நம் உணவுகளில் சுவைக்காகவும், நறுமணத்திற்காகவும் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கும் பயன் அளிக்கிறது என்றால், அது அருமையான விஷயம் அல்லவா? அத்தகைய அற்புதமான மசாலாப் பொருளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் பற்றி இப்போது பார்ப்போம்.
உலகம் முழுக்க சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சர்க்கரை நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க கடுமையாக போராடி வருகின்றனர். சில எளிதாக குறைந்தாலும், சிலர் கடுமையாக போராட வேண்டியுள்ளது.
நீரிழிவு நோயாளிக்கு இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் பெரும்பங்கு ஆற்றி வரும் நிலையில், இயற்கையாகவே கிடைக்கும் சில எளிய உணவுப் பொருட்களும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன. கருஞ்சீரகம், வெந்தயம், நாவல் பழ கொட்டைகள் போன்றவை இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுபதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுதவிர மற்றுமொரு மசாலாப் பொருளும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அது நம் உணவில் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் ‘லவங்கப் பட்டை’ தான்.
உணவிற்கு சுவையையும், நறுமணத்தையும் தரும் லவங்கப்பட்டை அற்புதமான மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. லவங்கப்பட்டை கிருமிகளை நீக்கம் செய்யவும், வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. இதில் ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்துள்ளன. லவங்கப் பட்டை சளி, காய்ச்சல், வயிற்று வலி, செரிமான கோளாறு, வாய்குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.
லவங்கப் பட்டையில் உள்ள வேதிப்பொருட்கள் கணையத்தில் உள்ள ஆல்பா அமைலேஸ் மற்றும் குடலில் உள்ள ஆல்பா குளுக்கோஸிடேஸ் ஆகிய நொதிகளின் செயல்பாட்டை தடுப்பதன் மூலமாகவும், உடலில் குளுக்கோஸ் உட்கிரகித்தலை அதிகரிப்பதன் மூலமாகவும், கணையத்தில் இன்சுலின் சுரப்பை தூண்டுவதன் மூலமாகவும் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனவே சர்க்கரை நோயாளிகள் இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அதேநேரம் இதனை தேநீர் செய்து தினந்தோறும் பருகலாம்.
லவங்கப்பட்டை தேநீர் செய்வது எப்படி?
தினமும் நம்முடைய உணவில் லவங்கப்பட்டை சேர்த்துக் கொள்வது சற்றுக் கடினம். அதேநேரம் நாம் தினமும் தேநீர் அருந்துவோம். இந்த தேநீரை லவங்கப்பட்டை சேர்ந்த ஆரோக்கிய பானமாக மாற்றினால், தினமும் பருகி அதன் நன்மைகளைப் பெறலாம் அல்லவா?
எனவே சூடான நீரில் லவங்கப்பட்டை, சீரகம், வெந்தயம், துளசி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து, இளஞ்சூட்டில் தேநீராக தினமும் பருகுங்கள். இப்படி தினமும் லவங்கப்பட்டை தேநீரைப் பருகி வந்தால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு குறைவதோடு, உடலில் உள்ள கொழுப்புகளும் கரையும்.
மேலே உள்ள கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. உங்கள் உடல்நலம் அல்லது மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரின் வழிகாட்டுதலைப் பெறவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil