/indian-express-tamil/media/media_files/2025/05/07/tgVkcwa9hE6fWUXLy8xj.jpg)
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தூக்கமின்மை. வேலைப்பளு, மன அழுத்தம், ஆரோக்கிய குறைபாடு என பல்வேறு காரணங்களால் இரவில் நிம்மதியாக உறங்க முடியாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு மனிதனின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது ஆழ்ந்த உறக்கம். தூக்கமின்மை ஒரு நோயல்ல. ஆனால், பல நோய்களுக்கு வழிவகுக்கும் ஒரு அறிகுறி என்பதை நாம் உணர வேண்டும்.
அந்த வகையில், நீண்ட கால தூக்கமின்மை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சரியாக உறங்காமல் இருக்கும் போது பகலில் அதிக சோர்வு மற்றும் எதிலும் ஆர்வமில்லாத நிலை ஏற்படும். மேலும், ஞாபக சக்தி குறைவதுடன், எதிலும் கவனம் செலுத்த முடியாத சூழல் உருவாகும்.
தூக்கமின்மையால், காரணமின்றி எரிச்சல் அடைவது மற்றும் அடிக்கடி மனநிலை மாறுவது போன்ற மாற்றங்கள் நம்மிடையே நிகழக் கூடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, தொற்று நோய்கள் எளிதில் தாக்கும். தூக்கமின்மை உடலில் ஹார்மோன் சமநிலையை பாதித்து உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
மேலும், நாள்பட்ட தூக்கமின்மை உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். எனவே, இந்த அளவிற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் தூக்கமின்மையை கசகசா மூலம் சரி செய்ய முடியும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
அதன்படி, இரண்டு ஸ்பூன் கசகசாவை சிறிதளவு தண்ணீரில் சுமார் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். அதன், பின்னர் இதனை மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும். மிக்ஸியில் அரைத்த இந்தக் கலவையை, ஒரு துணியில் வடிகட்டும் போது, அதில் இருந்து பால் வெளியாகும். இந்தப் பாலை இரவு நேரத்தில் ஒரு ஸ்பூன் குடித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
நன்றி - Rehana's Kitchen Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.