவடைய வேண்டும் என்றும் இந்த தீர்மானம் வலியுறுத்தியுள்ளது
கிராமப்புற வேலைவாய்ப்பு, அமைப்புசாரா துறை வேலைவாய்ப்பு மற்றும் பெண்களின் வேலைவாய்ப்பு ஆகியவை வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வாகும் என்று மேற்கோள் காட்டப்பட்ட நிலையில், நமது சமூக நிலைமைகளுக்குப் பொருத்தமான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மென் திறன்களைப் பின்பற்றுவதற்கான முயற்சிகளே முக்கியமான தேவை என்றும் குறிப்பிட்டுள்ளது.
உற்பத்தித் துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி குறித்து குறிப்பிட்டுள்ள ஆர்.எஸ்.எஸ், அந்த துறையை மேம்படுத்தினால் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலும் என்று தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் சூழலை மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு கல்வி மற்றும் ஆலோசனை வழங்குவதன் மூலம் உருவாக்க வேண்டும், இதனால் அவர்கள் வேலைகளை மட்டுமே தேடும் மனநிலையில் இருந்து வெளியே வர முடியும். பெண்கள், கிராம மக்கள் மற்றும் தொலைதூர மற்றும் பழங்குடியின மக்கள் மத்தியிலும் இதேபோன்ற தொழில் முனைவோர் மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடாகம் பள்ளத்தாக்கு ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?
தீர்மானம் ஏன் நிறைவேற்றப்பட்டது?
இந்தியாவின் வேலையின்மை விகிதம் அதிகரித்து வரும் நிலையில், பணமதிப்பு நீக்கம் மற்றும் தொற்றுநோய்களின் விளைவுகள் பொருளாதாரத்தை பாதித்து வாய்ப்புகள் குறைந்து வரும் சூழலில் இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.
இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தரவுகளின்படி, வேலையின்மை விகிதம் 2018-19 இல் 6.3% ஆகவும், 2017-18 இல் 4.7% ஆகவும் இருந்து. ஆனால் அது 2021ம் ஆண்டு 7.91% ஆக அதிகரித்தது. நகர்ப்புறங்களில் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 8.09% ஆக இருந்த வேலை வாய்ப்பின்மை அதே ஆண்டு டிசம்பர் மாதம் 9.30% ஆக அதிகரித்தது. கிராமப்புறங்களில் இதே குறிப்பிட்ட காலத்தில் 5.81%ல் இருந்து வேலை வாய்ப்பின்மை 7.28% ஆக அதிகரித்தது. 2019 முதல் டிசம்பர் 2021 காலகட்டம் வரையில் 9.8 மில்லியன் மக்கள் வேலைகளை இழந்துளனர் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சியினர் இந்த பிரச்சனையை கையில் கொண்டு மத்திய அரசை கடுமையாக சாடி வருகின்ற நிலையில், கூட்டு முயற்சியால் இதற்கு நல்ல ஒரு முடிவு கிடைக்கும் என்று ஆர்.எஸ்.எஸ். நம்புகிறது. உண்மையில், ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்களின் தகவல்படி, பொருளாதாரத் துறையில் பணியாற்றும் ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்த ஆறு அமைப்புகள் இந்தியப் பொருளாதாரத்தின் நிலை குறித்து கடந்த மாதம் மூன்று நாட்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு மீது குற்றம் சுமத்துவது மிக எளிமையான காரியம் என்பதை ஒப்புக் கொள்கின்றோம். ஆனால், மக்களின் பலத்தை பயன்படுத்தாமல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது சவாலானது. அரசாங்கங்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முடிந்தால், எங்கும் வேலையின்மை இருக்காது. எனவே ஸ்வாவலம்பி பாரத் அபியான் என்ற பெயரில் ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட்டது, ”என்று சுதேசி ஜாகரன் மஞ்சின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் அஸ்வனி மகாஜன் கூறினார்.
