Abantika Ghosh
West Bengal is in crosshairs of Citizenship Amendment Bill, NRC : குடியுரிமை சட்டம் திருத்த மசோதா 2019 மக்களவையில் நிறைவேறியதை தொடர்ந்து அசாம் மற்றும் இதர வட கிழக்கு மாநிலங்களில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஆனால் நாடு தழுவிய தேசிய குடியுரிமை பதிவேடு சட்டத்தை பாஜக நிறைவேற்றும் பட்சத்தில், மேற்கு வங்கத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மிக முக்கியமான பங்கினை ஆற்றும்.
2021ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து 5 எம்.பிக்கள் திங்கள் கிழமையன்று நாடாளுமன்றத்தில் இந்த மசோதா குறித்து பேசினார்கள். மேற்கு வங்கம் பாஜக தலைவர் திலிப் கோஷ், மஹிலா மோர்ச்சா தலைவர் லாக்கெட் சாட்டர்ஜீ, டார்ஜிலிங் எம்.பி. ராஜூ பிஸ்தா, வங்க தேசத்தில் இருந்து இந்தியா வந்த மத்துவா இனத்தை சேர்ந்த சாந்தனு தாக்கூர், மற்றும் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறிய சௌமித்ரா கான் ஆகியோர் இந்த மசோதா குறித்து பேசினார்கள். ஆனால் அசாமில் இருந்து வெறும் மூன்று எம்.பிக்கள் மட்டுமே பேசினார்கள்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
கிழக்கு பாகிஸ்தானில் இருந்து 1971ம் ஆண்டு 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மேற்கு வங்கத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்களில் சிலர் திரும்பியும் சென்றுவிட்டனர். ஆனால் வாக்கு வங்கிகளுக்காக அவர்களுக்கு தங்க வசதிகள் ஏற்பாடு செய்து கொடுத்தது இடதுசாரிகள் என்று காங்கிரஸ் கட்சியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டன. தற்போது இதே குற்றச்சாட்டை பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் மீது வைக்கிறது. திங்கள் கிழமையன்று மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்யும் போது அமித் ஷா தங்களுடைய எம்.பிக்களிடம் “இந்த வாக்குவாதத்தை பார்த்து கொண்டிருக்கும் மக்கள் அனைவரும் இந்த மசோதாவிற்கு நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
தேசிய குடியுரிமை பதிவேட்டில் இடம் பெறாத, இஸ்லாமியர் அல்லாதோர்களை குடியுரிமை சட்ட திருத்த மசோதா பாதுக்காக்கும் என்று அக்டோபர் 1ம் தேதி கொல்கத்தாவின் நேதாஜி உள்ளரங்கில் அமித் ஷா கூறியது குறிப்பிடத்தக்கது. என்.ஆர்.சி இஸ்லாமியர்களை வெளியேற்றுவதற்கு பதிலாக இந்துக்களை அதிக அளவில் வெளியேற்றியுள்ளது என்று அசாமில் இருந்து வந்த தகவல்கள் மேற்கு வங்க பாஜகவினர் மத்தியில் ஒரு பயத்தை உருவாக்கியது.
மக்களவையில் அமித் ஷா ”இந்தியாவுக்கு அகதியாக வந்து வேலை கிடைத்து செட்டில் ஆனவர்களையும் பாதுகாக்க குடியுரிமை சட்ட திருத்த மசோதா உதவுகிறது என்று கூறினார். மேலும் இந்த செய்தி மேற்கு வஙகம் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் அகதிகளை சென்று சேர வேண்டும் என்றும் அவர்கள் எந்த நாள் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தார்களோ அன்றே அவர்கள் இந்திய பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள் என்பதை அவர்களிடம் தெளிவாக கூற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா தலைவர் சுகேந்து சேகர் ராய் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசும் போது “கிழக்கு பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் குறித்த பிரச்சனை பல காலமாக இங்கு நிலவி வருகிறது. வங்க தேசம் என்பது மொழி ரீதியாக உருவாக்கப்பட்டது. வங்க மொழி பேசும் மக்கள் மத ரீதியாக ஒடுக்கப்பட்டதால் இங்கு வரவில்லை மாறாக உருது மொழி பேசுபவர்களிடம் நிலவிய வங்க மொழிக்கு எதிரான ஒடுக்குமுறையால் தான் அவர்கள் இங்கு வந்தார்கள் என்று கூறினார்.
மேலும் படிக்க : அரசு ஏஜென்ஸிகளுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி “எக்காரணம் கொண்டும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை தன்னுடைய மாநிலத்தில் நிறைவேற்ற விடமாட்டேன்” என்று கூறியுள்ளார். தேசிய குடியுரிமை பதிவேட்டினை குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் இருந்து பிரிக்க முடியாது என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறி வருகிறது. மேலும் என்.ஆர்.சியில் ஏற்பட்ட குறைகளை சரி செய்வதற்காகவே தற்போது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்க தேர்தலில் பாஜக சரிவை சந்தித்தது எப்படி?
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வாக்கு மையமாக இருக்கும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களை திருப்பி அனுப்புவோம் என்று பாஜக தேர்தலில் பிரச்சாரம் செய்தது. மே மாத தேர்தலில் 40 தொகுதிகளில் 18 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. தற்போது 3 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் பாஜக தோல்வியையே சந்தித்தது. தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேட்டு விவகாரத்தில் இக்கட்சிகளின் நிலைப்பாடு தான் தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டது.
மற்ற வடகிழக்கு மாநிலங்களை காட்டிலும் என்.ஆர்.சியின் விளைவு மேற்கு வங்கத்தில், தேர்தலின் போது நன்றாக உணரப்பட்டது என்று தான் கூற வேண்டும். ராய்கஞ்சில் அமித் ஷா சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவுக்குள் வந்தவர்களை கரையான் என்று அழைத்தார். மால்டாவில் “இந்தியாவையும் மேற்கு வங்கத்தையும் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களிடம் இருந்து காப்பேன்” என்று உறுதி அளித்தார் அமித் ஷா.
நேதாஜி ஸ்டேடியத்தில் அமித் ஷா “மம்தா பானர்ஜி இந்தியாவில் இருக்கும் 1 லட்சம் இந்து அகதிகளை வெளியேற்றிவிடுவேன் என்று கூறுகிறார். ஆனால் நான் இங்கு வந்ததோ இந்து, சீக்கிய, சமண, புத்த, கிறிஸ்துவ அகதிகள் யாரும் இந்தியாவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படமாட்டார்கள் என்பதை உறுதி செய்யத்தான். என்.ஆர்.சிக்கு முன்பே குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். மேலே கூறிய அனைத்து பிரிவு மக்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும். இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் அவர்களும் பெற்றிடலாம்” என்று கூறினார்.
திங்கள் கிழமை இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின் போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நாடு தழுவிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கத்திற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று அமித் ஷா கூறினார். ஆனால் ஒரு ஆண்டுக்கு முன்பாக, கடந்த டிசம்பர் 18ம் தேதி ராஜ்நாத் சிங் மக்களவையில் “அசாம் மாநிலத்தை தாண்டி வேறெங்கும் குடிமக்கள் பதிவேட்டினை நிறைவேற்றும் திட்டமில்லை” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.