நோயாளிகளின் சுகாதாரப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கி, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார கணக்கு (ABHA ID – Ayushman Bharat Digital Health Account ID) உடன் இணைக்கும் டிஜிட்டல் ஹெல்த் இன்சென்டிவ் திட்டத்திற்கு (DHIS – Digital Health Incentive Scheme) மத்திய அரசு ஓராண்டு நீட்டிப்பு வழங்கியுள்ளது. ஜனவரி 1, 2023 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், இப்போது ஜூன் 30, 2025 வரை அமலில் இருக்கும். மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்ட விவரங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து மத்திய அரசு கேட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள், நோய் கண்டறியும் ஆய்வகங்கள் மற்றும் மருந்தகங்களுக்கு, ஒரு மாதத்திற்கு 100 பரிவர்த்தனைகளின் வரம்புக்கு மேல், டிஜிட்டல் மயமாக்கும் ஒவ்வொரு கூடுதல் பதிவிற்கும் ரூ.20 வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் டிஜிட்டல் சுகாதார பதிவுகளை உருவாக்கும் டிஜிட்டல் தீர்வு நிறுவனங்கள் (DSCs) ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். இதன் கீழ், ஒவ்வொரு மருத்துவ நிறுவனம் அல்லது டிஜிட்டல் தீர்வு நிறுவனமும் ரூ.4 கோடி வரை ஊக்கத்தொகையைப் பெறலாம்.
திட்டம் ஏன் நீட்டிக்கப்பட்டது?
டிஜிட்டல் ஹெல்த் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் ஆரோக்கியத்தை பின்பற்றுவதற்கு சுகாதார வழங்குநர்களுக்கு ஊக்கமளிப்பதற்கும் ஜனவரி 1, 2023 அன்று தேசிய சுகாதார ஆணையத்தால் (NHA) இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 2023ல் இருக்கும் திட்டத்தில் குறைக்கப்பட்ட பரிவர்த்தனை வரம்புகள் போன்ற சில தளர்வுகளை தேசிய சுகாதார ஆணையம் கொண்டு வந்துள்ளது. இது மருத்துவமனையின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (HMIS) மற்றும் ஆய்வக மேலாண்மை தகவல் அமைப்பு (LMIS) போன்ற டிஜிட்டல் சுகாதார தீர்வுகளை வழங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது, மேலும் சரியான மென்பொருளை மலிவு விலையில் கிடைக்கச் செய்கிறது.
எக்ஸ் தளத்தில் தேசிய சுகாதார ஆணையத்தால் பகிரப்பட்ட புதுப்பிப்பின்படி, இந்தத் திட்டம் காட்டிய நல்ல முடிவுகளைக் கருத்தில் கொண்டு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
"இந்த நீட்டிப்பு சுகாதார வசதிகளை அவற்றின் செயல்பாடுகளுக்கு அவசியமான டிஜிட்டல் முன்நிபந்தனைகளைத் தழுவுவதில் மேலும் ஊக்கமளிக்கும்" என்று எக்ஸ் பதிவு கூறுகிறது.
மருத்துவமனைகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
மருத்துவமனைகள் தங்கள் வசதிகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான செலவினங்களைத் திருப்பிச் செலுத்த இந்தத் திட்டம் உதவுகிறது. இந்த செலவினம், மருத்துவமனைகள் டிஜிட்டல் ஆரோக்கியத்திற்கு மாறுவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க சிக்கலாக அடிக்கடி தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளை நிறுவ வேண்டும், இணைய இணைப்பை வாங்க வேண்டும் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுக்கு மென்பொருள் (HMIS/LMIS) வேண்டும். நேரடி முறையிலிருந்து டிஜிட்டலுக்குச் செல்வதில் செயல்முறை மாற்றமும் உள்ளது. இத்திட்டம் யு.பி.ஐ (UPI) வசதியை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் ஊக்கத்தொகைகளின் வரிசையில் உள்ளது.
எத்தனை மருத்துவமனைகள் மற்றும் டிஜிட்டல் சுகாதார நிறுவனங்கள் ஊக்கத்தொகையைப் பெற்றுள்ளன?