இலங்கைக்கு ரூ.7,500 கோடி கடனுதவி செய்த இந்தியா
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை பரவலாக்குவதற்கும், அடிமட்ட நிலைக்கு கொண்டு செல்வதற்கும் தேவையான கருவியாக இந்த அபியான் திட்டம் இருக்கும் என்று மகாஜன் கூறூகிறார். இதனை செயல்படுத்துவதன் மூலம் ஒரு சில நகரங்களில் மட்டுமே வேலை வாய்ப்பு குவிக்கப்பட்டிருக்கும் சூழல் உருவாகாது என்றும் அவர் கூறினார். இளைஞர்களின் மனதில் தொழில் முன்வைதற்கான ஆர்வத்தை தூண்ட வேண்டும். அதில் தான் நம்முடைய பலம் இருக்கிறது. இந்த சூழல் உருவாகும் போது வேலை வாய்ப்புகள் வேலைகள் மூலமாகவே கிடைக்கும் என்ற எண்ணம் நம்மிடம் இருந்து மாறும் என்றும் மகாஜன் குறிப்பிட்டார்.
இந்த தீர்மானத்தின் அம்சங்கள் எப்படி நிறைவேற்றப்படும்?
உற்பத்தித் துறையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கத்தை ஊக்குவிப்பதன் மூலமும் இது நிறைவேற்றப்படலாம் என்று ஆர்.எஸ்.எஸ். நம்புகிறது. மேலும் அடிமட்டத்தில் இளைஞர்களுடன் சேர்ந்து பணியாற்றும் போது வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பிற சுய வேலை வாய்ப்புகள் மூலம் தொழில் முனைவோர் முயற்சிகளில் ஈடுபட அவர்களுக்கு உதவ முடியும்.
ஜிடிபியில் நமது உற்பத்தி 17-18% ஆக இருந்தது, இப்போது அது 15% ஆகக் குறைந்துள்ளது. ஏபிஐ, எலக்ட்ரானிக்ஸ், சைக்கிள், பொம்மைகள் சந்தைகள் அனைத்தும் சீனாவால் நாசம் அடைந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசின் சிந்தனை முறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது சீனாவை சார்ந்திருக்கும் நிலை பெரிதாக குறைந்துள்ளது. மேலும் அரசு கட்டண தடைகள் உட்பட பல்வேறு வழிகளில் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்துள்ளது என்று மகாஜன் கூறினார்.
தொழில்மயமாக்கல், உணவு பதப்படுத்துதல், கால்நடை வளர்ப்பு, மூங்கில் வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த நடவடிக்கைகள் மூலம் கிராமப்புற இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு மட்டுமே தனியாக இதனை செய்து முடித்துவிட இயலாது. சமூகமும் மக்களும் முன்வர வேண்டும். இந்த மக்களை ஒருங்கிணைப்பவர்கள் யார்? என்றால் நாங்கள் தான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளோம். ஏ.பி.வி.பியும் மக்களுக்கு உதவும் நோக்கில் முன்வந்துள்ளது என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர் கூறினார்.
வேலைவாய்ப்பு அடிப்படையிலான வளர்ச்சி மாதிரி மட்டுமே நல்ல முன்மாதிரி என்றும், ஆத்மநிர்பர் பாரதத்தால் மட்டுமே அதை அடைய முடியாது என்றும் ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளது. இவை அணைத்திலும், அரசாங்கத்தின் எந்தவொரு கொள்கையும் பொருந்தவில்லை என்றால், நாங்கள் அரசாங்கத்திடமும் முறையிடுவோம் என்று மகாஜன் கூறியுள்ளார்.
RSS இந்த பிரச்சனையை கையில் எடுத்தது இது முதல் முறையா?
இந்திய விழுமியங்களில் ஊடுருவி, இந்தியாவின் சமூகக் கட்டமைப்பையும், கிராமப்புற வாழ்க்கையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் பொருளாதார மாதிரிகளை அரசாங்கங்கள் பின்பற்ற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் எப்போதும் நம்புகிறது. உழைப்பை மையமாக கொண்ட சுதேசி மாதிரியை இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகவும் பொருத்தமானது என்று தத்தோபந்த் தெங்கடி போன்ற முக்கியமான தலைவர்கள் சிலர் தொடர்ந்து வலியுறுத்தினர். 1990களின் முற்பகுதியில் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் இந்த மாதிரிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
1992ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்கல் கொள்கைக்கு மாற, ஏ.பி.பி.எஸ். அமைப்பு சுதேசி மற்றும் வேலையின்மை என்ற பெயரில் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது. மற்ற நாடுகளை அதிக அளவில் நம்பியிருப்பது, வளர்ந்து வரும் பொருளாதார அடிமைத்தனம் மற்றும் பாரிய வேலையின்மைக்கு இட்டுச்செல்லும் என்று குறிப்பிட்டிருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.