இன்றைய சூழலிலும் கூட இந்தியாவில் 75 சதவீதம் பெண்களுக்கு இரத்த சோகை பாதிப்பு இருப்பதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். தங்களது தினசரி உணவில் இரும்புச் சத்து எடுத்துக் கொள்ளாததன் காரணத்தினால், இவ்வளவு பெண்களுக்கு இரத்த சோகை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார்.
மேலும், இரும்புச் சத்தை மாத்திரை வடிவில் வாங்கி சாப்பிட வேண்டிய நிலைமையில் பலரும் உள்ளனர். ஆனால், தங்களது உணவில் தினசரி கம்பு சேர்த்துக் கொள்வதன் மூலம் தேவையான சத்தை பெண்கள் பெற முடியும் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
தோசை, ரொட்டி, கூழ், சோறு போன்ற ஏதோவொரு வகையில் தினசரி கம்பு எடுத்துக் கொள்வதன் மூலம் இரும்புச் சத்தை பெறலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார். கூடுதலாக, இதன் மூலம் கால்சியம் சத்துகளும் கிடைக்கும். இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த கம்பு பயன்படுத்தி, சுவையான பனியாரம் எப்படி செய்யலாம் என்று இந்த சமையல் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கம்பு - 1 கப்,
பச்சரிசி - அரை கப்,
உளுந்து - அரை கப்,
வெல்லம்,
தேங்காய்,
நெய்.
செய்முறை:
கம்பு, பச்சரிசி, உளுந்து ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர், இவை அனைத்தையும் கெட்டியாக அரைத்துக் கொள்ளலாம். இதையடுத்து, அரைத்து வைத்த மாவை 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.
இதன் பின்னர், புளித்த மாவுடன் உருக்கிய வெல்லம், தேங்காய் துருவல், சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கலாம். இறுதியாக பனியார குழியில் லேசாக நெய் தடவி அதில் மாவு ஊற்றி சுட்டு எடுத்தால், சுவையான கம்பு பனியாரம் தயாராகி விடும்.