உலகிலேயே மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்கள்... மும்பைக்குத் தான் முதலிடம்!

சராசரி தாமத நேரம் நேரடியாக வருடம் முழுவதும் பல்வேறு கால சூழ்நிலைகளில் வாகனங்களில் பயணம் செய்து கணக்கிடப்பட்டுள்ளது

Traffic Index 2018 : நெதர்லாந்து நாட்டில் உள்ள அம்ஸ்டர்டாமை மையமாக கொண்டு இயங்கி வரும் டாம்டாம் என்ற நிறுவனம், ட்ராஃபிக் இண்டெக்ஸ் 2018 என்ற புதிய புள்ளி விபர பட்டியலை தயார் செய்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு உலகில் அதிக ட்ராஃபிக் ஜாம் ஆகும் நகரங்கள் எவையெவை என்று பட்டியலிட்டுள்ளது.

முதலிடம் பிடித்த மும்பை

இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இரண்டு இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்று வர்த்தக தலைநகரான மும்பை. அதுவும் முதலிடம் பிடித்துள்ளது. மற்றொன்று இந்தியாவின் தலைநகரான நியூ டெல்லியாகும். 4வது இடத்தில் உள்ளது டெல்லி. 56 நாடுகளில் உள்ள 403 நகரங்களில் இந்த விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியல் எப்படி தயார் செய்யப்பட்டது ?

ட்ராஃபிக் இல்லாத நேரம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு முன்னேற ஒரு வாகனம் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கின்றது, ட்ராஃபிக் இருக்கும் போது எவ்வளவு நேரம் தாமதமாக ஒரு இடத்தை அடைகின்றோம் என்ற இரு அளவுகளையும் ஒப்பிட்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மும்பையில் 65% நேரம் தாமதமாகவே ஒரு இடத்தை அடைய முடிகிறது என்று அந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் ஒரு இடத்தை அடைய ட்ராஃபிக் நேரங்களில் 58% தாமதங்கள் ஏற்படுகின்றன என்று அந்த முடிவுகள் அறிவிக்கின்றன.

இது தொடர்பாக டாம்டாம் நிறுவனம் தங்களின் இணையத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சராசரி தாமத நேரம் நேரடியாக வருடம் முழுவதும் பல்வேறு கால சூழ்நிலைகளில் வாகனங்களில் பயணம் செய்து கணக்கிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம் 365 நாட்களும் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர் டாம்டாம் நிறுவனத்தினர்.

மேலும் படிக்க : இந்த வருடத்திற்கான பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது ஏன்?

அதிகமாக சாலையை பயன்படுத்தும் கல்லூரி, அலுவலகம், மற்றும் பள்ளி செல்லும் நேரங்கள், விபத்துகள், காலநிலை, கட்டுமான பணிகள் போன்றவை போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைந்துள்ளன என்றும் டாம்டாம் நிறுவனம் கூறியுள்ளது.

முதல் 10 இடங்களைப் பிடித்த நகரங்கள்

மும்பை (இந்தியா)
போகொட்டா (கொலம்பியா)
லிமா (பெரு)
புதுடெல்லி (இந்தியா)
மாஸ்கோ (ரஷ்யா)
இஸ்தான்புல் (துருக்கி)
ஜகர்த்தா (இந்தோனேசியா)
பாங்காங்க் (தாய்லாந்து)
மெக்சிகோ நகர் (மெக்சிகோ)
ரெசிஃப் (ப்ரேசில்)

இந்த பத்து நகரங்கள் தான் உலகிலேயே மிகவும் மோசமான சாலை போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்கள் ஆகும்.

மும்பை மற்றும் டெல்லி

இந்த இரண்டு மாநகரங்களிலும் காலை மற்றும் மாலை என்பது மிகவும் பரபரப்பான நேரங்களாக இருக்கின்றன. தோராயமாக 73% முதல் 102% வரையில் தாமதம் ஏற்படுகிறது.  பொதுவாக ஆகஸ்ட் 15ஐ நெருங்குவதைத் தொடர்ந்து அங்கு போடப்படும் பலத்த பாதுகாப்புகள் காரணமாக அந்த மாதம் மட்டும் மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசல்களை மக்கள் அனுபவிக்கின்றனர்.

கடந்த வருடத்தில் மும்பையில் மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசல் மற்றும் ட்ராஃபிக் இருந்த நாள் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதியாகும். பெருமழை பெய்து நகரே வெள்ளக்காடாக இருந்த போது 102% தாமதத்தை உருவாக்கியது மும்பை சாலைகள்.  பொதுவாக இந்த இரண்டு நகரங்களிலும் நீங்கள் காலை 2 மணி முதல் 5 மணி வரை போக்குவரத்து நெரிசல் என்ன என்றே அறியாமல் கடந்து போகலாம்.

2017 மற்றும் 2018ம் ஆண்டிற்கான போக்குவரத்து நெரிசல் என்பது மிகவும் அதிகரித்துள்ளது. கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட நகரங்களில் 75% நகரங்களில் இந்த நிலை மோசமானதாகவே உள்ளது. வெறும் 90 நகரங்களில் மட்டுமே போக்குவரத்து நெரிசல்கள் குறையத்துவங்கியுள்ளன. குறிப்பாக ஜகர்த்தாவில் 8% வரை போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. இவை உலகப் பொருளாதாரமயமாக்கலில் முக்கிய வளர்ச்சியாக பார்க்கப்பட்டாலும், மிகவும் மோசமான வகையில் இவை இயற்கை மற்றும் சுற்றுப்புற சூழலை பாதிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close