வயது ஏற ஏற எலும்பு பிரச்சனை வராம இருக்க இந்தக் கீரை; 100 கிராம் கீரையில் 215 மி.கிராம் கால்சியம் இருக்கு!
அரைக்கீரையில் ஏராளமான கால்சியம் சத்துகள் நிறைந்திருப்பதாக மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். இவை நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முருங்கைக் கீரை, பசலைக் கீரையை போலவே அரைக்கீரையிலும் கால்சியம் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். உதாரணமாக ஒரு கப் அளவிற்கு அரைக்கீரையை எடுத்துக் கொண்டால், அதில் 215 மில்லி கிராம் அளவிற்கு கால்சியம் சத்து நம் உடலுக்கு சேரும் என அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
இவை நம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, வயதான பின்பு எலும்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. கால்சியம் தவிர மற்ற ஏராளமான ஊட்டச்சத்துகளும் இதில் இருக்கிறது. அரைக்கீரையில் இருக்கும் வைட்டமின் ஏ, கண் பார்வை தொடர்பான பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. அதன்படி, கண் புரை, மாலைக் கண் நோய் போன்ற பாதிப்புகளில் இருந்தும் தடுக்கிறது என மருத்துவர் மைதிலி கூறுகிறார்.
இதேபோல், இரும்புச் சத்தும் அரைக்கீரையில் அதிகமாக இருக்கிறது. இவை இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை சீராக வைத்திருக்க உதவி செய்கிறது. இதனால் இரத்த சோகை பாதிப்பையும் தவிர்க்க முடியும். அரைக்கீரையை வேகவைத்து மதிய உணவாக தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். மேலும், கரையும் நார்ச்சத்து மற்றும் கரையாத நார்ச்சத்துகளும் இந்தக் கீரையில் இருக்கிறது.
இதன் மூலம் செரிமான கோளாறுகள் நீங்கி, மலச்சிக்கல் பிரச்சனை கட்டுப்படுத்தப்படுகிறது. வைட்டமின் சி மற்றும் சின்க் ஆகிய முக்கியமான ஊட்டச்சத்துகளும் அரைக்கீரையில் இருக்கிறது. இந்த இரண்டும் உடம்பில் நோய் எதிர்ப்பு தன்மையை பல மடங்கு அதிகரிக்க உதவி செய்யும். இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மெக்னீஷியம் மற்றும் பொட்டாஷியமும் அரைக்கீரையில் இருக்கிறது.
Advertisment
Advertisements
அரைக்கீரை இரண்டு வகைகளில் இருக்கும். ஒன்று சிவப்பு நிறத்திலும், மற்றொன்று பச்சை நிறத்திலும் காணப்படும். அரைக்கீரையை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பும் குறைவு எனக் கூறப்படுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டுமென நினைப்பவர்கள் 10 நாட்களுக்கு ஒரு முறையாவது அரைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார்.
மேலும், அரைக்கீரையை பருப்புடன் சேர்த்து வேகவைத்து சாப்பிடலாம். இதன் மூலம் புரதச் சத்தும் கிடைத்து விடும். நரம்புகளை வலுவடையச் செய்யும் தன்மையும் அரைக்கீரையில் இருக்கிறது. தலைமுடி உதிர்வு பிரச்சனையை விரைவாக சரி செய்யக் கூடிய ஆற்றலும் அரைக்கீரையில் இருக்கிறது.
எனினும், சிறுநீர் பாதையில் கற்கள் இருப்பவர்கள் அரைக்கீரையை தவிர்த்து விடலாம் என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். இதேபோல், இரவு நேரத்திலும் அரைக்கீரையை சாப்பிட வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.