Advertisment

மரியுபோல் மீது தொடர் தாக்குதல்; ரஷ்யா இந்த நகருக்கு முக்கியத்துவம் அளிக்க காரணம் என்ன?

2016ம் ஆண்டு போர் நடைபெற்ற நகரங்களில் இருந்து வெளியேறிய மக்களுக்கு உதவிக் கரம் நீட்டியமைக்காக ஐ.நா. சபையில் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் “ஒற்றுமையின் நகரம்” என்ற மதிப்பைப் பெற்றது மரியுபோல்.

author-image
WebDesk
New Update
மரியுபோல் மீது தொடர் தாக்குதல்; ரஷ்யா இந்த நகருக்கு முக்கியத்துவம் அளிக்க காரணம் என்ன?

Sonal Gupta 

Advertisment

ஆயுதங்களை விட்டுவிட்டு சரணடையுமாறு ரஷ்யா கூறியதை உக்ரைன் ஏற்றுக் கொள்ளாத நிலையில் உக்ரேனிய நகரமான மரியுபோல் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்ய ராணுவம். தொடர்ந்து குண்டுகளை வீசி நகரத்தை அழித்து சாம்பல் நிலமாக மாற்றிவிட்டனர் ரஷ்ய படையினர் என்று அந்த நகர கவுன்சில் அறிவித்துள்ளது.

2014ம் ஆண்டு ரஷ்ய - ஆதரவு பிரிவினைவாதிகளால் டோனெஸ்ட்க் நகரத்தை கைப்பற்ற முடியவில்லை, அதனை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மரியுபோலில் போர் புரிந்து வருகிறது ரஷ்யா. இந்த கட்டுரையில், ரஷ்யாவுக்கு மரியுபோலை கைப்பற்ற ஏன் ஆர்வம் காட்டுகிறது என்று பார்ப்போம்.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்றால் என்ன? உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்தியது ஏன்?

ரஷ்யாவுக்கு ஏன் மரியுபோல் முக்கியமானது?

புவியியல் அடிப்படையில் மரியுபோல் 2014ம் ஆண்டு ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட க்ரிமியாவுக்கும், பிரிவினைவாதிகளை அதிகமாக கொண்ட டோன்பாஸுக்கும் இடையே ஒரு பாலமாக அமைகிறது. தற்போது இவ்விரண்டு பிரதேசங்களுக்கும் நடுவே அஸோவ் கடறபரப்பு அமைந்துள்ளாது.

ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் இருக்கும் டோன்பாஸூக்கு வெறும் 100 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த பிரதேசத்தை கைப்பற்ற 2014ம் ஆண்டு தீவிர முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர். ஆனாலும் உக்ரைன் ராணுவம் அந்த பிராந்தியத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டது. அப்போதைய உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ, டோனெட்ஸ்க் ரஷ்யர்களின் கையில் சிக்கியதால் அப்லாஸ்ட்டின் பிராந்திய தலைநகராக மரியுபோலை அறிவித்தார்.

2016ம் ஆண்டு போர் நடைபெற்ற நகரங்களில் இருந்து வெளியேறிய மக்களுக்கு உதவிக் கரம் நீட்டியமைக்காக ஐ.நா. சபையில் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் “ஒற்றுமையின் நகரம்” என்ற மதிப்பைப் பெற்றது மரியுபோல்.

கடல்சார் நன்மைகள், பொருளாதார நலன்கள்

மரியுபோலை கைப்பற்றுவது நிலம் சார் நன்மைகள் மட்டுமின்றி ரஷ்யாவுக்கு கடல்சார் நன்மைகளையும் வழங்கும். கெர்சோன் வீழ்ச்சிக்கு பிறகு ரஷ்யா கருங்கடல் பகுதியில் தன்னுடைய கட்டுப்பாட்டை விரிவுப்படுத்தி வருகிறது. க்ரீமியா கைப்பற்றப்பட்ட பிறகு பெரும்பாலான பகுதிகளில் மாஸ்கோவின் அதிகாரம் அதிகமாகியுள்ளது.

ரஷ்ய படையினர் கருங்கடலை ஒட்டியுள்ள மைக்லாயிவ் மற்றும் ஒடேஸா நகரங்களிலும் தாக்குதல்களை துவங்கியுள்ளனர்.

கிழக்கில், அஸோவ் கடலை ஒட்டியுள்ள, மரியுபோல் பகுதியை தவிர அனைத்து பிராந்தியங்களும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. உக்ரைனின் மிகப்பெரிய துறைமுகம் மரியுபோலில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மெலிதோபோல் மற்றும் பெர்டியன்ஸ்க் போன்ற நகரங்கள், போர் துவங்கிய சில நாட்களிலேயே ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்று தி கார்டின் செய்தி வெளியிட்டது.

மரியுபோல் வீழ்த்தப்படும் பட்சத்தில் அஸாவ் கடலை ஒட்டியுள்ள அனைத்து பிராந்தியங்களும், கருங்கடலை ஒட்டியுள்ள பெரும்பாலான பிராந்தியங்களும் ரஷ்யாவின் கைக்கு வர, உக்ரைனின் கடல்வழி வர்த்தகம் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது. 2014இல் உக்ரைன் கருங்கடல் கடற்கரையில் மூன்றில் ஒரு பகுதியையும், கெர்ச் ஜலசந்தி மற்றும் அதன் ஐந்து துறைமுகங்களையும் இழந்தது.

கிரிமியா இணைக்கப்பட்ட பிறகு மரியுபோல் மற்றும் பெர்டியன்ஸ்க் பகுதிகளில் சரக்குகளை கையாளும் விகிதம் 70% முதல் 50% ஆக குறைந்துவிட்டது என்று தி ஃபினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக துறைமுகங்களுக்கு $400 மில்லியன் இழப்பு ஏற்பட்டது. 2018ம் ஆண்டில் கெர்ச் ஜலசந்தியில் ரஷ்யா பாலத்தை திறக்க நிலைமை இன்னும் மோசமானது. இந்தப் பாலம் அதிகபட்சமாக 35-மீட்டர் உயரம் கொண்ட சிறிய கப்பல்களுக்கு மட்டுமே வழியை தரும். மேலும் ரஷ்ய அதிகாரிகளின் ஆய்வுகள் அதிகரித்து வருவதால், உக்ரேனிய கப்பல்கள் செல்ல கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

உக்ரைனின் மொத்த இரும்பு ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு மடங்கு மரியுபோலை நம்பியுள்ளது. பெர்டியன்ஸ்க் நகருடன் சேர்க்கும் போது மொத்த தானிய ஏற்றுமதியில் 5% இங்கு நடைபெறுகிறது ப்ளூம்பெர்க் கூறியுள்ளது. ஐரோப்பாவில் உள்ள இரண்டு பெரிய இரும்பு மற்றும் எஃகு ஆலைகளான அசோவ்ஸ்டல் மற்றும் இலிச் இங்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் அசோவ்ஸ்டல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, மரியுபோல் மீதான மாஸ்கோவின் கட்டுப்பாடு உக்ரைனின் கடல் வர்த்தகம் மற்றும் உலோக உற்பத்திக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

நோவோரோஷியா

2014ம் ஆண்டு ரஷ்ய அதிபர் புடின் நோவோரோஷியா (புது ரஷ்யா) என்ற பதம் ஒன்றை, செய்தியாளர்கள் சந்திப்பின் போது பயன்படுத்தினார். ஷரிஸ்ட் (Tsarist) ஆட்சியின் கீழ் செயல்பட்டு வந்த ரஷ்யாவின் சில பகுதிகளை வரலாற்றில் நோவோரோஷியா என்று குறிப்பிடுகின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். அந்த பகுதியில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகளான ஒடேஸ்ஸா, கார்கிவ், கெர்சோன், டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் போன்ற பகுதிகள் அடங்கும்.

"ரஷ்யாவின் ஒரு பகுதியாக உள்ள பிராந்தியத்தின் வரலாறு மாஸ்கோவின் இன்றைய குடிமக்களைப் பாதுகாக்கும் கடமையை உருவாக்கியுள்ளது" என்று புடின் கூறியதாக ராய்ட்டர்ஸ் அறிவித்தது. மரியுபோலைக் கட்டுப்படுத்துவது புடினை கற்பனையான நோவோரோஷியாவை உருவாக்க வழி வகுக்கும்.

மிகவும் தேவைப்படும் ஒரு வெற்றி

கடைசியாக, வடக்கு உக்ரைன் முழுவதும் நடைபெற்று வரும் போரானது பெரும்பாலும் நிலையானது என்று பிரிட்டிஷ் இராணுவ உளவுத்துறை அறிவித்துள்ளது. மேலும், மரியுபோல் வெற்றி ரஷ்யப் படைகளுக்கு ஒரு பெரிய மன உறுதியை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.

ரஷ்யப் படைகள் வடக்கில் கார்கிவ் மற்றும் தெற்கில் மரியுபோல் திசையில் இருந்து முன்னேறும்போது நாட்டின் கிழக்கில் உக்ரேனியப் படைகளை சுற்றி வளைக்க முயற்சிக்கின்றன என்று இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ரஷ்யாவின் படையெடுப்பை ஒரு 'தோல்வி' என்று கூறியதை தொடர்ந்து வெளியாகியுள்ளது இந்த அறிக்கை. ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக அதன் தூண்டுதலற்ற தாக்குதலை நடத்துவதில் மூன்று அடிப்படை நோக்கங்களை நிறைவேற்ற எண்ணியது: முதலில், உக்ரைனை அடிபணியச் செய்வது; இரண்டாவதாக, ரஷ்ய சக்தி மற்றும் கௌரவத்தை அதிகரிப்பது. மூன்றாவது, மேற்குலகைப் பிரித்து பலவீனப்படுத்துவது. ரஷ்யா இதுவரை வெளிப்படையாக மூன்று நோக்கங்களையும் நிறைவேற்றத் தவறிவிட்டது. உண்மையில், எதிர்மாறாக சாதித்துள்ளது என்று சல்லிவன் கூறினார்.

2014 இல் ரஷ்ய துருப்புக்களை விரட்டியடித்த அஸோவ் படைப்பிரிவின் தலைமையகமாகும் மரியுபோல். இருப்பினும் அஸோவ் போராளிகள் நவ-நாஜி மற்றும் தீவிர வலதுசாரிக் கருத்துக்களைக் கொண்டதாக அறியப்பட்டவர்கள். 2014 இல் தேசிய காவலில் இக்குழு இணைக்கப்பட்டது, அஸோவ் பிரிவினர் ஒரு நேஷனல் கார்ப்ஸ் என்ற ஒரு அரசியல் கட்சியைக் கொண்டுள்ளனர். தீவிரவாத வன்முறை குற்றம் சாட்டப்பட்ட நேஷனல் மிலிஷியா என்ற ஒரு துணை ராணுவக் குழுவையும் இது கொண்டுள்ளது.

இத்தகைய நவ-நாஜி குழுக்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை உக்ரைனில் மேற்கொள்ள வேண்டும் என்று புடின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மரியுபோலில் ரஷ்யா வெற்றி பெற்றால், அது அவரின் கூற்றை நிரூபிக்க போதுமானதாக இருக்கும். ஆனாலும் கூட உக்ரைன் பாதுகாப்பு படையில் அஸோவ் பிரிவினரின் பங்களிப்பு மிகவும் குறைவானது தான். சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான ஸ்டான்போர்டின் மையம் 2019ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி, அஸோவ் படைப்பிரிவு 1,500 உறுப்பினர்களையும், 1,000 உறுப்பினர்களையும் தேசிய இராணுவத்திலும் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment