/tamil-ie/media/media_files/uploads/2021/08/mumbai-3.jpg)
Vallabh Ozarkar
naming of new Mumbai airport after Bal Thackeray : நவி மும்பையில் உருவாகி வரும் புதிய சர்வதேச விமான நிலையத்திற்கு சிவசேனா கட்சியின் மறைந்த தலைவர் பால் தாக்கரேவின் பெயரை வைக்க முன்மொழியப்பட்ட சிட்கோவின் அறிவிப்பிற்கு எதிராக நவி மும்பை, ராய்காட், தானே மற்றும் பல்கர் ஆகிய மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பலரும் இந்த சர்வதேச விமான நிலையத்திற்கு உள்ளூர் தலைவர் டி.பி. பாட்டீல் பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
நவி மும்பையில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் இதற்கு எதிராக ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?
சிவசேனா நிறுவனர் பாலாசாஹேப் தாக்கரேவின் பெயர் விமான நிலையத்திற்கு சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மகாராஷ்ட்ராவின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, விமான நிலையத்திற்கு, மகாராஷ்ட்ர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் தந்தை பால் தாக்கரேவின் பெயர் சூட்டப்பட முன்மொழிய வேண்டும் என்று சிட்கோவிற்கு கடிதம் எழுதினார். சிட்கோ அந்த கடிதத்தை பின்பற்றி பெயரை பரிந்துரை செய்துள்ளது.
இந்த க்ரீன்ஃபீல்ட் விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் துவங்குவதற்கு முன்பில் இருந்தே, இந்த விமான நிலையத்திற்கு உள்ளூர் தலைவர் டி.பி. பாட்டீலின் பெயர் வைக்கப்படும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். இது தற்போதைய அரசுக்கும் தெரியும். ஆனாலும், உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்காமல் தற்போது பால் தாக்கரேவின் பெயரை விமான நிலையத்திற்கு வைக்க அரசு முடிவு மேற்கொண்டுள்ளது என்று உள்ளூர்வாசிகள் மற்றும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.
இந்த முடிவு ராய்காட் மற்றும் தானே மக்களை ஆத்திரம் அடைய வைத்துள்ளது. தற்போது போராட்டக்காரர்களால் உருவாக்கப்பட்டுள்ள நவி மும்பை விமான நிலைய அனைத்துக் கட்சி செயல்பாட்டு குழு, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் க்ரீன்ஃபீல்ட் விமான நிலைய வேலைகள் முடக்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க : ஓணம் பண்டிகைக்காக தளர்த்தப்பட்ட ஊரடங்கு; கேரளாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று
யார் அந்த டி.பி. பாட்டீல்?
தின்கர் பாலு பாட்டீல் என்று கூறப்படும் டி.பி. பாட்டீல் ராய்காட் மாவட்டத்தில் உள்ள உரன் தாலுக்காவில் இருக்கும் ஜசய் என்ற கிராமத்தில் பிறந்தார். அவர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் (PWP) கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் 1951ம் ஆண்டு எல்.எல்.பி. படித்து முடித்தார். ஒரு வருடம் கழித்து கொலபா மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றார். 1957 முதல் 1980 வரையில் 5 முறை பான்வெல் தொகுதியின் எம்.எல்.ஏவாக பணியாற்றினார். கொலபாவின் மக்களவை உறுப்பினராக 1977 முதல் 1984 வரை பணியாற்றினார். 1972-77 மற்றும் 1982-83 ஆகிய காலகட்டங்களில் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார். 1975ம் ஆண்டில் எமெர்ஜென்சிக்கு எதிராக பேசிய அவர் பிறகு கைது செய்யப்பட்டார்.
மக்கள் அவரை ஏன் இவ்வளவு உயர்வாக கருதுகிறார்கள்?
70 மற்றும் 80களில் சிட்கோ நிலத்தை கையகப்படுத்தியபோது பன்வெல் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்காக பாட்டீல் பல போராட்டங்களை நடத்தினார். 1984 இல் நடந்த ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தில், நான்கு விவசாயிகள் இறந்தனர். இது இறுதியில் மாநில விவசாயிகளுக்கு 12.5 சதவிகிதம் வளர்ந்த நிலத் திட்டத்தை கொண்டுவர கட்டாயப்படுத்தியது, இன்றைய நிலவரப்படி, இது மாநிலம் முழுவதும் பொருந்தும். ஜேஎன்பிடி உரான் கிராம மக்களின் நிலத்தை கையகப்படுத்திய போது 86 வயதில் ஆம்புலன்ஸில் உட்கார்ந்து போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். 2012ல் வயது முதிர்வு காரணமாக பாட்டீல் 87 வயதில் இறந்தார்.
இந்த பகுதியில் எங்கெல்லாம் விவசாயிகளுக்கு கவலை அளிக்கும் வகையில் பிரச்சனைகள் வருகிறதோ அங்கெல்லாம் பாட்டீல் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்துவார். பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அரசுக்கு முன்பு அவர் போராட்டம் நடத்துவார். அவரால் ஆயிரக்கணக்கான நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நீதி மற்றும் அவர்களின் உரிமைகள் கிடைத்துள்ளன, எனவே அவர் மிகப் பெரிய தலைவராக அறியப்பட்டார். அவர் மக்களின் நலனைப் பற்றி மட்டுமே சிந்திப்பார், மேலும் அவர்களுக்கு எந்த அநீதியையும் அனுமதிக்க மாட்டார், ”என்று நவி மும்பை விமான நிலைய அனைத்துக் கட்சி நடவடிக்கைக் குழுவின் தலைவர் தஷ்ரத் பாட்டீல் கூறினார்.
நில உரிமையாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இப்பகுதியில் உள்ள பிற சமூகங்களுக்கு உரிமைகளை வழங்குவதற்காக அவர் தனது முழு வாழ்க்கையையும் தியாகம் செய்தார். விமான நிலைய திட்டம் இப்போது விமான நிலையம் கட்டப்படும் நிலத்தில் பணியாற்றிய தலைவருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமானது என்று அவர் கூறினார். விவசாயிகள், நில உரிமையாளர்கள் தவிர்த்து, பாட்டீல் ஓ.பி.சி. மக்களின் நலனுக்காகவும் போராட்டம் நடத்தினார்.
விமான நிலையம் இருக்கும் பகுதியில் உள்ள விவசாயிகளின் நலன் மற்றும் சீர்திருத்தங்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய மறைந்த டிபி பாட்டீலுக்கு, விமான நிலையம் கட்டப்பட்டு வரும் நவி மும்பை அல்லது ராய்கட் மாவட்டத்தில் இதுவரை எந்த பெரிய திட்டமும் அர்ப்பணிக்கப்படவில்லை. ஏற்கனவே சம்ருதி நெடுஞ்சாலைக்கு பால் தாக்கரேவின் பெயர் வழங்கப்பட்டுள்ளது. எனவே விமான நிலையத்திற்கு பாட்டீலின் பெயர் சூட்டப்பட்டது பொருத்தமாக இருக்கும். உள்ளூர் மக்களின் கோரிக்கைகளை அரசு புறக்கணிக்கக்கூடாது என்று பாஜகவின் எம்.எல்.ஏ. பிரசாந்த் தாக்கூர் கூறினார்.
நவி மும்பை விமான நிலையம் எங்கே கட்டப்பட்டு வருகிறது?
நவி மும்பை சர்வதேச விமான நிலையம் உலகின் மிகப்பெரிய க்ரீன்ஃபீல்ட் விமான நிலையமாக அமைய உள்ளது. பன்வெல் பகுதியில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ட்டுமானம் தாமதமானது மற்றும் அதன் 2019 காலக்கெடுவை தவறவிட்டது. இந்த விமான நிலையம் மும்பையில் இருக்கும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கமாக கருதப்படுகிறது மற்றும் அந்த விமான நிலையத்தின் நெரிசல்களைக் குறைக்க திட்டமிடப்பட்டு இது உருவாக்கப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.