Karishma Mehrotra
USA Visa Applicants Social Media Details : அமெரிக்காவிற்கு வருகை புரியும் வெளிநாட்டவர்கள் அனைவரும் தாங்கள் விண்ணப்பிக்கும் விசா விண்ணப்பத்தில் 5 ஆண்டுகளாக அவர்கள் பயன்படுத்திய சமூகவலைதள முகவரிகள், அலைபேசி எண்கள், மின்னஞ்சல்கள் என அனைத்தையும் குறிப்பிட வேண்டும் என்று 31/05/2019 அன்று அமெரிக்கா உத்தரவு பிறப்பித்தது.
வருடந்தோறும் அமெரிக்காவிற்கு படையெடுக்கும் இந்தியர்கள்
வருடம் முழுவதும் சுமார் ஒன்றரை கோடி மக்கள் அமெரிக்காவிற்கு தனிப்பட்ட மற்றும் முக்கிய காரணங்களுக்காக செல்வது வழக்கம். அதில் 10 லட்சம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வருங்காலத்தில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் அனைவரும் இந்த தகவல்களை சமர்பிக்க வேண்டும்.
இந்த விதிமுறை அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கட்டாயம் இல்லை. 2018ம் ஆண்டு 28,073 இந்தியர்களுக்கு மைக்ரண்ட் விசாக்கள் வழங்கப்பட்டன. குடும்ப உறுப்பினர்களை பார்ப்பதற்காக அமெரிக்க செல்பவர்கள் இந்த விசாக்களை பயன்படுத்தி செல்கின்றனர்.
2009ல் இருந்து அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. 2014 – 15 வருடங்களில் 20% வரை அதிகரித்தது. 2016ம் ஆண்டில் 31,360 பேர் அமெரிக்காவிற்கு படையெடுத்தனர். இதனால் 2017ம் ஆண்டு அமெரிக்காவிற்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
மேலும் படிக்க : சோசியல் மீடியா விபரங்களை அளித்தால் மட்டுமே விசா பெற முடியும்… அமெரிக்கா அதிரடி
ஆனால் அதே நேரத்தில் 10,06,802 நான் – மைக்ரண்ட் விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. சீனர்கள், மெக்சிகர்களை தொடர்ந்து அமெரிக்காவிற்கு அதிகம் படையெடுத்து செல்லும் நாட்டினர் இந்தியர்களே.
இந்த திட்டம் எப்படி செயல்படும் ?
இந்த மாற்றங்கள் இணையத்தில் நான் – இமிக்ரண்ட் விசாவிற்காக விண்ணப்பிக்கப்படும் டிஎஸ் 160 (DS-160) படிவம், பேப்பர் பேக்அப்பில் நான் – இமிக்ரண்ட் விசாவிற்காக விண்ணப்பிக்கப்படும் டிஎஸ் 156 (DS-156) மற்றும் இணையத்தில் இமிக்ரண்ட் விசாவிற்காக விண்ணப்பிக்கப்படும் டிஎஸ் 260 (DS-260) ஆகியவற்றில் கொண்டு வரப்படும்.
கன்சுலர் எலக்ட்ரானிக் அப்ளிகேசன் செண்டர் ( Consular Electronic Application Center (CEAC)) இணையத்தில் வரும் ட்ராப் டவுன் மெனுவில் முகநூல், ஃப்ளிக்கர், கூகுள் ப்ளஸ், இன்ஸ்டாகிராம், லின்க்ட்டின், மைஸ்பேஸ், பிண்டரெஸ், ரெட்டிட், டம்ப்ளர், ட்விட்டர், வைன், யூடியூப் உள்ளிட்ட 20 சமூக வலைதளங்களின் விபரங்களை பயணிகள் அளிக்க வேண்டும். அமெரிக்காவிற்கு வெளியே இயங்க்கும் சமூக வலைதளங்களுக்கான பட்டியலில் சீனாவின் டென்செண்ட் வெய்போ (Tencent Weibo), ட்வூ, மற்றும் யூக்கூ ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஏன் இந்த மாற்றம்?
தேசிய பாதுகாப்பே முதன்மையானது. எனவே தான் இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நுழையும் எந்த வெளிநாட்டு பிரஜைகளும் முழுமையான கண்காணிப்பிற்கு ஆளாக்கப்படுவார்கள் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதன் மூலம் நாங்கள் எங்கள் நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதோடு, அமெரிக்காவை நம்பி வரும் வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதி செய்கின்றோம்.
இந்த விண்ணப்பத்தில் எங்கும் பயணிகளின் சமூகவலைதள முகவரிகளுக்கான பாஸ்வேர்ட்களை கேட்கவில்லை. இவை அனைத்தும் விசா வாங்க வரும்போதும் விசாரணைக்கு உட்படுத்தப்படும். அதன் மூலமே விண்ணப்பதாரர் தற்போது அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு நடப்பாரா என்பதை அறிந்து விசாவினை உறுதி செய்ய முடியும் என்று கூறியுள்ளது அமெரிக்கா.
ஒபாமாவின் ஆட்சியின் போது இருந்த திட்டங்கள்
விருப்பம் உள்ளவர்கள் தங்களின் விபரங்களை இணைக்கலாம் என்று தான் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் ஆட்சி காலத்தில் இருந்தது. ஆனால் ட்ரம்ப்பின் ஆட்சியில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அமெரிக்காவில் க்ரீன் கார்ட் வாங்கியவர்களும் இந்த விதிமுறைகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
2014ம் ஆண்டு சமூக வலைதளங்களை சரிபார்க்கும் விதிமுறைகளை தளர்த்தியது அமெரிக்க அரசு. ஆனால் கலிஃபோர்னியாவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற பின்னர், இது முறையாக மேற்பார்வையிடப்பட்டது. ஆனாலும் கட்டாயம் ஆக்கப்படவில்லை.
தி சான் பெர்னாடினோ ஷூட்டிங் (The San Bernardino shooting ) என்று அறியப்படும் அந்த துப்பாக்கிச் சூட்டில் 14 நபர்கள் உயிரிழந்தனர். 22 நபர்கள் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய ரிஸ்வான் ஃபரூக் புனைப்பெயரில் அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் எழுதி வந்தது தெரிய வந்துள்ளது.
ஏழு இஸ்லாமிய நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்காவில் அனுமதி இல்லை என்று தடை செய்த அதே நாளில் தான் விசா விண்ணப்பதாரர்களுக்கான சமூக வலைதள விபரங்கள் கட்டயமாக்கப்பட்டு தரவுகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2017ல் மெமோ பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 2018ம் ஆண்டு முதல்முறையாக உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அதனை உறுதி செய்து முதல் அறிக்கையை சமர்பித்தது.
பிற நாடுகளில் இருக்கும் கட்டுப்பாடுகள்
சில நாடுகளில் பயோமெட்ரிக் டேட்டா மற்றும் டிஜிட்டல் போட்டோகள் கட்டாயம் என்று கூறியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ளது. தற்போது இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளில் இந்திய பயணிகளுக்கான விசா விண்ணப்பங்களில் சமூக வலைதள விபரங்களை சமர்ப்பிக்க தேவையில்லை. அதற்காக இதுவரை சட்டங்கள் எதையும் அவர்கள் இயற்றவில்லை என்று தெரியவந்துள்ளது.
பொதுவாக சமூக வலைதளங்களில் பிறந்த நாள்கள், நட்பு வட்டங்கள், புகைப்படங்கள், திருமண நாள், காதல் விவகாரங்கள் என்று தனிப்பட்ட அனைத்து தகவல்களும் சமூக வலைதளங்களில் நம் நெருங்கிய வட்டாரத்துடன் பகிர்ந்து இருப்போம். ஆனால் அதனை அரசு மேற்பார்வைக்காக வைப்பது என்பது தவறு என்று சிலர் கருதுகின்றனர். தனிப்பட்ட வாழ்வினை பாதிக்கும் வகையில் அது அமைந்திருப்பதாகவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.