/indian-express-tamil/media/media_files/2025/05/27/JSTZMIqy8jV3n24yxwJx.jpg)
தூக்கமின்மை இன்று பலரையும் வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. இதற்கான காரணங்களையும், அதை சரிசெய்வதற்கான எளிய வழிகளையும் மருத்துவர் அக்ஷயன் தெரிவித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம். இது குறித்த தகவல்களை ஹெல்த் கஃபே யூடியூப் சேனலில் அவர் கூறியுள்ளார்.
தூக்கமின்மை பல நோய்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. தூக்கத்தை சரி செய்வதன் மூலம் பல நோய்களைத் தடுக்கலாம். இதற்காக ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் சில எளிய வழிகளை மருத்துவர் அக்ஷயன் பரிந்துரைக்கிறார்.
இரவில் தூங்கும் போது நமக்கு ஏற்படும் தொந்தரவு தரக்கூடிய விஷயங்களை கவனிக்க வேண்டும். இவற்றை சீரமைத்தால் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும். மனரீதியான பிரச்சனைகளே தூக்கமின்மைக்கு முக்கிய காரணம். மனதை அமைதிப்படுத்த தியானம், யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
இரவு படுக்கும் முன் கசகசாவை பாலில் ஊறவைத்து கொதிக்க வைத்து சாப்பிடுவது நல்ல தூக்கத்தை தரும். இது ஒரு பாரம்பரிய வைத்தியம். மேலும், ஜாதிக்காய் பொடியை முக்கால் டீஸ்பூன் அளவிற்கு வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடுவது ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்.
தூங்குவதற்கு முன் 10 முதல் 30 நிமிடம் வரை நடப்பது அல்லது உடற்பயிற்சி செய்வது நல்ல தூக்கத்தை கொடுக்கும். ஆனால் தூங்கப் போவதற்கு சற்று நேரம் முன்னதாகவே உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிறுவயதில் விளையாடியது போல் மாலை நேரங்களில் உடலை இயக்குவது சோர்வை ஏற்படுத்தி நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.
தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மனதையும் உடலையும் அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தை கொடுக்கும். கடந்த கால கவலைகள் மற்றும் எதிர்கால அச்சங்களை நீக்கி விட்டு, அன்றைய நிகழ்வுகளை மட்டும் நினைத்து அமைதியாக படுக்கைக்குச் சென்றால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
சரியான உணவு, உடல் சுத்தம் மற்றும் மன சுத்தம் இருந்தால் தூக்கம் தானாகவே வரும் என்றும், தூக்கமின்மைக்கு தனியாக மருந்து தேவையில்லை என்றும் மருத்துவர் அக்ஷயன் அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.