மாரடைப்பு, திடீர் மாரடைப்பு பாதிப்புகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. அதேநேரம் நீரிழிவு நோயாளிகள் இரண்டு மடங்கு ஆபத்தில் உள்ளனர். மாரடைப்பு அபாயத்தைத் தடுக்க நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ள வேண்டிய ஐந்து மூலிகைகள் பற்றி ஆயுர்வேத நிபுணர் விளக்குகிறார். வாருங்கள் தெரிந்துக் கொள்வோம்.
மாரடைப்பு மற்றும் திடீர் மாரடைப்பு பாதிப்புகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன, மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்தும் இளம் வயதினரும் கூட சில நேரங்களில் எந்த அறிகுறிகளும் இல்லாத மறைக்கப்பட்ட இதய பிரச்சினைகளால் அவதியுறுகின்றனர். உட்கார்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது, மேலும் கொரோனா இதயங்களை பலவீனப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்சிதை மாற்றக் கோளாறால் பாதிக்கப்படாதவர்களுடன் ஒப்பிடும்போது நீரிழிவு நோயாளிகள் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் இருமடங்கு உள்ளனர்.
இதையும் படியுங்கள்: ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் ஒரு கிளாஸ்… ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க இதைப் பண்ணுங்க!
நீரிழிவு நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்போது, இதய ஆரோக்கியம் மோசமடைகிறது மற்றும் திடீர் இதய நிகழ்வுகளுக்கு ஒருவர் எளிதில் பாதிக்கப்படுகிறார். காலப்போக்கில் உயர் இரத்த சர்க்கரை இரத்த நாளங்கள் மற்றும் இதய நரம்புகளை சேதப்படுத்தும். நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தம் போன்ற நோயுடன் அடிக்கடி ஏற்படும் பிற சிக்கல்களும் உள்ளன, இது இதய செயல்பாட்டை மேலும் பாதிக்கும். எனவே, உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் மற்றும் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெரும்பாலும் கட்டுப்பாடில்லாமல் இருந்தால், உங்கள் இதயம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, மேலும் நீங்கள் சரியான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது முக்கியம். ஆரோக்கியமான உணவு, சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் மன அழுத்தத்தை குறைப்பது ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது மட்டுமல்லாமல் உகந்த இதய ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும்.
மாரடைப்பு வராமல் தடுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கான மூலிகைகள்
நீரிழிவு நோயாளிகள், குறிப்பாக மூத்த குடிமக்கள் நீரிழிவு மருந்துகளை உட்கொள்வதால், வளர்சிதை மாற்றம் மற்றும் கல்லீரல் செயல்பாடு குறைவதால் இதய நோய்கள் ஏற்படுகிறது (அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் இறுதியில் மாரடைப்புக்கு வழிவகுக்கும்) என்று ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்சா பவ்சர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதியுள்ளார்.
இஞ்சி
புதிதாக அரைக்கப்பட்ட உலர் இஞ்சி தூள் சிறந்த இதய பாதுகாப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு அற்புதமானது. இது ஒட்டுமொத்த வீக்கத்தையும் குறைக்கிறது மற்றும் இதயத்திற்கு நல்லது.
எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்
வெதுவெதுப்பான நீரில் ஒரு நாளைக்கு ஒரு முறை உணவுக்கு முன் அரை தேக்கரண்டி சாப்பிடலாம்.
கருப்பு மிளகு
எளிதில் கிடைக்கக்கூடிய இந்த மூலிகையானது இன்சுலின் உணர்திறன், செரிமானம் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்கவும் உதவுகிறது, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு மாரடைப்பைத் தடுக்க உதவுகிறது.
எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்
தினமும் காலையில் 1 கருப்பு மிளகு எடுத்துக் கொள்ளலாம்.
ஏலக்காய்
இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது மற்றும் இனிப்பு உணவுகளுக்கான பசியைக் குறைப்பதன் மூலம் சர்க்கரை அளவை மேம்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் அனுபவிக்கும் அதிகப்படியான தாகத்தை நீக்குகிறது.
எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்
இதை டீயில் எடுத்துக் கொள்ளலாம் அல்லது 1 ஏலக்காயை பொடி செய்து சாப்பிட்டு 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குடிக்கலாம்.
மூக்கிரட்டை கீரை (புனர்ணவா)
இது சிறந்த டையூரிடிக் ஆகும், இது சர்க்கரை அளவுகள், இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்களுக்கும் நல்லது மற்றும் நீரிழிவு ரெட்டினோபதி மற்றும் நெஃப்ரோபதியைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இது வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது.
எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?
தினமும் வெறும் வயிற்றில் 2-5 கிராம் மூக்கிரட்டை சாப்பிடலாம்.
அர்ஜுனா மரப் பட்டை (வெண் மருத மரத்தின் பட்டை)
இதய நோய்களைத் தடுப்பதற்கும் அதன் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் இது சிறந்த மூலிகையாகும். இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் முதல் டாக்ரிக்கார்டியா வரை அனைத்து வகையான இதய பிரச்சனைகளுக்கும் நல்லது.
எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்
நீரிழிவு அல்லது இதய நோய் உள்ள ஒவ்வொரு நபரும் தூங்கும் போது தேநீராக உட்கொள்ள வேண்டும்.
“நீரிழிவு, உடல் பருமன் (மற்றும் அதிக சர்க்கரை அளவு), இன்சுலின் எதிர்ப்பு, இதய நோய்கள் உள்ள நோயாளிகளுக்கு இந்த மூலிகைகளை வழக்கமாகச் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மூத்த குடிமக்களின் இதய ஆரோக்கியத்திற்கு இந்த மூலிகைகள் சிறந்தவை” என டாக்டர் பவ்சர் கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil