/indian-express-tamil/media/media_files/2025/06/25/gooseberry-uses-2025-06-25-14-29-13.jpg)
விலை உயர்ந்த ஆப்பிள்களுக்கும் மேலான நிறைய ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள நெல்லிக்காயை, 'ஏழைகளின் ஆப்பிள்' என்று அழைப்பதாக மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். நரை, திரை, மூப்பு ஆகிய மூன்று முக்கிய முதுமை அறிகுறிகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கும் ஆற்றல் நெல்லிக்காய்க்கு இருப்பதாக அவர் வலியுறுத்துகிறார்.
இது தவிர, தீவிரமான மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நெல்லிக்காய் ஒரு அருமருந்தாக பயன்படுகிறது என்கிறார் மருத்துவர் ஷர்மிகா. தினமும் நெல்லிக்காயை உட்கொள்வது செரிமான மண்டலத்தைச் சீராக்கி, சீரான குடல் இயக்கத்திற்கு வழிவகுக்கும்.
நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் எண்ணற்றவை. குறிப்பாக, இது கண் பார்வையை கூர்மையாக்க, முடி வளர்ச்சியை அதிகரிக்க, உடலில் இரும்புச் சத்தை மேம்படுத்த, இரத்த சோகை பாதிப்பை குணப்படுத்த மற்றும் சரும பாதிப்புகளுக்கு தீர்வு அளிக்க என பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கிறது. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த அற்புதமான பலன்களை அளிக்கின்றன. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
தினசரி ஒரு நெல்லிக்காயை அனைவரும் சாப்பிடலாம் என்று மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைக்கிறார். இது உங்கள் அன்றாட வைட்டமின் சி தேவையைப் பூர்த்தி செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இருப்பினும், சில குறிப்பிட்ட உடல்நல பாதிப்புகள் உள்ளவர்கள் நெல்லிக்காயைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீரக கல் பாதிப்பு இருப்பவர்கள், கர்ப்பிணிகள், மாதவிடாய் கோளாறு இருப்பவர்கள் ஆகியோர் நெல்லிக்காய் எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம் என்று மருத்துவர் ஷர்மிகா குறிப்பிட்டுள்ளார். இவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதற்கு முன் தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.