உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் உணவு வழக்கத்தில் சிறுதானியங்கள் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவர் ஆஷா லெனின் அறிவுறுத்துகிறார். குறிப்பாக, சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் நம் ஆரோக்கியம் மேம்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவையான பொருட்கள்:
சிவப்பு அரிசி,
கருப்பு உளுந்து,
கேப்பை,
வெள்ளை சோளம்,
கம்பு அரிசி,
பாசி பயிறு,
குதிரைவாலி,
சம்பா,
சாமை,
தினை,
கொண்டை கடலை மற்றும்
நெய்
செய்முறை:
அதன்படி, சிவப்பு அரிசி இரண்டு கிளாஸ், கருப்பு உளுந்து முக்கால் கிளாஸ், ஒரு கரண்டி கேப்பை, வெள்ளை சோளம், கம்பு அரிசி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர ஒரு ஸ்பூன் அளவிற்கு பாசி பயிறு, குதிரைவாலி, சம்பா, சாமை, தினை மற்றும் கொண்டை கடலை உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில், சிவப்பு அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக ஊற வைக்க வேண்டும். கேப்பை, வெள்ளை சோளம், கம்பு அரிசி ஆகியவற்றையும் தனியாக ஊற வைக்க வேண்டும். அதன்படி, இவை தோசை பதத்திற்கு ஊறியதும், முதலில் உளுந்தை அரைத்துக் கொள்ளலாம். பின்னர், சிவப்பு அரிசி, கேப்பை, வெள்ளை சோளம், கம்பு அரிசி ஆகியவற்றை தனியாக அரைத்து அதற்கடுத்து ஒன்றாக சேர்க்க வேண்டும். இத்துடன் பாசி பயிறு, குதிரைவாலி, சம்பா, சாமை, தினை மற்றும் கொண்டை கடலை ஆகியவற்றை பொடியாக்கி சேர்க்க வேண்டும்.
இவை தோசை மாவு பதத்திற்கு வந்ததும் சிறிதளவு நெய் சேர்த்து சுட்டு எடுக்கலாம். இந்த சிறுதானிய தோசையை உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தொடங்கி சத்தான உணவு எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.