கடந்த 50-60 ஆண்டுகளாக நமது காலை உணவு பெரும்பாலும் இட்லி, தோசை, பூரி, பொங்கல், மசால் தோசை, வடை என ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால், இப்போது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அதற்கு என்னமாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எப்படி உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என டாக்டர் சிவராமன் ஹெல்தி தமிழா யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
இட்லி ஒரு மிகச் சிறந்த உணவு. உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், வளரும் குழந்தைகளுக்கு இட்லி ஆகச் சிறந்த உணவு. ஆனால், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு உள்ளவர்கள் தினமும் காலையில் இட்லி சாப்பிடுவது தவறு. இவர்களுக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகள் சிறந்த தேர்வாகும் என கூறுகிறார்.
சென்னையில் நடந்த ஓர் ஆய்வு, எந்த உணவுகளில் கிளைசமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது என்று ஆராய்ந்துள்ளது. கிளைசமிக் இன்டெக்ஸ் என்பது ஒரு உணவு இரத்தத்தில் சர்க்கரையை எவ்வளவு வேகமாகச் சேர்க்கிறது என்பதைக் குறிக்கும். கிளைசமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள உணவுகள் உடலுக்கு நல்லது.
இந்த ஆய்வில், தினை அரிசி, கேள்வரகு, கோதுமை ரவை, கொண்டைக்கடலை, சோள மாவு போன்ற பல உணவுப் பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில், வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் மிகச் சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் புரதச்சத்து அதிகம் உள்ளதுடன், சர்க்கரை வேகமாக இரத்தத்தில் கலப்பதைத் தடுக்கிறது. இரண்டாவதாக, கோதுமை ரவை கிச்சடி அல்லது கோதுமை ரவை உப்புமா சிறந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இந்தியாவின் தலைசிறந்த உணவியல் வல்லுநர்கள் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். உருளைக்கிழங்கு போன்ற அதிக கிளைசமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தானது, ஏனெனில் அவை சர்க்கரையை மிக வேகமாக இரத்தத்தில் சேர்க்கின்றன. எனவே காலை உணவிற்கு ஆரோக்கியமான மாற்று உணவுகள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.
புரதங்கள் நிறைந்த சுண்டல்: குறிப்பாக வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல். கோதுமை ரவை உப்புமா / கிச்சடி. நல்ல காய்கறித் துண்டுகள் (சாலட்). பழ ஸ்மூத்தி அல்லது பழச்சாறுகள். முட்டை: ஆம்லெட் அல்லது வேகவைத்த முட்டை (தினமும் இரண்டு). நிலக்கடலை, பாதாம் பருப்பு போன்ற பருப்பு வகைகள்.
நமது நாட்டில் புரதம் சாப்பிடுவது மிகக் குறைவு, குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு. எனவே, காலை உணவில் புரதச்சத்தை அதிகரிப்பது அவசியம். வாரத்திற்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டும் இட்லி, தோசை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதிலும், வெள்ளை நிற இட்லி, தோசையைத் தவிர்த்து, சத்தான தானியங்களைச் சேர்த்துக் கொள்வது நல்லது என்றார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.