பொது தளத்தின் படி, 1,085 தனியார் மற்றும் 36 தனியார் நிறுவனங்கள் பதிவு செய்துள்ள 41 டி.எஸ்.சிகள் உட்பட 4,005 சுகாதார வசதிகள், இந்த திட்டத்தில் ஊக்கத்தொகையைப் பெற்றுள்ளன. 83 தனியார் சுகாதார வசதிகள் உட்பட 584 சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளும், 10 தனியார் நிறுவனங்கள் உட்பட 12 டி.எஸ்.சி.,க்களும் இந்தத் திட்டத்தைப் பெற்றுள்ளன என்று இந்தத் திட்டத்தைக் கவனிக்கும் தேசிய சுகாதார ஆணைய மூத்த அதிகாரி தெரிவித்தார்.
சுகாதார வசதிகளுக்கு ரூ.24.91 கோடி (பொது வசதிகளுக்கு ரூ. 24.24 கோடி, தனியார் வசதிகளுக்கு ரூ. 66.88 லட்சம்), டி.எஸ்.சி.,க்கு ரூ.9.59 கோடி (பொது டி.எஸ்.சி.,களுக்கு ரூ.6.34 கோடி, தனியார் டி.எஸ்.சி.,களுக்கு ரூ.3.25 கோடி) என மொத்தம் ரூ.34.5 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. பொது டி.எஸ்.சி.,களில் தேசிய தகவல் மையம் (NIC) மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு eHospital மற்றும் eSushrut தீர்வுகளை வழங்கும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) போன்ற நிறுவனங்கள் அடங்கும்.
நோயாளிகளுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கும்?
டி.ஹெச்.ஐ.எஸ் சிகிச்சை வழங்குநர்களை டிஜிட்டல் மயமாக்குகிறது, இதன் மூலம் சிறந்த சுகாதார சேவைகள் மற்றும் நோயாளிகளுக்கு அதிக வசதியை வழங்குகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதன் மூலம், நோயாளியின் காத்திருப்பு நேரம் குறைக்கப்படுகிறது. நோயாளிகள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து விரைவான வெளி நோயாளிகள் (OPD) பதிவுகளைப் பெற முடியும். அவர்கள் சிகிச்சை வழங்குநர்களுடன் தங்கள் உடல்நலப் பதிவுகளைப் பாதுகாப்பாகப் பார்க்கலாம், அணுகலாம் மற்றும் பகிர்ந்து கொள்ளலாம்.
இத்திட்டம் இல்லாவிட்டால், மருத்துவமனைகள் டிஜிட்டல் மயமாக்கல் செலவை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க வாய்ப்புள்ளது.
டிஜிட்டல் பதிவுகள் பராமரிக்கப்படுவதால், நோயாளிகள் பதிவேடுகளை இழப்பதால் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான சோதனைகளைச் செய்வது குறைகிறது, குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் நோயாளிகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு பயணம் செய்கிறார்கள்.
ABHA ஐடி என்றால் என்ன, அதன் நோக்கம் என்ன?
ABHA ஐடி என்பது மக்களுக்கான தனித்துவமான அடையாளமாகும், ஆதார் ஐடியைப் போலவே, இது ஒருவரை தங்கள் மருத்துவப் பதிவுகளை டிஜிட்டல் முறையில் சேமித்து பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. இதுவரை, சுமார் 64 கோடி ABHA ஐடிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐடி உருவாக்கப்பட்டவுடன், டிஜிட்டல் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட மையங்களில் நோயாளி ஒரு சுகாதார சேவையைப் பெறும் போதெல்லாம் அவர்களின் எல்லா பதிவுகளும் அதனுடன் இணைக்கப்படும். மருத்துவரின் பரிந்துரைகள், நோய் கண்டறிதல் சோதனை முடிவுகள் போன்ற சுகாதாரப் பதிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கவும், அணுகவும், பகிரவும் இந்த ஐ.டி பயன்படுத்தப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.