முருங்கையில் இல்லாத பயன்களே இல்லை. அப்படிப்பட்ட முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் முருங்கை பிசினின் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
முருங்கை பிசின் சிறுநீர் நன்கு வெளியேறவும், காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை சரி செய்யவும் சளி இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாகும்.
சளி, இருமல்: சளி இருமலுக்கு முருங்கை பிசின் சிறந்த அருமருந்தாகும். இதனை எப்படி சாப்பிடலாம் என்று பார்ப்போம்.
1. முருங்கை பிசினை உடைத்து அதனை நெய்யில் வறுத்து பவுடர் செய்து வைத்துக் தினமும் பால் மற்றும் வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
2. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முருங்கை பிசினை உடைத்து, அதனை தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு முருங்கை பிசினை கஷாயமாக குடிக்கலாம்.
3. பாலில் முருங்கை பிசினை கலந்து நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சுண்டக் காய்ச்சி குடிக்கலாம். இப்படி எல்லாம் சாப்பிடுவதன் மூலம் சளி, இருமல் பிரச்சனை மட்டும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
முருங்கை பிசினின் மேலும் சில பலன்கள் பற்றி பார்ப்போம்:
நோய் எதிர்ப்பு சக்தி: முருங்கை பிசினில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இதனை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். இதன் மூலம் பருவகால தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
செரிமான ஆரோக்கியம்: முருங்கை பிசினில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தூண்டும். முருங்கை பிசினை பொடி செய்து அதனை சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க செரிமானம் மேம்படுத்தப்படும்.
வாய்வுத் தொல்லை, தலைவலி: வாய்வுத் தொந்தரவு, அடிக்கடி தலைவலி வருவது போன்றவற்றை சரி செய்யவும் முருங்கை பிசின் உதவும். ஒரு ஸ்பூன் முருங்கை பிசின் பொடியை வெந்நீரில் கலந்து அருந்துவதன் மூலம் வாயு, தலைவலி பிரச்சனை குணமாகும்.
நீரிழிவு: சர்க்கரை நோயாளிகளும் முருங்கை பிசின் சாப்பிடலாம். இதனால் உடலில் சர்க்கரை அளவில் நல்ல மாற்றத்தை காணலாம்.
முகம் பொலிவு : ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, முருங்கை பிசினை அழகுக்காகவும் பயன்படுத்தலாம். முருங்கை பிசினை தூளாக இடித்து பாலில் கலந்து அதனுடன் கற்கண்டு சேர்த்து குடிப்பதால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி முகமும் பொலிவுடன் காணப்படும்.
தினமும் முருங்கை பிசினை ஒரு கிராம் அளவிற்கு தண்ணீர், நெய்,தேன் ஏதோ ஒன்றில் கலந்து சாப்பிட உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களில் இருந்து விடுபட முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“