Explained: Who are Angadias and what are the challenges they face?: தெற்கு மும்பையில் அங்காடியாக்களை மிரட்டி பணம் பறித்ததாக கடந்த வாரம் மும்பை காவல்துறை அதிகாரிகள் 3 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், முலுண்டில் உள்ள அங்காடியாவின் கடை கொள்ளை கும்பலால் சூறையாடப்பட்டது. இந்த அங்காடியாக்கள் யார், அவர்கள் ஏன் அடிக்கடி குறிவைக்கப்படுகிறார்கள்?
அங்காடியாக்கள் யார்?
அங்காடியா அமைப்பு என்பது நாட்டில் ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த வங்கிக்கு இணையான அமைப்பாகும், அங்கு வர்த்தகர்கள் பொதுவாக ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கூரியரைக் குறிக்கும் (பணத்தை கொண்டு செல்லும்) அங்காடியா (கிட்டத்தட்ட நம்ம ஊர் ’குருவிகள்’ என்று அழைக்கப்படுபவர்கள் போல்) என்ற நபர் மூலம் பணத்தை அனுப்புகிறார்கள். வைர வியாபாரத்தின் இரு முனைகளாக இருக்கும் மும்பை – சூரத் இடையே, இந்த அங்காடியா அமைப்பு மிகவும் பிரபலமான பாதையாக இருப்பதால் நகை வியாபாரத்தில் இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் சம்பந்தப்படும் பணம் மிகப்பெரியது மற்றும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு பணத்தை மாற்றுவது அங்காடியாவின் பொறுப்பாகும், அதற்காக அவர்கள் பெயரளவு கட்டணம் வசூலிக்கிறார்கள். பொதுவாக, குஜராத்தி, மார்வாரி மற்றும் மல்பாரி சமூகத்தினர்தான் இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
அங்காடியா அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?
அங்காடியா அமைப்பு முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. பொதுவாக, வர்த்தகர்கள் பல தசாப்தங்களாக ஒரே அங்காடியாக்களை வைத்துள்ளனர். தெற்கு மும்பையில் உள்ள ஜவேரி பஜாரைச் சேர்ந்த ஒரு வியாபாரி, சூரத்தில் உள்ள வைர வியாபாரிக்கு பணம் கொடுக்க விரும்பினால், வழக்கமாக 24 மணி நேரத்திற்குள் பணத்தை டெலிவரி செய்யும் அங்காடியாவை அனுப்புவார். மும்பையிலிருந்து இரவில் புறப்பட்டு அதிகாலையில் குஜராத்தை அடையும் ரயில் சேவைகளையும் அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். வழக்கமாக, நம்பகத்தன்மையை சரிபார்க்க, வர்த்தகர், எடுத்துக்காட்டாக, அங்காடியாவிடம் ரூ.10 நோட்டைக் கொடுத்து, பெறுநருக்கு நோட்டின் எண்ணை வழங்குவார். பெறுநர் நோட்டு எண்ணை உறுதி செய்த பிறகுதான் அங்காடியா அந்த நபரிடம் பணத்தை ஒப்படைப்பார். பணம் செலுத்திய பிறகு, அங்காடியாக்கள் அதே நாளில் மும்பை திரும்புகிறார்கள்.
இதையும் படியுங்கள்: இந்திய குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் என்ன?
இந்த அமைப்பு சட்டபூர்வமானதா?
அங்காடியா அமைப்பு சட்டப்பூர்வமாக இருந்தாலும், கணக்கில் காட்டப்படாத பணத்தை மாற்றுவதற்கு இது பல முறை பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதால், செயல்பாட்டின் மீது ஒரு கவனம் உள்ளது. வணிகம் ரொக்கமாக பரிவர்த்தனை செய்வதாலும், அதற்கான கணக்கு எதுவும் பராமரிக்கப்படாததாலும், இது பொதுவாக நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் ஹவாலா பரிவர்த்தனையைப் போல கருப்பு பணத்தை மாற்றவும் பயன்படுத்தப்படுகிறது என்ற சந்தேகம் உள்ளது.
அங்காடியாக்கள் ஏன் அடிக்கடி குறிவைக்கப்படுகிறார்கள்?
அங்காடியாக்கள் அதிக அளவு பணத்தை எடுத்துச் செல்வது அவர்களை கொள்ளை இலக்குகளாக ஆக்குகிறது. முலுண்டில் இந்த மாத தொடக்கத்தில் ஒரு கடையை கொள்ளையர்கள் கொள்ளையடித்தபோது, அவர்கள் ரூ.77 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்றனர். நகைகளை கொள்ளையடிக்கும் நிகழ்வுகளைப் போலல்லாமல், அங்காடியாக்களிடம் பணத்தை கொள்ளை அடிப்பது என்பது எளிது. ஏனெனில் நகை என்றால் விற்க வேண்டியிருக்கும் மற்றும் தடயங்களை விட்டுச்செல்லாம், ஆனால் பணத்தை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இது தவிர, தனிப்பட்ட அங்காடியாக்கள் பணத்தை எடுத்துச் செல்வதால், கொள்ளையர்கள் அவர்களின் வழிகளைக் கண்காணித்து கொள்ளையடித்து வருகின்றனர். அங்காடியாக்களின் வேலை பற்றி அறிந்த முன்னாள் ஊழியர்களே இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் என்பது பல சந்தர்ப்பங்களில் தெரியவந்துள்ளது. அங்காடியாக்களும் பாதுகாவலர்களை வரவழைக்கத் தொடங்கியுள்ளனர், மேலும் குறிவைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக பொதுவாக பெரிய குழுக்களாக பயணிக்கிறார்கள். மேலும், மும்பையில் நடந்த சமீபத்திய வழக்கைப் போலவே, அங்காடியாக்கள் பணப் பரிமாற்றம் செய்யும் பணத்தின் சட்டப்பூர்வ தன்மை குறித்து சந்தேகத்தின் நிழல் இருப்பதால், அவர்களிடம் இருந்து பணம் பெறுவதற்காக அவர்களை போலீசார் மிரட்டுவதும், மிரட்டி பணம் பறிப்பதும் தெரியவந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil