சுமார் 700க்கும் மேற்பட்ட புனே குடும்பங்களை மூன்று தசாப்தாங்களாக கண்காணித்த ஆய்வு மூலம், இந்தியர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவது மிகவும் பொதுவானது என்றும், பலருக்கு சிறுவயதிலேயே குளுக்கோஸின் அளவு அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த முடிவுகளை பகுப்பாய்வு செய்ததில், நீரிழிவு நோயை ஆரம்ப காலத்திலே தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நோய் உள்ளதா என்பதை கண்டறியும் சோதனை வயதை 30-லிருந்து 25 ஆகக் குறைப்பதற்கான நிபுணர்களின் பரிந்துரை இந்த முடிவுக்கு ஏற்றது போல் இருப்பதாக கூறப்படுகிறது.
எப்படி கண்காணித்தார்கள்?
புனேவில் உள்ள கேஇஎம் மருத்துவமனையின் நீரிழிவு பிரிவின் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 35 ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டு, நீரிழிவு நோய் இந்தியர்களுக்கு பொதுவானது என்பதை கண்டறிந்துள்ளனர்.
1993 ஆம் ஆண்டில், புனேவிற்கு அருகிலுள்ள ஆறு கிராமத்தில் Pune Maternal Nutrition Study (PMNS) என்பதை ஆரம்பித்து 700 க்கும் மேற்பட்ட குடும்பங்களை தொடர்ச்சியாக கண்காணித்தனர்.
அப்பெண்கள் கர்ப்பமாவதற்கு முன்பும், கர்ப்ப காலத்தின் போதும், அடுத்து அவர்களது குழந்தைப் பருவம், குழந்தை பருவமடைதல் மற்றும் தற்போது பெரியவர்கள் என மொத்த வாழ்க்கை வரலாறும் கண்காணிக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு, அமெரிக்க நீரிழிவு இதழான நீரிழிவு கேரில் வெளியிடப்பட்டது.
ஆய்வு முடிவு சொல்வது என்ன?
ஆராய்ச்சியாளர்கள் 6, 12, மற்றும் 18 வயதில் குளுக்கோஸ், இன்சுலின் செறிவுகள் மற்றும் பிற முக்கியத் தரவுகளை ஆய்வு மேற்கொண்டனர். அதில் 18 வயதில், 37 சதவீத ஆண்களுக்கும் 18 சதவீத பெண்களுக்கும் குளுக்கோஸ் அளவு அதிகளவில் உள்ளது கண்டறியப்பட்டது. அதில் பாதிப் பேரின் உடல் எடை குறைவாக இருந்துள்ளது.
கருப்பையில் குறைவான உடல் வளர்ச்சியைக் கொண்ட குழந்தைகளுக்கு சிறுவயதிலே நீரிழிவு பாதிப்புக்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. அவர்களுக்கு, குளுக்கோஸ் அளவும் அதிகளவில் உள்ளது.
மேலும், 6 மற்றும் 12 வயதிலும் குளுக்கோஸ் அளவு அதிகளவில் காணப்படும். அதற்கு பான்கிரியாஸின் மோசமான செயல்பாடு தான் காரணமாக அமையும். கர்ப்ப காலத்தில் தாய்க்கு குளுக்கோஸ் அளவு அதிகமாக இருப்பது, குழந்தையின் பான்கிரியாஸூக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம்.
ஏன் இந்தியாவில் நீரிழிவு அதிகளவில் பரவியுள்ளது
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இந்தியாவில் 20-70 வயதுக்குட்பட்ட 8.7 சதவீத நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். சுமார் 77 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள், இளம் பருவத்தினரிடையே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், யுனிசெஃப் மற்றும் மக்கள்தொகை கவுன்சில் ஆகியவை நடத்திய முதல் தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பில் (2016-18), நீரிழிவு நோய் குழந்தைகளை பெரிய அளவில் பாதிக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளது.
2019 இல் வெளியான கணக்கெடுப்பின் படி, கிட்டத்தட்ட 10 குழந்தைகளில் 1 குழந்தை (வயது 5-9) நீரிழிவு நோய்க்கு ஆரம்ப கட்டத்தில் உள்ளனர். 1 சதவீதம் பேர் ஏற்கனவே நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள்.
நீரிழிவு பாதிப்புக்கு, நாம் வாழும் பகுதியில் உடனடி மக்கள் தொகை அதிகரிப்பு, உட்கார்ந்தபடியே வாழ்க்கை முறை செல்வது, ஆரோக்கியமற்ற உணவு முறை, புகையிலை பயன்பாடு, வாழும் நாள்கள் அதிகரித்தல் ஆகியவையும் காரணியாக கருதப்படுகிறது.
நீரிழிவு நோயை சோதனை செய்வது எப்போது?
அரசின் தற்போதைய பரிந்துரைப்படி, நீரிழிவு நோய் பாதிப்பை 30 வயதில் சோதனை செய்யலாம். மருத்துவர் யாஜ்னிக் கூறுகையில், " நீரிழிவு நோய் பாதிப்பு பெரும்பாலும் உடல் பருமன் மற்றும் உடலின் செயல்பாடுகளைப் பாதிக்கும் மேடாபாலிக் டிஸ்ஆர்டர் இருக்கும் நடுத்தர வயதினரிடையே ஏற்படுகிறது.
இந்த பாதிப்பை கட்டுபடுத்த ஒருங்கிணைக்கப்பட்ட வாழ்க்கைப் அணுகுமுறை தேவைப்படுகிறது . இதனை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் மட்டுமன்றி சமூக மட்டத்திலே கட்டுபாட்டை தொடங்க வேண்டும். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க மருத்துவர்கள் மட்டுமின்றி நமக்குத் பொது சுகாதார நிபுணர்கள் தேவை.தீர்க்க நீண்ட நேரம் எடுக்கும். விரைவில் செயல்பட வேண்டும்" என்றார்.
பல்வேறு நீரிழிவு மையங்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், 30 வயதிற்குப்பட்டவர்களில் 77.6 சதவீதம் பேர் அதிக எடை அல்லது பருமனானவர்கள் என்பதை கண்டறிந்துள்ளனர்.
மேலும், நீரழிவு நோய் பாதிப்பின் சோதனை வயதை 25 வயதாக குறைக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
டாக்டர் ஜோஷி கூறிகையில், இது பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வாகும். பெரும்பாலான நாடுகள் நீரழிவு சோதனை வயதை 25ஆக குறைக்க பரிந்துரைத்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது. ஏனென்றால், கர்ப்ப காலத்தில் தாய் மூலம் கிடைக்கப்படும் ஊட்டச்சத்திலும் கவனம் செலுத்துவது அவசியமாகும் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil