பெண்களுக்கு டாப் கீரை இதுதான்; வாரம் இத்தனை கிராம் சாப்பிடுங்க: டாக்டர் கார்த்திகேயன்
கீரையில் இருக்கும் மருத்துவ பயன்கள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கீரையை வாரத்திற்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் எனவும், எத்தனை முறை எடுத்துக் கொள்ளலாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குறைந்த விலையில் அதிகப்படியான சத்துகளை கொடுப்பதில் கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. மிக சுலபமாக கிடைத்து விடுவதால் இதன் பயன்கள் குறித்து பலரும் அறிந்திருக்கவில்லை. அந்த வகையில் கீரையை சாப்பிடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் சத்துகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பெண்களின் ஆரோக்கியத்தில் கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.
Advertisment
ஒரு வாரத்திற்கு 500 முதல் 600 கிராம் வரை கீரைகளை உணவாக எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பெண்களைப் பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு கட்டாயம் 100 கிராம் கீரை சாப்பிட வேண்டும். கீரையில் இருந்து நமக்கு தேவையான இரும்புச் சத்து எளிதில் கிடைத்து விடுகிறது.
கீரைகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. அதனால் தான் முட்டை, பால் போன்றவற்றுடன் கீரையை சேர்த்து சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அந்த வகையில், செரிமானத்தை எளிதாக்குவதற்காக இவற்றை தனியாக சாப்பிட வேண்டும் எனக் கூறப்படுகிறது.
பொதுவாகவே இரத்த சோகை வராமல் தடுப்பதில் முருங்கைக் கீரை பெரும் பங்கு வகிக்கிறது. ஏனெனில், இதில் அதிகப்படியான இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. முருங்கைக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி, சி, நார்ச்சத்து போன்றவையும் அதிகளவில் இருக்கிறது.
Advertisment
Advertisements
எனவே, முருங்கைக் கீரையை பெண்கள் வாரத்திற்கு இரண்டு முறை அவசியம் சாப்பிட வேண்டும் என மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார். சரும ஆரோக்கியம், முடி வளர்ச்சி, கண்பார்வை போன்றவற்றையும் முருங்கைக் கீரை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் இரும்புச் சத்து காரணமாக, இரத்த சோகை இருப்பவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை முருங்கைக் கீரையை எடுத்துக் கொள்ளலாம்.
அதிலும், முருங்கைக் கீரையை சூப்பாக வைத்து அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். மிகச் சாதாரணமாக எளிதில் கிடைத்து விடும் முருங்கைக் கீரையில், இந்த அளவிற்கு எண்ணற்ற பயன்கள் இருக்கிறது என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.