பசலைக் கீரையை விட 2 மடங்கு கால்சியம்... வலுவான எலும்புக்கும் இந்தக் காய் முக்கியம் மக்களே!
ரத்தச் சர்க்கரையை கட்டுப்பாடு முதல் புற்றுநோய் தடுப்பு வரை; பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிட்டுள்ளார் டாக்டர் கார்த்திகேயன்
நம்மில் பெரும்பாலானோருக்கு பிடிக்காத காய்களில் ஒன்று பாகற்காய். குழந்தைகள் தொடக் கூட மாட்டார்கள். ஏனெனில் பாகற்காயின் கசப்பு பெரும்பாலானோருக்கு பிடிப்பதில்லை. அதேநேரம் இந்த கசப்பான பாகற்காய் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
Advertisment
இந்தநிலையில், டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் வீடியோவில் பாகற்காயின் நன்மைகளையும், யார் சாப்பிடக் கூடாது என்பதையும் விளக்கியுள்ளார்.
வீடியோவின்படி, கண்களுக்கும் தோலுக்கும் தேவையான பீட்டா கரோட்டின் ப்ரக்கோலியை விட இருமடங்கு அதிகமாக பாகற்காயில் உள்ளது. கீரைகளில் அதிக கால்சியம் சத்துக்களைக் கொண்டுள்ள பசலைக் கீரையை விட இரண்டு மடங்கு அதிகமான கால்சியத்தை பாகற்காய் கொண்டுள்ளது. கால்சியம் சத்து எலும்புகளின் வலிமைக்கு தேவையானது.
பொட்டாசியம் வாழைப்பழத்தில் அதிகமாக இருக்கும். ஆனால் வாழைப்பழத்தை இரு மடங்கு அதிகமாக பொட்டாசியம் சத்து பாகற்காயில் உள்ளது. இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் பாகற்காய் பெரிய பங்கு வகிக்கிறது.
மேலும் 100 கிராம் பாகற்காயில் 20 கலோரிகளே உள்ளன. மாவுச்சத்து 4 கிராம், நார்ச்சத்து 2 கிராம் அளவில் உள்ளது. ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் சி ஒரு பாகற்காயில் கிடைத்து விடுகிறது.
பாகற்காய் புற்றுநோய் வருவதை தடுக்கவும், புற்றுநோயை எதிர்த்து போராடவும் உதவுகிறது. கலோரிகள் குறைவாக இருப்பதால் எடைக்குறைப்புக்கு உதவுகிறது.
அதேநேரம் ஒரே நாளில் அதிக அளவு பாகற்காய் சாப்பிடக் கூடாது. 50 கிராம் அளவில் எடுத்துக் கொள்ளலாம். அதிக அளவில் எடுத்தால் அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மிகக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும், பெரும்பாலும் தவிர்த்து விடுவது நல்லது. ரத்தச் சர்க்கரையை கட்டுபடுத்தும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“