தினமும் காலையில் 2 கிராம்பு... இப்படி சாப்பிட்டால் நிறைய நன்மை இருக்கு! | Indian Express Tamil

தினமும் காலையில் 2 கிராம்பு… இப்படி சாப்பிட்டால் நிறைய நன்மை இருக்கு!

நம் சமையலில் கிராம்பு முக்கிய பொருளாக உள்ளது. அந்த வகையில், தினமும் காலை 2 கிராம்பு சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி உள்பட பல நன்மைகள் தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தினமும் காலையில் 2 கிராம்பு… இப்படி சாப்பிட்டால் நிறைய நன்மை இருக்கு!
How The clove Is Effective In Managing Diabetes in tamil

கிராம்பு முக்கிய சமையல் பொருளாக மட்டுமல்ல, ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. சமையலில் மசாலா வகைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவுக்கு தனி சுவை தருகிறது. அந்த கிராம்பை காலையில் சாப்பிடுவது பல நன்மைகள் தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வெறுமனே சாப்பிட முடியவில்லை என்றால் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி

கிராம்பில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. நோய் தொற்றுக்கு எதிராக போராடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

செரிமானம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, செரிமான மண்டலம் சீராக இயங்க வேண்டும். கிராம்பு அதை செய்ய வல்லது. செரிமான பிரச்சினைகளை போக்க உதவும். செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கிறது. மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது. கிராம்பில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

கல்லீரல் ஆரோக்கியம்

கல்லீரல் உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளை மெட்டபாலிசம் செய்கிறது. எனவே கல்லீரலின் செயல்பாட்டை ஆரோக்கியமாக்க, தினமும் கிராம்பு சாப்பிடுவது நன்மை பயக்கும். கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

பல்லுக்கு உறுதி

நம் முன்னோர்கள் இதைக் அடிக்கடி கூறுவர். பற்களுக்கும் கிராம்புக்கும் தொடர்புண்டு. கிராம்பு உண்பது பல் வலியைக் குறைக்கிறது. கிராம்பு பற்களில் உண்டாகும் அசௌகரியத்தை சரி செய்ய உதவுகிறது. பல் வலி, ஈறுகளில் வலி இருந்தாலும் அந்த இடத்தில் கிராம்பு வைத்தால் வலி போகும் என்று கூறுவர்.

வாய் கிருமிகளை நீக்கும்

காலையில் 2 கிராம்புகளை வாயில் போட்டு அப்படியே வைத்திருந்தால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நீக்கும். ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வாய் சுகாதாரமாக இருக்கும். கிராம்பு மற்றும் துளசி பயன்படுத்தி வீட்டில் மவுத்வாஷ் செய்து பயன்படுத்தலாம்.

எலும்புகளுக்கு வலிமை

கிராம்பில் ஃபிளாவனாய்டுகள், மாங்கனீஸ் மற்றும் யூஜெனோல் உள்ளன. அவை எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. கிராம்பு உட்கொள்வது எலும்புக்கு உறுதி அளிக்கிறது.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

சர்க்கரை நோய்க்கு கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்குவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை சமநிலை செய்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Daily 2 cloves in morning know about the benefits